ரிப்போர்ட்டர் பக்கம்

புத்தகக் காட்சியில் ஒரு கடையைத் தெரிஞ்சுக்கலாமா? - காக்கைக் கூடு

பால்நிலவன்

மக்கா எப்படியெல்லாம் யோசிக்கறாங்க. அட வித்தியாசமா இருக்கே, 'காக்கைகூடு' என்றொரு கடையைப் பார்த்ததும் தோன்றியது. பெயரே ஏதோ ஒரு குறியீட்டை வைத்திருந்தது. காக்கைக்கூடு அங்காடியில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் எதுவும் அவர்களது வெளியீடுகள் அல்ல. வேறுபல பதிப்பகங்கள் எழுத்தாளர்களுடையவை. திரட்டுதல் ஒருங்கிணைத்தல் என்ற அடிப்படையில்தான் இந்தக் கடையின் செயல்பாடு. 'காக்கைகூட்டில் குயிலும் வாழலாம்' என்பதை உணர்த்தும் குறியீடு நமக்குப் புரியத் தொடங்கியது.

பறவை, உயிரினங்கள், இயற்கை, சுற்றுச்சூழல், அணுஉலை, விவசாயம் கடல் உயிரினங்கள், பூச்சிகள், பறவை நோக்குதல் போன்ற அனைததுத் துறையிலும் உள்ள புத்தகங்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் கிடைக்கச் செய்கிறது இந்த அமைப்பு இதன் ஒருங்கிணைப்பாளர் செழியனிடம் பேசினோம்...

இதற்கான அவசியம் என்ன?

தனித்தனியே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் நூல்களை வெளியிடுகிறார்கள். ஆனால் அவை பொதுவெளியில் கிடைப்பதில்லை. உதாரணமாக தமிழ்நாட்டின் 'நீர்ப்புல பறவைகள்' ராபர்ட் குரூப் எழுதியது. அந்த புத்தகம் நிறைய பேர் தேடுகிறார்கள். அது அவர்களுக்கு கிடைக்கவில்லை. இன்று எங்கள் ஸ்டாலுக்கு வந்தவர் ஒருவர் தமிழ்நாட்டுப் பறவைகள்' புத்தகத்தைப் பார்த்து இதைத்தான் 3 வருடங்களாக தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார். இதைப் போல பலருக்கும் உதவும் விதமாக புத்தகங்கள் இங்கே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் திரட்டியதில் அப்படி கிடைப்பதற்கு அரிதான புத்தகங்கள் சிலவற்றை சொல்லமுடியுமா?

'யாருக்கானது பூமி' இது அவ்வளவு சீக்கிரம் கிடைப்பதில்லை. சதீஷ் முத்துகோபால் என்பவர் எழுதிய இந்நூல் அகநாழிகை வெளியிட்டது. இப்பதிப்பகம் தற்போது இயங்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இப்புத்தகம் எழுத்தாளர்களின் வீட்டிலேயே தேங்கிவிட வாய்ப்பு. எழுத்தாளர்களின் தந்தை இந்நூலை நேரில் வந்து கொடுத்தார்.

குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட தமிழகப் பறவைகள் ஒரு கையேடு இயற்கை ஆர்வலர்களும் பயன்படுத்தப்படக் கூடியது. ஒரு நாளைக்கு 200, 250க்கு மேற்பட்ட பிரசுரங்கள் விற்பனையாகின்றன. யார் வந்தாலும் இப்புத்தகம் ஒன்றை வாங்கிச் செல்கிறார்கள். இதன் விலை ரூ.15 தான்.

தமிழகப் பறவைகள் கையேடு யார் வெளியிட்டது?

ஹைதராபாத்திலுள்ள ஒரு பறவையியல் அமைப்பு இச்சிறு கையேட்டை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டுப் பறவைகள் அனைத்தும் இதில் படங்களாகவும்

அதற்கான குறிப்புகளும் இடம்பெற்றுள்ளனன். சென்னை இயற்கையியலாளர் சங்கத்தின் வாயிலாக வரவழைக்கப்பட்டு அவர்களிடமிருந்து வாங்கி நாங்கள் மக்களிடம் கொண்டுசெல்கிறோம்.

இந்த மாதிரி வேறு ஒரு புத்தகம் சொல்லுங்களேன்...

'பறவையியல்' என்றொரு புத்தகம். எழுத்தாளர்கள் இயற்கை ஆர்வலர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள் ஆனால் யாரிடமும் இப்புத்தகம் இல்லை. இப்புத்தகம் எழுதிய வ.கோகுலா எழுத்தாளரிடம் மட்டும்தான் இருந்தது. அவருக்கு பலமுறை மெயில் போட்டு இப்புத்தகத்தை வாங்கினோம்.

இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது உங்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது?

ஏலகிரியில் ஒரு பறவையியலாளர் சந்திப்புக்குச் செல்லும்போது ஒருத்தரின் கையில் இது இருந்தது. மேலும் இப்புத்தகம் வேறு யாரும் அறிந்திருக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டேன். அப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் முகவரியைத் தேடி தொடர்புகொண்டேன். இந்த மாதிரி நிறைய புத்தகங்களை இங்கு சேகரித்து வைத்துள்ளோம். அனைத்தும் இங்கு சொல்லமுடியுமா என்று தெரியவில்லை.

இந்தமாதிரி முயற்சிகளில் பெரும் அலைச்சல் இருக்குமே?

சென்னையில் உள்ளவர்களை நேரில் சந்தித்தும் வெகுதூரத்தில் உள்ளவர்களிடம் தொடர்ச்சியாக மெயில் போட்டு கூரியர் வாயிலாகவும் பெற்றுக்கொள்கிறோம்.

இவ்வளவு அலைச்சல்களுக்குப் பிறகு இதற்கு பொருளாதார ரீதியாக பலன் உள்ளதா?

பெரிய அளவில் இல்லை. மக்கள் மத்தியல் விழிப்புணர்வு குறைவு. சுற்றுச்சூழலை ஒழுங்காக பேண வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்க வேண்டியுள்ளது. நீங்கள் காணும் இப்புத்தகப் பணியின் இன்னொரு வேலையாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம். அதில் குறிப்பாக பறவை நோக்குதல் பற்றி நீங்களும் உங்கள் குழந்தைகளும் தெரிந்துகொள்ளும்விதமாக www.crownest.in என்ற இணையதளம் வாயிலாக இலவச விழிப்புணர்வு பயிற்சிகளை அளித்துவருகிறோம்.

விழிப்புணர்வு உருவாகும்போதே அதற்கான புத்தகங்களைத் தேடிப்படித்து பூமியின் இன்றைய நிலையை அதில் உயிர்சுழற்சியின் மாறுபாடுகளை அறிந்துகொள்வார்கள்.

புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் ஓரளவுக்கு வருகிறார்கள். சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் மூன்றுமுறை எங்கள் ஸ்டாலுக்கு வந்தார். எங்களைப் பொறுத்தவரை சமூக நோக்கிலான மிகப்பெரிய பணிக்கு சிறு அஸ்திவாரம்தான் இது. அதனால் இப்போதே பலனை எதிர்பார்க்க வாய்ப்பில்லை.

காக்கைக்கூடு அமைப்பு உருவான விதம்...

இது ஒரு தனிப்பட்ட அமைப்பு. வேலூரில் பிஎஸ்சி முடித்துவிட்டு சென்னை வந்தேன். எம்பிஏ படித்துமுடித்தேன். ஆனால் சுற்றுச்சூழல் சார்ந்து இயங்க வேண்டும் எனற உணர்வு சில புத்தகங்களை படித்ததால் உருவானது. அதனால் நான் சென்னை இயற்கையியலாளர் சங்கத்தில் உறுப்பினராக இணைந்தேன். அங்கு இருக்கும்போதே காக்கைக்கூடு துவங்கும் எண்ணம் உருவானது. என்றாலும் இப்போதும் நான் சென்னை இயற்கையியலாளர் சங்க உறுப்பினர்தான்.

'காக்கைக்கூடு' அமைப்பில் இயற்கை ஆர்வங்கொண்ட ஒரு 15 பேரை நான் ஒருங்கிணைத்து வருகிறேன். இதோ இவர் மாசிலாமணி (அருகிலிருக்கும் நண்பரை அறிமுகப்படுத்தி) சத்யபாமா கல்லூரி புரபொசர். ஆர்வமிகுதியின் காரணமாகவே எங்களுடன் இணைந்துள்ளார். புத்தகக் காட்சி தொடங்கிய நாளிலிருந்து தானாக முன்வந்து பணியாற்றிவருகிறார். இவர்களைப் போன்றவர்களாலேயே இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இயற்கை சூழல் நன்றாக இருக்கவேண்டும் என்ற இவர்களின் அக்கறையே சூழலுக்கான நம்பிக்கைத் தர மாற்றங்களுக்கான உணர்வோடு விடைபெற்றோம்.

SCROLL FOR NEXT