தலையங்கம்

பண்டிகைக் கால மது விற்பனை சாதனையா?

செய்திப்பிரிவு

இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு ரூ. 600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடந்திருப்பது கவலை அளிக்கிறது. மது விற்பனையில் மூன்றாவது பெரும் சந்தையாக இந்தியா உள்ளது.

அதிகப்படியாக மதுபானம் விற்பனை ஆகும் இந்திய மாநிலங்களின் பட்டியலில் அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்க்கண்ட் ஆகியவை உள்ளன. மது விற்பனையில் உச்சபட்ச லாபம் ஈட்டுபவையாக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளன. பிஹார், குஜராத், மிசோரம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும் கள்ளச் சந்தைகளில் அங்கு மது விற்பனை நடந்துகொண்டு இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதைத் தடுக்கவும், மதுப் பயன்பாட்டைக் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொள்ளவும் தொடங்கப்பட்ட டாஸ்மாக் பிற்காலத்தில் சில்லறை மதுபான விற்பனையிலும் ஈடுபட்டது. 2021 தேர்தல் வாக்குறுதியின்படி திமுக அரசு 500 டாஸ்மாக் மதுக்கடைகளை 2024இல் மூடியது. ஆனாலும் தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.

இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு ரூ.130 கோடிவரை விற்பனை நடைபெறுகிறது. வார இறுதியில் அது ரூ.150 கோடியாக அதிகரிக்கிறது. பண்டிகைக் காலங்களில் விற்பனை மேலும் 15 சதவீதம் உயர்கிறது. டாஸ்மாக் தீபாவளி விற்பனை என்று கணக்கிட்டால், 2022இல் – ரூ.708 கோடி, 2023 – ரூ.468 கோடி, 2024 – ரூ.438 கோடி, 2025 – ரூ.789 கோடி. ஆக மொத்தம், மது விற்பனையை மட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மது விற்பனையில் புதிய மைல்கற்களை அரசு எட்டிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி மதுபான விற்பனையில் கிடைக்கும் லாபம், அரசு வருவாய்க்கு முக்கியமானதாக உள்ளது.

கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.48,344 கோடி. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது ரூ.2500 கோடி அதிகம். இது ஒரு புறம் இருக்க, கள்ளச்சாராயத்தைக் குடித்துவிட்டு மரக்காணம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சியில் பலர் மரணமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. டாஸ்மாக் கடைகள் இருக்கும்போதே கள்ளச்சாராயத்தை நாடிச் செல்ல வைப்பது எது என்கிற கேள்வி, இந்த மரணங்களால் எழுந்தது.

ரூ.140க்கு 180 மில்லி லிட்டர் என்பதே டாஸ்மாக் மதுபானம் விற்கப்படும் குறைந்தபட்ச விலை மற்றும் அளவாக உள்ளது. இதைவிடக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை நாடும் ஆபத்தான போக்கு அவ்வப்போது தலைதூக்குவதைக் காண முடிகிறது.

குடிப்பழக்கத்தினால் ஏற்படும் உடல்நல, மனநல பாதிப்புகளை, சமூகச் சீரழிவுகளைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. எப்படிப் பார்த்தாலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய அரசு, மதுபானக் கடைகளை ஒழுங்குபடுத்தினால் மட்டும் போதாது. மது ஒழிப்பை உறுதியாகக் கையிலெடுக்க வேண்டும்.

மது விலக்கு அமலாகும் என திமுகவும் படிப்படியாகக் கடைகள் மூடப்படும் என அதிமுகவும் 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது கவனிக்கத்தக்கது. ஆனால், வருவாய் நோக்கத்தோடு நடத்தப்படும் மதுக்கடைகளால், எல்லா நலத்திட்டங்களின் நன்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு உடலாலும் உள்ளத்தாலும் நலிவுற்ற ஒரு சமுதாயத்தை அரசே உருவாக்கக் கூடாது.

SCROLL FOR NEXT