சமையலறை

மொறு.. மொறு புரோட்டா

இ.மணிகண்டன்

ல்லா ஊர்களிலும் புரோட்டா இருந்தாலும் மொறுமொறுவென இருக்கும் விருதுநகர் எண்ணெய் புரோட்டாவுக்கு என்றுமே தனி இடம் உண்டு. விருதுநகரைக் கடந்து செல்லும் உணவுப் பிரியர்கள் பலரும் விருதுநகர் எண்ணெய் புரோட்டாவை ருசித்துவிட்டே செல்வார்கள்.

எண்ணெய் புரோட்டா செய்வது குறித்து விருதுநகரில் உள்ள பிரபல ஓட்டல் ஊழியர் எம்.சிந்தா சேக் விளக்குகிறார்.

26CHLRD_PAROTTA 1 சிந்தா சேக்right

“கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விருதுநகரில் எண்ணெய் புரோட்டா செய்யப்படுகிறது. ருசியான புரோட்டா சமைக்க ஒரு கிலோ மைதா மாவுடன் 50 கிராம் கடலை எண்ணெய் சேர்த்துப் போதிய அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகப் பிசைய வேண்டும். சிறிதளவு உப்பு சேர்ப்பது சுவையை அதிகரிக்கும். நன்றாகப் பிசைந்த பின்னர், முட்டை அளவு மாவை உருட்டி எடுத்து அதைக் கடலை எண்ணெய் ஊற்றிய பாத்திரத்தில் குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அப்போது, மாவு நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும்.

எண்ணெய்யில் நன்கு ஊறிய பிறகு, மாவை வீசி எடுத்து சுருட்டிவைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் புரோட்டாவில் பல்வேறு அடுக்குகள் ஏற்படும். விரலில் பிய்த்து எடுக்கும்போது எளிதாகாவும், சாப்பிடும்போது மெதுவாகவும் இருக்கும். அதன் பின்னர், கல்லின் நடுவில் கடலெண்ணெய்யை ஊற்றி நன்கு காயவைக்க வேண்டும். அதேநேரத்தில் கல்லைச் சுற்றிலும் புரோட்டாக்களை அடுக்கிவைக்க வேண்டும். இதனால், மாவில் உள்ள ஈரத் தன்மை முழுவதுமாக உறிஞ்சப்பட்டுவிடும்.

அதைத் தொடர்ந்து, எண்ணெய் கொதித்ததும் அதில் புரோட்டாக்களைப் போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுத்தால் சுவையான, மொறுமொறுப்பான விருதுநகர் எண்ணெய் புரோட்டா ரெடி....”

SCROLL FOR NEXT