தினமும் ஒரே சமையலா என்று அலுத்துக்கொள்வது பலரது வாடிக்கை. அதற்காகப் புதுப்புது காய்கறிகளையா கண்டுபிடிக்க முடியும்? என்று எதிர்கேள்வி கேட்பதும் பலரது வாடிக்கைதான். இரண்டு தரப்புக்குமே ஒரே பதில், ‘பழகிய காற்கறிகள், புதுமையான சமையல்’ என்பதுதான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளை வைத்தே மணமும் ருசியும் நிறைந்த புதுமையான உணவு வகைகளைச் சமைக்கலாம் என்று சொல்கிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. காய்கறிகளை வைத்து இவர் படைத்திருக்கும் பலகார வகைகள் ஒவ்வொன்றும் புது ரகம், சுவையோ தனி ரகம்!
சுண்டைக்காய் ஊத்தப்பம்
என்னென்ன தேவை?
தோசை மாவு - 4 கப்
சுண்டைக்காய் - ஒரு கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்.
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சுண்டைக்காயை நன்றாகக் கழுவி, காம்பை நீக்கிவிட்டு, சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகப் புரட்டி, சுண்டைக்காயையும் அதில் போட்டுக் கலந்து நன்றாக வதக்கி, இறக்கிவையுங்கள். தோசை மாவைச் சற்று கனமான தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மேலே சுண்டைக்காய் கலவையைப் பரப்புங்கள். தோசையை மூடி போட்டு, மிதமான தீயில் வேகவைத்து எடுங்கள். திருப்பிப் போடவேண்டிய அவசியமில்லை.
- வரலட்சுமி