தடுப்பூசி சிறப்பு முகாம்கள்: திட்டமிடலும் உழைப்பும் பாராட்டுக்குரியவை

By செய்திப்பிரிவு

சிறப்பு முகாம்களின் வழியாக லட்சக்கணக்கான பேருக்கு ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் தமிழ்நாடு அரசின் திட்டம் பக்கத்து மாநிலங்களிலும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. பொது சுகாதாரத் துறையில் எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்கும் கேரளத்தில், கரோனா இலவசத் தடுப்பூசிக்கு இணையம் வழியாகப் பதிவுசெய்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மக்களைத் தேடி தடுப்பூசி இயக்கம் முன்னகர்ந்து வருவது மக்கள் நல்வாழ்வுத் துறையின் திட்டமிடலுக்குக் கிடைத்த வெற்றி.

செப்டம்பர் மாதத்தில் நடந்த மூன்று சிறப்பு முகாம்களில் மட்டும் மொத்தம் 70.71 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்பட்ட மூன்று சிறப்பு முகாம்களும் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன என்பது அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வாய்ப்புகளை அளித்துள்ளன. மருத்துவமனைகளில் மட்டுமின்றி பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என்று பொது இடங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் திட்டமிடப்படுகின்றன. சிறப்பு முகாம்கள் நடக்கும் நாட்களில் அதிக தடுப்பூசிகள் தேவைப்படும் இடங்களுக்கு மற்ற பகுதிகளிலிருந்து உடனடியாக வரவழைக்கும் ஏற்பாடுகளுக்குப் பின்னாலுள்ள சுகாதாரத் துறை ஊழியர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கும் இடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டதும் மக்களிடையேயும் மருத்துவத் துறை பணியாளர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பணியாற்றிய சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களுக்காக அதிகாலையிலிருந்து மாலை வரையிலும் ஓய்வின்றித் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு இந்த விடுமுறை மிகவும் அவசியமானது. இந்த விடுமுறையும்கூட, கிராமச் செவிலியர்கள் கடந்த வாரம் சென்னையில் பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளோடு மகப்பேறு உதவிகள், தாய் சேய் நல உதவிகள், கருவுற்ற பெண்கள் குறித்த தொடர் கண்காணிப்புகள், மற்ற தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஆகிய வழக்கமான பணிகளையும் சேர்த்தே அவர்கள் செய்ய வேண்டியுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கிராமச் செவிலியர்களின் பணிச் சுமையும் வேலை நேரமும் கூடிவிட்டன.

தடுப்பூசி செலுத்தும் பணியைச் செவிலியர்களிடம் ஒப்படைக்கையில், அது குறித்த விவரங்களை இணையத்தில் பதிவுசெய்யும் பணிகளை மற்ற துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பகிர்ந்துகொள்ளலாம் என்பதும் அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று. ஆசிரியர்களும், தன்னார்வலர்களும் சிறப்பு முகாம்களில் பங்கெடுத்துக்கொண்டுள்ளனர் என்றாலும் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும். செவிலியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை போலவே மருத்துவர்களிடமிருந்து ஊதிய நிர்ணயக் கோரிக்கைகளும் மீண்டும் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளன. பெருந்தொற்றில் உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவத் துறைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உரிய கவனம் கொடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்