நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார்.
என்னென்ன தேவை?
சப்போட்டா பழக் கூழ் - கால் கப்
வாழைப்பழக் கூழ் - கால் கப்
மாதுளை முத்துக்கள் - கால் கப்
வேஃபர் பிஸ்கட் தூள்
- 3 டேபிள் ஸ்பூன்
தேன் - 4 டேபிள் ஸ்பூன்
ஃபிரெஷ் கிரீம் - அரை கப்
எப்படிச் செய்வது?
நீளமான கண்ணாடி டம்ளர் அல்லது கண்ணாடி ஜாரில் சிறிதளவு ஃபிரெஷ் கிரீமை ஊற்றுங்கள். அதன்மேல் சப்போட்டா பழக் கூழ், பிஸ்கட் தூள், மாதுளை முத்துக்களைப் பரப்புங்கள். அவற்றின் மேல் வாழைப்பழக் கூழ், தேன் சேர்த்து அதன்மேல் மறுபடியும் ஃபிரெஷ் கிரீம் கலவை என மாற்றி மாற்றி ஊற்றுங்கள். இதை ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறுங்கள்.