Murder Mubarak: கரீஷ்மா கம்பேக்... பங்கஜ் திரிபாதி அட்டகாசம் | ஓடிடி திரை அலசல்

By கலிலுல்லா

எழுத்தாளர் அனுஜா சௌகானின் ‘க்ளப் யு டூ டெத்’ (Club U to Death) என்ற துப்பறியும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்திப் படம்தான் ‘மர்டர் முபாரக்’ (Murder Mubarak). நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இப்படம் தமிழிலும் காணக் கிடைக்கிறது.

ஆடம்பரங்கள் குடிகொண்ட உயர்வர்க்கத்தினருக்கான ‘டெல்லி ராயல் க்ளப்’பில் தொடங்குகிறது கதை. அந்த க்ளப்பில் உறுப்பினராக இணைவது அவ்வளவு எளிதானதல்ல. பெரும் பணம்படைத்தவர்கள் வந்து செல்லும் க்ளப்பின் உடற்பயிற்சி கூடத்தில் லியோ (அஷிம் குலாட்டி) என்ற இளைஞன் கொல்லப்பட்டு கிடக்கிறான். லியோவை பொறுத்தவரை அவன் ப்ளாக் மெயிலுக்கு பெயர் போனவன்.

அந்த க்ளப்புக்கு வந்து செல்லும் பலரும் அவனால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் யார் வேண்டுமானாலும் கொன்றிருக்கலாம் என்ற யூகம் நிலவுகிறது. இந்தக் கொலையை விசாரிக்கத் தொடங்குகிறார் ஏசிபி பவானி சிங் (பங்கஜ் திரிபாதி). க்ளப்பைச் சேர்ந்த ஒவ்வொருவரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த, பலரின் உண்மை முகங்களும், தெரியாத பக்கங்களும் வெளிச்சத்துக்கு வருகின்றன. இதில் லியோவை கொன்றவர் யார்? கொல்ல என்ன காரணம்? - இதை நோக்கிய தேடல்தான் திரைக்கதை.

விசாரணை அதிகாரி கொலையாளியை நெருங்கும் கடைசி 30 நிமிடக் காட்சிகளும், அதையொட்டி நடக்கும் சம்பவங்களும் விறுவிறுப்பாக கடக்கின்றன. யார் குற்றவாளி என்பதை கணிக்க முடியாத வகையில் கொண்டு சென்றதும், கொலைக்கான காரணத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டியதும் படத்தின் பலம்.

கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் விதமும், நடுநடுவே வரும் சின்ன சின்ன காமெடிகளும் ரசிக்க வைக்கின்றன. நல்ல த்ரில்லர் கதைதான் என்றாலும் அதனை இவ்வளவு இழுத்தது சொன்னது அயற்சி. ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கும் காட்சிகளில் பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாததும், கொலைக்கான காரணத்தை அழுத்தமாக சொல்லாததும் படத்தின் மைனஸ்.

படத்தின் மற்றொரு பெரிய பலம் அதன் நடிகர்கள் தேர்வு. பாலிவுட்டின் புகழ்பெற்ற நட்சத்திரங்களின் சங்கமம் மொத்தப் படத்தையும் பார்த்து முடிப்பதற்கான உத்வேகத்தை கூட்டுகிறது. 90-களில் ஆதிக்கம் செலுத்திய நடிகை கரீஷ்மா கபூரின் கம்பேக்கும், கச்சிதமான நடிப்பும் கவனிக்க வைக்கிறது. ஜாலியான போலீஸ் அதிகாரியாக பங்கஜ் திரிபாதி அட்டகாசம் செய்திருக்கிறார். உடனிருக்கும் காவலரை வைத்து அவர் சொல்லும் கதைகள் கலகலப்பு.

விஜய் வர்மா - சாரா அலிகான் அழுத்தமில்லாத காதல் காட்சிகள் அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், இருவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். தவிர, டிம்பிள் கபாடியா, சஞ்சய் கபூர், டிஸ்கா சோப்ரா உள்ளிட்டோர் கதாபாத்திரத்துக்கு பொருந்திப் போகிறார்கள்.

சச்சின் ஜிகரின் ‘யாத் ஆவே’ பாடல் நல்லதொரு காதல் மெலோடி. திகட்டாத பின்னணி இசை காட்சிகள் கோரும் உணருவுக்கு நியாயம் சேர்க்கிறது. பிரமாண்டமான காட்சிகள், அதற்கான வார்ம் லைட்டிங் என டெல்லியின் உயர்தர மக்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது லினேஷ் தேசாயின் கேமரா. அக்‌ஷரா பிரபாகர் படத்தொகுப்பில் மனது வைத்திருந்தால் நீளத்தை சுருக்கி இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.

சுவாரஸ்யமில்லாத விசாரணையையும், தேவையற்ற நீளத்தையும், அழுத்தமில்லா காதலையும் கடந்துவிட்டால், எங்கேஜிங்கான இறுதிப் பகுதி உங்களுக்காக காத்திருக்கிறது. சிறப்புச் சலுகையாக ஆங்காங்கே ரசிக்கதக்க சில காட்சிகளும் உண்டு. படம் நெட்ஃப்ளிக்ஸில் தமிழுலும் காணக் கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

க்ரைம்

11 mins ago

தமிழகம்

9 secs ago

கல்வி

8 mins ago

உலகம்

19 mins ago

இணைப்பிதழ்கள்

33 mins ago

க்ரைம்

38 mins ago

க்ரைம்

45 mins ago

உலகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

மேலும்