ஆக்கிரமிப்புகளின் பிடியில் யானை வழித்தடங்கள்: நாடு முழுதும் 5 ஆண்டுகளில் யானைகள் தாக்கி 2,392 பேர் பலி- பகுதி சார்ந்த பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வு காணுமா அரசு?

By க.சக்திவேல்

அன்றாடச் செய்திகளில் யானை தாக்கி உயிரிழப்பு என்பதும் ஒன்றாகிவிட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தகவலின்படி யானைகள் தாக்கி கடந்த 2012 ஏப்ரல் முதல் 2017 நவம்பர் வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2,392 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 261 பேர் உயிரிழந்துள்ளனர்.

யானை- மனித மோதல் காரணமாக ஆண்டுக்கு சராசரியாக 100 யானைகள் உயிரிழக்கின்றன. யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.29.62 கோடியும், சேதமடைந்த பயிர்கள், உடைமைகளுக்கு மொத்தம் ரூ.110 கோடியும் அரசு சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல வகைகளில் இழப்பு ஏற்பட்டு வருவது குறித்து வனவிலங்கு உயிரியல் உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:தமிழக வனப் பகுதிகளில் மட்டும் சுமார் 3,000 முதல் 3,500 யானைகள் உள்ளன. கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்பு வரை யானைகள் தாக்கி உயிரிழப்பு என்பதெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வந்தது. ஆனால், கடந்த 17 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து உச்ச நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.

யானை - மனித மோதல்

யானை - மனித மோதல்களுக்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் சொல்ல முடியாது. ஒவ்வொரு பகுதியிலும், பிரச்சினைகள் வெவ்வேறாக உள்ளன. வானம் பார்த்த பூமியாக வனத்தை ஒட்டி இருந்த பல இடங்களை பணக்காரர்கள் வாங்கி அங்கிருந்த விவசாய முறையையே மாற்றி விட்டனர்.

வழித்தடம், வாழ்விடம் துண்டாதல், வனத்தின் பரப்பளவு குறைவு போன்ற பல்வேறு காரணிகள், யானைகளைப் பாதிக்கின்றன. எனவே இந்த பிரச்சினைக்கு ஒரே மாதிரியான தீர்வை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியாது. உதாரணமாக, ஓசூரில் உள்ள பிரச்சினை வால்பாறையில் இல்லை. வால்பாறையில் உள்ள பிரச்சினை கூடலூரில் இல்லை. இந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் தற்காலிக தீர்வுகளால் எந்த பலனும் ஏற்படவில்லை.

நிபுணர் குழு

எனவே, பகுதிசார்ந்த பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வு காண்பது அவசியம். இதற்காக யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருபவர்களை கொண்டு நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் தீர்வுகளைப் பட்டியலிட்டு தொடர்ந்து 10 ஆண்டுகளாவது செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் பயிர், உயிர், உடைமை சேதங்கள் மற்றும் யானைகள் உயிரிழப்பு தவிர்க்கப்படும்.

யானைகள் ஊடுருவலைத் தடுக்க சோலார் மின் வேலிகள், அகழிகள் போன்றவற்றை அமைக்க ஆரம்ப கட்டத்தில் மட்டுமே அரசு நிதி ஒதுக்குகிறது. அதற்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுவதில்லை. இதனால் நாளடைவில் அவை இருந்த சுவடே தெரியாமல் போகின்றன. எனவே, பாதிக்கப்படும் மக்கள், விவசாயிகள் பங்கேற்புடன் அரசு நிதி திரட்டி பராமரிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதற்கு கொள்கை அளவில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

500 - 600 சதுர கிமீ

யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆய்வாளர் டாக்டர் அறிவழகன் கூறும்போது, “ஒரு யானைக்கூட்டம் ஆண்டுக்கு சுமார் 500 முதல் 600 சதுர கிமீ வரை இடம் பெயரும். வன விலங்குகளுக்கான இந்திய அறக்கட்டளை அமைப்பு (டபிள்யுடிஐ) நாடு முழுவதும் 101 வன இணைப்புப் பாதைகளை அண்மையில் அடையாளம் கண்டுள்ளது. யானைகள் காலம் காலமாக வலசை செல்லும் மரபு வழிப் பாதைகள் இவை.

இவற்றில் 28.7 சதவீத இணைப்பு பாதைகள் ஆக்கிரமிப்புகளால் சிக்கியுள்ளன. 66.3 சதவீத பாதைகளுக்குள் சாலைகள் செல்கின்றன. இதுதவிர, பல இணைப்பு பாதைகளில் ரயில்வே வழித்தடங்கள், விவசாய நிலங்கள் உள்ளன. முழுவதும் காடுகளைக் கொண்ட இணைப்பு பாதைகள் கடந்த 2005-ம் ஆண்டு, 24 சதவீதமாக இருந்தது. அதுபோன்ற இணைப்பு பாதைகளின் பரப்பளவு தற்போது வெறும் 12.9 சதவீதமாக சுருங்கிப் போயுள்ளது. எனவே, வேறு வழியின்றி யானைகள் குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன. இதைத் தவிர்க்க வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முன்வர வேண்டும்.

குறையும் புல்வெளி பரப்பு

யானைகள் 90 சதவீதம் புற்களையும், 10 சதவீதம் மட்டுமே இலைகள், பட்டைகளை உணவாக உட்கொள்கின்றன. அழகுக்காக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட அந்நிய செடிகளான லேண்டினா கேமிரா, ஈப்படோரியம், பார்த்தீனியம் ஆகிய புதர்ச் செடிகள், புல்வெளிகளின் மீது படர்ந்ததால் சூரிய வெளிச்சம் பெற முடியாமல் கணிசமான அளவு புல்வெளிகள் அழிந்துபோயின. இதன் காரணமாகவும் உணவு, தண்ணீரைத் தேடி காட்டை விட்டு யானைகள் வெளியேறுகின்றன.

யானைகள் விரும்பி உண்ணும் பயிர்களை, காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் பயிரிடுவதை விவசாயிகள் தவிர்க்கலாம். அதற்கு பதில், சணல், சூரியகாந்தி போன்ற பயிர்களைப் பயிரிடலாம். உயிரிழப்புகள், சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதில் மாற்றுப் பயிர்களை பயிரிடுவோருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க முன்வந்தால் மட்டுமே இது சாத்தியம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்