தலையங்கம்

லடாக்கில் அமைதி திரும்பட்டும்!

செய்திப்பிரிவு

அமைதிக்குப் பேர் போன லடாக்கில், அண்மையில் வெடித்த கலவரமும் வன்முறைச் சம்பவங்களும் மிகுந்த கவலையளிக்கின்றன. லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையில் லடாக்கைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திப் போராடிவந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டக்கூறு 2019இல் ரத்துசெய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. லடாக், சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசமானது.

ஆரம்பத்தில் இந்நடவடிக்கையை வரவேற்ற லடாக் மக்கள், பின்னர் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்திவருகின்றனர். அரசமைப்புச் சட்டம் உறுதியளித்திருந்த பாதுகாப்பும் அதிகாரமும் துணைநிலை ஆளுநரின் நிர்வாகத்தின்கீழ் பின்னடைவைச் சந்தித்ததாகப் பலர் கருதுகின்றனர். 2024 பிப்ரவரியில் சோனம் தலைமையில் நடைபெற்ற போராட்டம் பெரும் கவனத்தை ஈர்த்தது.

நிலம், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகச் சட்டம் இயற்றிக்கொள்ளும் தன்னாட்சி உரிமையை, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணை வழங்குகிறது. இமயமலைப் பகுதிகளில் அமைந்திருக்கும் மாநிலங்களில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதால் பல பேரழிவுகள் ஏற்படுகின்றன. அந்த நிலை லடாக்குக்கு நேர்ந்துவிடாதிருக்க ஆறாவது அட்டவணை அவசியம் என்றும் சோனம் உள்ளிட்டோர் வலியுறுத்திவருகின்றனர்.

லடாக் பகுதியின் இயற்கை வளங்களைச் சூறையாடும் வேலைகளும் ஊழல் முறைகேடுகளும் அதிகரித்திருப்பதாகவும் சோனம் விமர்சித்திருக்கிறார். தவிர லே, கார்கில் பகுதிகள் தனித்தனி மக்களவைத் தொகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிவருகிறார்.

லே அபெக்ஸ் பாடி (எல்ஏபி), கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து அமைதியான முறையில் போராட்டத்தை சோனம் முன்னெடுத்துவந்தார். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் போராட்டக்காரர்கள் ஆதங்கம் தெரிவிக் கின்றனர்.

கோரிக்கைகள் தொடர்பாகப் பரிசீலிக்கப்படும் என உறுதியளிக்காமல் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். லடாக்கின் முக்கிய நகரமான லே நகரில் சோனம் வாங்சுக் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், செப்டம்பர் 24இல், வன்முறை வெடித்தது.

பாஜக அலுவலகமும் சில வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சோனம் வாங்சுக் கைதுசெய்யப் பட்டார்.

அரபு வசந்தம், நேபாளத்தில் நடந்த ‘ஜென் ஸீ’ போராட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் போராட்டத்தைத் தூண்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக மத்திய உள் துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவரது மனைவி மறுத்திருக்கிறார். வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த லே, கார்கில் உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது (செப்டம்பர் 30 (செவ்வாய்க்கிழமை) அன்று - அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்குவதற்காக, நான்கு மணி நேரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது).

சீனா, பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்திருக்கும் லடாக், எல்லைப் பாதுகாப்பு விஷயத்தில் மிக முக்கியமான பகுதி. 2020இல் இந்திய வீரர்களுடன் சீனப் படையினர் மோதலில் ஈடுபட்ட கல்வான் பகுதி அமைந்திருப்பது இங்குதான். இத்தகைய சூழலில், லடாக் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளைப் பரிசீலித்து அங்கு அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு முன்வர வேண்டும்.

SCROLL FOR NEXT