யமுனை நதியைப் புனரமைக்க ரூ.1,816 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்திருக்கிறார். 2029 மக்களவைத் தேர்தலுக்குள் இந்தப் பணி நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தராகண்டில் உற்பத்தியாகும் யமுனை நதி டெல்லி, மதுரா, ஆக்ரா உள்ளிட்ட நகரங்கள் வழியாக 1,370 கி.மீ. பாய்ந்து, அலகாபாத்தில் கங்கையுடன் கலக்கிறது. இதில் டெல்லி மாநகரத்தின் மையப் பகுதிக்குள் 2% யமுனை மட்டுமே பாய்கிறது.
ஆனாலும் இங்குதான் 80% வரை இந்நதி மாசடைகிறது. இந்தப் பிரச்சினை 90களின் தொடக்கத்திலேயே உணரப்பட்டதால், ஜப்பான் சர்வதேசக் கூட்டுறவு முகமையுடன் இணைந்து யமுனை நதி செயல்திட்டம் 1993லேயே தொடங்கப்பட்டது. இப்போதுவரை யமுனையைத் தூய்மைப்படுத்துவதற்காக ஏறக்குறைய ரூ.8,000 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை மூன்று கட்டங்களாக யமுனை நதி புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மாசுபாட்டுக் குறைப்பு நடவடிக்கைகள், கழிவுநீர் மேலாண்மை, உயிரிச் சீராக்கத் தொழில்நுட்பம் மூலம் வடிகால்களைச் சுத்திகரித்தல், மாசுபாடுகளைக் கண்டறிதல், மதிப்பிடல், கண்காணிப்புத் திட்டம் போன்றவை வெவ்வேறு காலக்கட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் உரிய தீர்வு எட்டப்படவில்லை.
இதுவரை டெல்லியில் நிறுவப்பட்ட 37 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 16க்கும் மேற்பட்டவை கழிவுநீர் வெளியேற்றத்துக்கான வரையறையை மீறுவதுதான் இதற்கான காரணம். அனுமதிக்கப்பட்ட மலக்கழிவு பாக்டீரியாவின் அளவைக் காட்டிலும் 10 மடங்கு கூடுதல் நச்சுத்தன்மை கொண்ட கழிவுநீர் ஆற்றில் கலக்கவிடப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதவிர, உயிரிச் சீராக்கத் தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தாமலேயே 22 முக்கிய வடிகால்கள் வழியாகக் கழிவுநீர் யமுனையில் நேரடியாகக் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படாத, பராமரிப்பற்ற நிலையிலும் பல சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.
இதனால், நாள்தோறும் 360 கோடி லிட்டர் கழிவுநீரை வெளியேற்றும் டெல்லியில், 214 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படுகிறது. மீதமுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பின்றி வடிகால்கள் வழியாக நதியில் நேரடியாகக் கலக்கவிடப்படுகிறது. முன்னதாக, ஆம் ஆத்மி அரசு டெல்லி நகரின் கழிவுநீர்க் கால்வாய்களைத் தூர்வாருதல், புனரமைத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய 6 அம்சச் செயல்திட்டத்தை அறிவித்திருந்தது.
யமுனையில் கழிவு கலக்கும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்கிற அதிரடி அறிவிப்புகூட வெளியானது. ஆனால், பெயரளவில் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தச் சூழலில்தான், யமுனை நதியைப் புனரமைக்க ரூ.1,816 மதிப்பிலான திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்திருக்கிறார்.
டெல்லியில் மட்டுமல்ல, சென்னையிலும் கடந்த 50 ஆண்டுகளாக அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை மீட்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது. நகரமயமாதல் ஏற்படும்போது தவிர்க்க முடியாத இயற்கைச் சிதைவாக நதிகளின் மாசுபாடு பார்க்கப்படுகிறது. உண்மையில், கழிவுநீரைச் சுத்திகரித்த பிறகு ஆற்றில் கலக்கும்படி செய்தாலே பல நதிகளைப் பெருமளவு மீட்டுவிடலாம்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு அவை முறையாக இயக்கப்பட வேண்டும். முக்கியமாகக் கழிவுநீர் அமைப்பில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட வேண்டும். இதில் அரசுக்கு என்ன பொறுப்பு உள்ளதோ அதற்கு இணையான பொறுப்பு மக்களுக்கும், நகர நிர்வாகத்துக்கும் உண்டு. இது மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினை என்பதால், அரசியலைக் கடந்து நதிகள் மீட்கப்பட வேண்டும்.