ஓடிடி திரை அலசல் | Udal - கண்ணை மறைத்த காதலுடன் திகைப்பூட்டும் த்ரில் அனுபவம்!

By குமார் துரைக்கண்ணு

நாலைந்து வருடங்களாக படுத்த படுக்கையாக கிடக்கும் மாமியாரின் மலத்தையும், சிறுநீரையும் துடைத்துக் களைத்து அலுத்துப்போன மருமகள் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியரை கொலை செய்து விடுகிறார். சிறிதும் பிசகாமல் முடியும் இந்தக் கொலைக்குப் பின் அவ்வீட்டில் அந்த இரவு எப்படியாக விடிகிறது என்பதுதான் 'உடல்' (Udal) மலையாள திரைப்படத்தின் ஒன்லைன்.

இயக்குநர் ரதீஷ் ரகுநந்தன் எழுதி இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு பிளாக் த்ரில்லர் டிராமா. படத்தின் மேக்கிங்கும், விறுவிறுப்பான காட்சி அமைப்புகளும் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களின்போது திடுக்கிடச் செய்கிறது. இடைவேளைக் காட்சியில் பதறத் துவங்கும் இதயத்துடிப்பு இறுதிக் காட்சியில்தான் ஆசுவாசம் அடையும்படி, படத்தை எங்கேஜிங்காக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

ஓர் இரவில் ஒரு வீட்டினுள், நடக்கும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்றை அறிமுக இயக்குநரான ரதீஷ் ரகுநந்தன் படமாக்கியிருக்கும் விதம் மிரள வைக்கிறது. மிக குறைவான கதாப்பாத்திரங்கள், இரண்டு மணி நேர படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள் மட்டும்தான் நடக்கின்றன. தமிழில் அமீர் இயக்கத்தில் வந்த 'ராம்' திரைப்படத்தில்கூட, கொலைக்களமாக சித்தரிக்கப்படும் அந்த வீட்டுக்கு வெளியே நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அதுவும் இல்லை. ஆனால், ஒரு வீடு மூன்று கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு இரண்டாம் பாதி முழுவதையும் போரடிக்காமல் கொண்டு போகும் ரதீஷ் ரகுநந்தனுக்கு இது முதல் படம் என்பதை யாராலும் நம்பவே முடியாது.

நான்கைந்து ஆண்டுகளாக, படுத்த படுக்கையாக கிடக்கும் தனது மனைவி கொச்சுவுடன் செவிதிறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு கொண்ட குட்டிச்சன் (இந்திரன்ஸ்)
வசித்து வருகிறார். மகன் (ஜூட் ஆன்டனி ஜோசப்) வெளியூரில் வேலை செய்துவருவதால், அந்த வீட்டில் மருமகள் ஷைனி (துர்கா கிருஷ்ணா) மற்றும் பேரனும் இருந்து வருகின்றனர். உடல்நலம் குன்றிய மாமியாரைக் கவனித்துக் கொள்வதால் ஏற்படும் சலிப்பும், படுக்கையிலேயே மலமும், சிறுநீரும் கழித்துவிடுவதால் மாமியார் மீது ஷைனிக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

மருமகளின் குணமறிந்த மாமனார் குட்டிச்சன் தனது மனைவிக்கு தன்னால் முடிந்த பணிவிடைகளைச் செய்து காலத்தை கழிக்கிறார். ஷைனி அதே ஊரைச் சேர்ந்த கிரண் (தயன் சீனிவாசன்) உடன் முறையற்ற உறவில் இருந்து வருகிறார். வீட்டில் இருக்கும் பெரும்பாலான நேரங்களில் கிரணுடன் ஆடியோ கால், வீடியோ காலில் பேசி தனது ஆற்றாமையைப் போக்கிக் கொள்கிறார். அரசல்புரசலாக இந்த விவகாரம் பலருக்கும் தெரிந்தும் இருக்கிறது.

இந்தச் சூழலில், ஒருநாள் இரவு கிரண் ஷைனியை சந்திக்க அவரது வீட்டுக்கு வருகிறார். அந்த இரவில் இணை சேர்ந்த பின்னர், மாமியாரை ஷைனிகொலை செய்ய தனக்கு உதவ வேண்டும் என கிரணிடம் கேட்கிறார். அதற்கு அவரும் ஒப்புக்கொள்கிறார். இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு, மீண்டும் ஷைனியின் அறையில் சந்தோஷமாக இருப்பதற்கு முன் மாமியார் உண்மையாகவே இறந்துவிட்டாரா என்ற சந்தேகம் கிளம்ப, மீண்டுமொருமுறை மாமியாரின் அறைக்கு வந்து இறப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் அங்கிருந்து கிரணை வெளியே அனுப்ப நினைக்கும்போதுதான், இருவரும் மாமனாரிடம் வசமாக சிக்கிக் கொண்டது தெரியவர, 'Taka a Breath' என்ற வாசகத்துடன் இடைவேளை வருகிறது.

அவ்வளவுதான், அங்கிருந்து தொடங்கும் படத்தின் இரண்டாம் பாதியின் வேகம் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு நிச்சயம் கொண்டு வந்துவிடும். ஷைனி மற்றும் அவரது ஆண் நண்பர் கிரணை மாமனார் எப்படி பழிவாங்கினார்? வீட்டுக்குள் இருந்து அவர்களால் ஏன் தப்பிக்க முடியவில்லை? வீட்டுக்கு வெளியே காத்திருக்கும் கிரணின் நண்பர் அந்த வீட்டுக்குள் எப்படி வருகிறார்? அவருக்கு என்ன நடக்கிறது? இந்த களேபரத்தில் ஷைனி குறித்து கிரண் தெரிந்துகொள்ளும் உண்மை என்ன? இப்படி பல கேள்விகளுக்கான பதில்கள்தான் படத்தின் திரைக்கதை.

இந்தப் படத்தில் செவிதிறன் மற்றும் பார்வைதிறன் கொண்ட மாற்றுத்திறனாளியாக இந்திரன்ஸ் சம்பவம் செய்திருக்கிறார். இடைவேளைக் காட்சியில் இந்திரன்ஸை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பட்டாசாய் தெறிக்கிறது. கருணை, இரக்கம், பயம், கோபம், ஆத்திரம், வன்மம், கொலைவெறி என அந்த பார்வைத்திறன் குறைபாடுள்ள கண்ணுடன் வெளிப்படுத்தும் இடங்களில் இந்திரன்ஸின் திரை உலக அனுபவத்தை தெள்ளத் தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. அதேநேரம், மருமகள் கதாப்பாத்திரத்தில் வரும் துர்கா கிருஷ்ணா அழகிலும், நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். படத்தில் வரும் மற்ற பாத்திரங்களைக் கவனிக்கும் வாய்ப்பை இந்த இருவரும் பார்வையாளர்களுக்கு மறந்தும்கூட இவர்கள் கொடுக்கவில்லை.

இந்த த்ரில்லர் டிராமாவுக்கு பெரிய பலமாக மனோஜ் பிள்ளையின் கேமிராவும், வில்லியம் பிரான்சிஸின் இசையும் அமைந்திருக்கின்றன. படத்தின் இரண்டாம் பாதி முழுக்க இருட்டில்தான் எடுக்கப்பட்டிருக்கும். அந்த கலர்டோனே, பார்வையாளர்களுக்கு பயத்தைக் கொடுத்துவிடுகிறது. அதேபோல், கண்களை இடமும், வலமும் உருட்டும் துர்கா கிருஷ்ணாவின் கண்களோடு படம் பார்ப்பவர்களின் கண்களையும் சேர்த்து உருட்டுகிறது மனோஜ் பிள்ளையின் கேமிரா. அதேபோல், படத்தின் பின்னணி இசை த்ரில்லர் படத்துக்கான அனுபவத்தை அளித்திருக்கிறது.

க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவர்கள் மிஸ் பண்ணக்கூடாத படங்களில் ஒன்று 'உடல்' திரைப்படம். அதேநேரம் இது வயது வந்தோருக்கான படம். குழந்தைகளுடன் பார்ப்பதைத் தவிர்க்கவும். அதேநேரம், படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளும் அதிகம். எனவே, வன்முறைக் காட்சிகள் விரும்பாதவர்களும் இந்தப் படத்தை தவிர்ப்பது நல்லது.

கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் வெளியானது. அதன்பின்னர், படத்தைப் பார்த்த இந்தி மூத்த நடிகர் நஸ்ருதீன் ஷா இந்திரன்ஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதையடுத்து, இப்படத்தை இந்தியிலும் இயக்கவிருக்கிறார் இயக்குநர் ரதீஷ் ரகுநந்தன். மேலும், அவர் தனது அடுத்தப் படமான 'தங்கமணி' யிலி பிஸியானதால், ஓடிடி தளத்தில் இப்படம் வெளிவர காலதாமதமானது. இருப்பினும், மலையாளப் படங்களை அதிகமாக வெளியிடும் ஓடிடி தளமான
Saina play ஓடிடி தளத்தில் இந்த ஜன.5-ம் தேதி முதல் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 mins ago

இந்தியா

9 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

32 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

மேலும்