தலையங்கம்

கிரிக்கெட்: மகளிர் அணியின் மைல்கல் வெற்றி

செய்திப்பிரிவு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. ஆசிய அணிகளில் இச்சாதனையைப் படைத்திருக்கும் இந்திய அணியின் கிரிக்கெட் பயணத்தில் இது ஒரு மைல்கல். இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட் போலவே மகளிர் கிரிக்கெட் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த வெற்றியானது கிரிக்கெட்டில் மகளிர் நம்பிக்கையுடன் கால் பதிக்க உந்துசக்தியாகத் திகழும்.

கிரிக்கெட்டில் ஆடவருக்கான உலகக் கோப்பை தொடர் 1975இல்தான் தொடங்கியது. அதற்கு முன்பு 1973லேயே மகளிர் உலகக் கோப்பை தொடர் அறிமுகமாகிவிட்டது. ஆனால், இந்திய மகளிர் அணி 1978இல்தான் இத்தொடரில் பங்கேற்கத் தொடங்கியது. 47 ஆண்டுகளாக உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி பங்கேற்றுவருகிறது.

2005, 2017 ஆகிய ஆண்டுகளில் மிதாலி ராஜ் தலைமையிலான மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றும், கோப்பையை வெல்ல முடியவில்லை. நீண்ட காலமாகக் கோப்பையை வெல்லாமல் தவித்த மகளிர் அணியின் ஏக்கத்தை ஹர்மன்பிரீத் கெளர் தலைமையிலான இளமையும் அனுபவமும் கலந்த அணி போக்கியிருக்கிறது.

நவிமும்பையில் நவம்பர் 2 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பையைத் தனதாக்கியிருக்கிறது இந்திய அணி. உலகக் கோப்பையை வெல்லும் நான்காவது அணி இந்தியா. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா (7 முறை), இங்கிலாந்து (4 முறை), நியூசிலாந்து ஒரு முறை கோப்பையை வென்றிருக்கின்றன.

இத்தொடரின் சுற்றுப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை இந்திய அணி சந்தித்தபோது, அரையிறுதிக்காவது தகுதி பெறுமா என்கிற கேள்வி எழுந்தது. அந்தத் தோல்விகளிலிருந்து இந்திய அணி மீண்டுவந்தது வீராங்கனைகளின் மன உறுதியையும் அர்ப்பணிப்பு உணர்வையும் வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக, மகளிர் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவரும் ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் வீழ்த்தியது, முந்தைய தோல்விகளிலிருந்து இந்திய அணி பாடம் கற்றதை உணர்த்தியது. அரையிறுதிப் போட்டியில் ஜெமீமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கெளர், இறுதிப் போட்டியில் ஷெபாலி வர்மா, தீப்தி ஷர்மா ஆகியோர் இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

அமோல் மஜூம்தார் உள்ளிட்ட பயிற்சியாளர்கள், துணைப் பயிற்சியாளர்கள், அணி நிர்வாகம் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டுக்குரியவர்கள். இந்திய மகளிர் அணியைக் கட்டமைத்ததில் பங்காற்றிய முந்தைய கிரிக்கெட் நிர்வாகிகள், அணித் தலைவர்களும் நினைவுகூரத்தக்கவர்கள். இந்தியாவில் அனைத்துத் தரப்பினராலும் ஆராதிக்கப்படும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.

ஆடவர் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகையில், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி மெதுவானது. ஆனால், ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் கிரிக்கெட்டை வளர்ப்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சமீபகாலமாகக் கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் வெல்வதன் மூலம் அந்த விளையாட்டு பெரிய அளவில் வளர்ச்சிபெறும் என்பதற்கு உதாரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் இன்னும் அதிகமாக வளர்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை!

SCROLL FOR NEXT