இப்படிக்கு இவர்கள்: பூதம்தான் வர வேண்டுமா?

தன் கடையில் உள்ள பொருட்களை எப்படியாவது விற்றுவிட வேண்டும், லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான கடைக்காரர்களின் உந்துதல். அதனால்தான், காலாவதியான பொருட்களை விற்பது, அளவைக் குறைப்பது, அதிக விலை வைத்து விற்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். எம்.ஆர்.பி. என்பது இன்னும் ஒரு பெரிய மோசடி. ரூ.12 ஆயிரம் விலையிடப்பட்ட சக்கர நாற்காலியை ரூ.4 ஆயிரத்துக்கு என் நண்பர் வாங்கி வந்தார். ரூ.11 ஆயிரத்துக்குக் கொடுத்திருந்தாலும் ஆயிரம் ரூபாய் குறைத்துக்கொடுத்தார்கள் என்று அவர் சந்தோஷப்பட்டிருப்பார்.

அதே நாற்காலியை எந்தெந்தக் கடையில் எவ்வளவு ரூபாய்க்கு விற்றார்களோ? இங்கு விளம்பரத்தின் உண்மைத்தன்மைக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. ‘நுகர்வோர் எனும் ஏமாளிகள்' (டிச.20) கட்டுரையாளர் குறிப்பிட்ட மாதிரி நாம் முழு ஏமாளிகள்தான். பண்டைய பூம்புகாரில் கடைவீதியில் சதுக்கப்பூதம் என்று ஒன்று இருந்ததாம், முறை தவறிய வணிகர்களை அது விழுங்கிவிடுமாம். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சேவைக் குறைபாட்டைத் தட்டி கேட்காத நிலையில் இப்போது அப்படி ஒரு பூதம் இருந்தால் தேவலை என்று தோன்றுகிறது.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.



ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே!

எஸ்.பி.முத்துராமனின், ‘சினிமா எடுத்துப் பார்’ தொடர், நிறைய நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது. சிறுவனாக இருந்தபோது நான் பாரத்த படம் ‘ராஜா சின்ன ரோஜா’. அதில் ரஜினிகாந்த் நடனமாடும்போது, பின்னணியில் கலர் கலராகக் குண்டுகள் வெடிக்கும் காட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல காட்டுக்குள் கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் சேர்ந்து குழந்தைகள் ஆடிப் பாடுகிற, ‘ராஜா சின்ன ரோஜாவோட காட்டுக்குள்ளே வந்தானாம்’பாடலைத் திரையில் பார்த்து அசந்துபோனேன். இப்போது எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். டிச.21ம் தேதி கட்டுரையை வாசித்ததும், ‘யு டியூப்’பில் அந்தப் பாடலை ஓடவிட்டு என் குழந்தைகளுக்குக் காட்டினேன். அவர்களுக்கும் பிடித்திருந்தது.

- வி.மாடசாமி, சுரண்டை.



கருவேல மரங்களை அகற்றுங்கள்!

வைகோ தொடர்ந்த வழக்கில் 13 மாவட்டத் தலைநகரங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது (டிச.21) வரவேற்கத்தக்கது. கருவேல மரங்கள், விளைநிலங்களில் உள்ள சத்துக்களை இழக்கச் செய்து, அதனை மலடாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1872-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தூவப்பட்ட சீமைக் கருவேல விதைகள் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாத அளவுக்குப் பல்கிப் பெருகிவிட்டன. உயர் நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்யாமல், கொடுத்த காலக்கெடுவுக்குள் பேரிடர் காலப் பணியைப் போலத் துரிதமாகச் செயல்பட்டு, சீமைக் கருவேல மரங்களை அழித்திட முன்வர வேண்டும்.

- அப்பர் சுந்தரம், மயிலாடுதுறை.



மக்களின் உணர்வைச் சொல்லியிருக்கலாம்!

வார்தா புயலால் ஏற்பட்ட சேதத்தைச் சீரமைக்க, மத்திய அரசின் தேசியப் பேரிடர் நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.1,000 கோடியை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தமிழக முதல்வர் நேரில் சென்று பாரதப் பிரதமரைச் சந்தித்தது (டிச.20) நல்லதோர் அணுகுமுறையாகும். வெறுமனே கடிதம் எழுதுவதைவிட, நேரில் சென்று மனு கொடுத்திருப்பது வரவேற்புக்குரியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதிநீர் இணைத்தல், தமிழக மீனவர் பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் அதே போல தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையான தமிழை ஆட்சி மொழியாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் முதல்வர்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE