தமிழர்களின் பண்பாட்டில் பனைமரங்கள் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தாலும், அவை எந்தக் கட்டுப்பாடும் இன்றி வெட்டப்படும் நிலை பல ஆண்டுகளாக நிலவுகிறது. இந்தச் சூழலில், மக்கள் இனித் தவிர்க்கவே முடியாத சூழலில்தான் பனைமரங்களை வெட்ட வேண்டும் என்கிற நோக்கத்தோடு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டிருப்பது, நம்பிக்கை அளிக்கிறது.
சுற்றுச்சூழலைப் பேணுவதில் பனை முக்கியத்துவம் வாய்ந்தது. நீர்நிலை ஓரங்களில் வளர்ந்துள்ள பனைமரங்கள், மண் அரிப்பைத் தடுப்பதன் மூலம் கரைகளுக்கு அரணாக விளங்குகின்றன. பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, நுங்கு, உத்தரம், அறைக்கலன்கள் உள்படப் பல்வேறு பொருள்களுக்கு ஆதாரமாக இருக்கும் பனை ‘கற்பகத்தரு’ என்றே போற்றப்படுகிறது. பனைமரத் தொழிலாளர்கள் இன்றைக்கும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். பனை, தமிழகத்தின் ‘மாநில மரம்’ என்கிற சிறப்பையும் பெற்றுள்ளது.
காலப்போக்கில் மக்களின் வாழ்க்கைமுறை மாறியபோது, பனை விளைபொருள்களின் தேவை பெருமளவு குறைந்தது. பனை தேவையற்ற சுமை என்கிற மனநிலை விவசாயிகளிடம் உருவானது. ஆண்டுக்கு ரூ.15,000க்குக் குறையாமல் வருவாய் அளிக்கக்கூடிய ஒரு பனைமரத்தை 100 ரூபாய்க்கு வெட்டிக்கொள்ள அனுமதிக்கும் நிலை மக்களுக்கு ஏற்பட்டது.
பனந்தோப்புகள் வீட்டுமனை உருவாக்கவும் ஆலைகள், செங்கல்சூளை ஆகியவற்றுக்கான எரிபொருளுக்காகவும் வரம்பின்றி அழிக்கப்பட்டன. 100 ஆண்டுகளுக்கு மேல் வளரக்கூடிய பனைமரங்கள் தற்காலிகப் பயன்பாட்டுக்காகப் பெரும் எண்ணிக்கையில் வெட்டப்படுவதை அரசு தடுக்க வேண்டும் எனப் பலரும் குரல் கொடுத்துவந்தனர்.
இந்தச் சூழலில், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுதான் பனைமரத்தை வெட்ட வேண்டும் எனத் தமிழக அரசு 2021இல் ஆணை பிறப்பித்தது. இதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சுப்பையா மனுத் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு 2024இல் விசாரிக்கப்பட்டபோது, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, பனைமரங்களைப் பாதுகாக்க என்ன செய்தது என அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டதோடு, அனுமதியின்றிப் பனைமரத்தை வெட்டுவோருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது.
இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 18 அன்று, பனைமரத்தைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இனி அரசு அனுமதித்தால் மட்டுமே ஒருவர் பனைமரத்தை வெட்ட முடியும். ‘தேவை உள்ளவர்கள், தமிழக அரசின் ‘உழவர்’ செயலியில் பதிவுசெய்ய வேண்டும்; இதற்காக மாவட்ட ஆட்சியர், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ஆகியோர் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்படும்; அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து காரணத்தை ஏற்றால்தான், அனுமதி அளிக்கப்படும்’ என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு பனைமரத்தை வெட்டினால், புதிதாக 10 மரங்களை நட்டு வளர்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், இத்தகைய நடைமுறைகள் முறைகேடுகளுக்கு வழிவகுத்துவிடக் கூடாது. செல்வாக்கு கொண்டவர்கள் எளிதாக அனுமதி பெறுவதும் ஏழை விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதுமான முரண்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அதிகாரிகளின் கையில்தான் உள்ளது. அரசுக் குழுக்களில் பனையோடு தொடர்புடைய மக்கள் பிரதிநிதி யாரும் இல்லை என்பது இன்னொரு குறை.
பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் பனைவிதைகளை நடவும் பனை விளைபொருள்களிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்திசெய்யவும் தமிழக அரசு பயிற்சி அளித்துவருகிறது. பனைமரத்தை முழுமையாகப் பயன்படுத்த விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டாலே, பனைமரத்தைத் தங்கள் சொத்தாகக் கருதும் மனநிலைக்கு அவர்கள் திரும்பிவிடுவார்கள். பனைமரத்தை வெட்ட, தவிர்க்க முடியாத சூழலில் அனுமதிப்பதற்கும் குறுகிய நோக்கத்துக்காக வெட்ட மறுப்பதற்குமான இந்த நடவடிக்கை அரசுக்கு ஒரு சவால்தான். அதை அரசு உறுதியோடு எதிர்கொள்ள வேண்டும்.