நாட்டு நடப்புகளை நடுநிலை தவறாமல் பதிவு செய்வதோடு ஒரு பத்திரிகையின் கடமை முடிந்துவிடுவதில்லை. இதனால் செய்திகளை அளிப்பதோடு நின்றுவிடாமல்,வாழ்வில் உயர வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எளிய மாணவர்கள்குறித்த செய்திகளையும் வெளியிட்டுவருகிறது 'தி இந்து' தமிழ். அந்த வகையில் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியான மாணவர்களைப் பற்றிய செய்தியும், அவர்களின் தேவையும் 'தி இந்து' இணையதளத்தில் கட்டுரையாக வெளிவரும்.
பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ மீது நம்பிக்கை கொண்ட வாசகர்கள் பலர், அக்கட்டுரைகளைப் படித்து, தேவைகள் உள்ளோருக்கு உதவி வருகின்றனர். காலத்தினாற் செய்யப்படும் அவ்வுதவிகள் தேவைப்பட்டவர்களின் வாழ்க்கையையே மாற்றியமைத்து வருகின்றன. இந்த செயல் சங்கிலித் தொடர் போல நீண்டுகொண்டே செல்கிறது.
எனினும் அதில் குறிப்பிட்ட 5 நிகழ்வுகளின் தொகுப்பு ஆண்டு முடிவில் உங்களுக்காக…
1. 'அரசுப் பள்ளி மாணவரின் 'ரஷ்ய கனவு' நனவானது!'
சிவகாசி அருகே நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், வெடி விபத்தைத் தடுக்கும் தானியங்கி தீயணைப்பான் இயந்திரத்தை உருவாக்கி இருந்தார். இதன்மூலம் ‘ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் சார்பில் ரஷ்யா செல்லும் இளம் விஞ்ஞானிகள் பட்டியலில் இணைந்தார்.
அங்கே அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான வழிகாட்டுதல் அவருக்கு அளிக்கப்படும் எனவும் விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்கி ஆய்வு மேற்கொள்வார் எனவும் கூறப்பட்டிருந்தது. ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 8 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.1.75 லட்சம் தேவைப்பட்டது.
ஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதுகுறித்து அரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா? என்ற தலைப்பில் 'தி இந்து' தமிழ் இணையத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அச்செய்தியைப் படித்த ரஷ்யாவில் வசித்துவரும் தமிழரும் ‘தி இந்து’ வாசகருமான விஜயகுமார், பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றார். இதன்மூலம் தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர், ரஷ்யத் தலைநகர் சென்று விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்ட சரித்திர சாதனை நிகழ்ந்தது.
*
2. 'கொடூர விபத்தில் சிக்கிய ஓர் ஏழை பெண் மறுபிறவி எடுத்த உண்மைக் கதை..!'
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஏழை இளம்பெண் வைஷாலி, குஜராத்தில் நடந்த கட்டிட விபத்தில் சிக்கித் தன் உடல் நலனைத் தொலைத்தார். சென்னை வந்த அவர்களின் குடும்பம், ஆட்டோ ஓட்டுநர் கரீம்பாய் என்பவரால், 'தி இந்து' தமிழ் அலுவலகம் வந்தது.
கண் பார்வையைப் பறிகொடுத்து, வாயைத் திறக்க முடியால், பற்கள் சிதைந்த நிலையில் இருந்தார் வைஷாலி. 'தி இந்து' வழியாக, புகழ்பெற்ற முகச்சீரமைப்பு நிபுணர் பாலாஜி, வைஷாலிக்கு சிகிச்சை அளித்தார். சிக்கலின் காரணமாக பல்வேறு நகரங்களில் கைவிடப்பட்ட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தார் மருத்துவர் பாலாஜி.
ராஜ்கோட்டில் இயல்பைத் தொலைத்த வைஷாலி, சென்னையில் தன் வாழ்க்கையை மீட்டெடுத்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது வைஷாலியால் எல்லோரையும் போல இயல்பாக சாப்பிட முடிகிறது. தன் தாய், சகோதரருடன் பேசிச் சிரிக்க முடிகிறது. இவையனைத்தும் தொடர்ந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழிலும் இணையத்திலும் கட்டுரைகளாக வெளியாகின. அவற்றால், வைஷாலி சிறு சுயதொழிலை ஆரம்பிக்கும் அளவு பணத்தை அளித்தனர் நம் வாசகர்கள்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார் வைஷாலி!
காண: வீடியோ இணைப்பு-
*
3. 'அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க ரூ. 2.65 லட்சம் அளித்த 'தி இந்து' வாசகர்கள்!'
மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம். இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம்.
அந்த வகையில் அன்பாசிரியர் 17 - ஆனந்த்: உளவியல் ஊக்கம் தரும் ஆசான்! என்னும் தொடரில் திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி அரசுப் பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்றும், இருக்கும் சுவரின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதால், மாணவர்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டுவதாகவும் அன்பாசிரியர் ஆனந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில் 'அன்பாசிரியர்' தொடரைப் படித்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 'தி இந்து'வின் இஸ்லாமிய வாசகர், தன் நண்பர்களோடு இணைந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க 2 லட்சத்து 65,000 ரூபாய் நன்கொடை அளித்தார். இத்தொகையோடு மாணவர்களின் பரிசுத்தொகை, ஊர் மக்கள் மற்றும் ஆசிரியர் ஆனந்தின் பங்களிப்போடு சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது கம்பீரமாக தலைஉயர்த்தி நிற்கிறது காளாச்சேரி அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவர்.
*
4.‘ஏழை மாணவரின் பொறியியல் கல்விச் செலவை ஏற்ற சிங்கப்பூர் வாழ் 'தி இந்து' வாசகர்!’
படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'. உதவி தேவைப்படும் மாணவர்கள் குறித்த செய்தி 'அறம் பழகு' தொடர் மூலம் 'தி இந்து' இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அவற்றைப் படித்த சிங்கப்பூர் வாழ் தமிழரான 'தி இந்து' வாசகர் ரகுபிரகாஷ், ஏழ்மை நிலையில் இருந்தாலும் கடின உழைப்பால் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்னும் மாணவர் குறித்து தகவல் கிடைத்தது. 12-ம் வகுப்பில் 1,112 மதிப்பெண்களும் 10-ம் வகுப்பில் 486 மதிப்பெண்களும் பெற்றவர் அவர். ஓய்வு நேரங்களில் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பொறியியல் படிப்புக்கு இடம் கிடைத்தும் பணமில்லாமல் கல்லூரியில் சேரக் காத்திருந்தார் ராஜ்குமார்.
ராஜ்குமார் குறித்த தகவல்களை தக்க சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களோடு, ரகு பிரகாஷிடம் பகிர்ந்தோம். உடனே அவரின் ஒட்டுமொத்த பொறியியல் கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்து அசத்தினார் ரகுபிரகாஷ்.
*
5. 'வறுமையால் வாடிய இருவரின் மூன்றாண்டு கல்லூரி விடுதிக் கட்டணத்தை ஏற்ற திருப்பூர் மருத்துவர்'
குடிபோதையால் தன்னையே அழித்துக்கொண்ட தந்தை, அவரால் பாதிக்கப்பட்ட தாய் என்று விரக்தியின் விளிம்பில் வாழ்ந்த சிறுமிகள் சந்தியாவும் ஷர்மிளாவும். இருவரின் தந்தைகளும் மதுவின் பிடியால் தனித்தனியே இறக்க, ஷர்மிளாவின் தாயும் சில வருடங்களில் உயிரை விட்டார். தங்கள் குடும்பத்தின் நிலை கண்டு வெதும்பிய சந்தியாவின் தாய், மனப்பிறழ்வோடு உயிருடன் இருக்கிறார்.
இதனால் தேனியில் உள்ள மனிதநேய காப்பகத்தில் சந்தியாவும் ஷர்மிளாவும் வளர்ந்தனர். தந்தையின் குடிப்பழக்கத்தால் முன்பு தாங்கள் சந்தித்த இன்னல்களைத் தற்போது அனுபவிக்கும் குழந்தைகளின் நலன் காக்க இருவரும் விரும்பினர். அதற்காக ஐஏஎஸ் படிக்க முடிவெடுத்தனர். இதற்காக தங்களின் கல்லூரிப் படிப்பை சென்னையில் தொடர விரும்பி, மாநிலக் கல்லூரில் பி.ஏ. அரசியல் விஞ்ஞானம் (Political Science) சேர்ந்தனர். இவர்கள் சென்னையில் தங்கிக் கல்லூரிப் படிப்பை மேற்கொள்ளவும் ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகவும் மாதாமாதம் பணம் தேவைப்பட்டது. இதுகுறித்த செய்தி ‘தி இந்து’ தமிழ் இணையதளத்தில் வெளியானது.
அதைப்படித்த திருப்பூர் தாயம்பாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜி.ரமேஷ் குமார், நம்மைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார். அதேபோல கடந்த 6 மாதங்களாகத் தவறாமல் மாதாமாதம் விடுதிக் கட்டணத்தை சந்தியா, ஷர்மிளாவின் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கிறார். அவர்களின் பட்டப் படிப்பு முடியும்வரை உதவுவேன் என்றும் உறுதியளித்துள்ளார் ரமேஷ்குமார்.
குடிபோதையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இருவர், இவரின் உதவியால் தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வருகின்றனர். விரைவில் அவர்களின் ஐஏஎஸ் கனவும் கைகூடும் என்று நம்புகிறோம்.