தலையங்கம்

அரசியல் கட்சிக் கூட்டங்கள்: விதிகள் பொதுவானவையாக இருக்கட்டும்

செய்திப்பிரிவு

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து எழும் அதிருப்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த விதிமுறைகள் உதவும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 13 முதல் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறார். இந்தப் பிரச்சாரத்துக்கு அனுமதி தரக் கோரிக்கைவிடுத்து அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு எந்தப் பாரபட்சமும் இன்றி உடனுக்குடன் காவல் துறை அதிகாரிகள் அனுமதி வழங்க அறிவுறுத்த வேண்டும்; தமிழ்நாடு காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று தவெக தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது. தங்களுக்கு விதிக்கப்படுவதைப் போல மற்ற கட்சிகளின் கூட்டங்களுக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படுவதில்லை என்று தவெக தரப்பு வாதிட்டது.

செப்டம்பர் 13 அன்று தவெக தலைவர் விஜய், திருச்சி விமான நிலையத்திலிருந்து நகரின் மையப் பகுதியான மரக்கடைக்குச் செல்வதற்கு 4 - 5 மணி நேரம் பிடித்திருக்கிறது. இதனால், திருச்சி நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கட்சித் தலைவரைக் காணும் ஆவலில் மக்கள் கூடுவதைத் தடுக்க முடியாது என்பது உண்மைதான்.

ஆனால், தலைவரின் வாகனத்தைப் பின்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வாகனங்கள் வருவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டாக வேண்டும். இதை நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டியது கட்சித் தலைமையின் பொறுப்பு. செப்டம்பர் 20இல் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டங்களுக்கு அக்கட்சித் தலைமை இந்த அறிவுறுத்தல்களை வழங்கியது.

இதேபோல உயரமான இடங்களில், ஆபத்தான முறையில் தொண்டர்கள் ஏறி நின்றதாகவும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததாகவும் அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பவர்களிடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும்; தவறினால் நீதிமன்றம் தலையிடும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பவர்களிடமிருந்து இழப்பீடு பெறவும் நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் 2021இல் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

இந்த எச்சரிக்கை அனைத்துக் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் பொதுவானதுதான். அரசியல் கட்சிகள் / அமைப்புகள் மக்கள் பாதிக்கப்படும் வகையில் செயல்படுவதும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பதும் சமூகப் பொறுப்பற்ற செயல் என்பதை உணர வேண்டும். இவற்றைத் தடுக்கும் கடமை காவல் துறைக்கு இருந்தாலும், அரசியல் கட்சிகளுக்குக் கூடுதல் சுயபொறுப்பு உண்டு.

பொதுவாக, மக்கள் திரளாகக் கூடும் இடங்களுக்குக் கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் வருவதைத் தவிர்க்கும்படி அனைத்து அரசியல் கட்சிகளுமே வலியுறுத்தலாம். அதே வேளையில், அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிற விஷயத்தைப் புறந்தள்ள முடியாது.

அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொண்டர்கள் வர வேண்டும் என்றும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கக் கூடாது என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும்போது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஆளும் கட்சி எந்த நெருக்கடியும் நிபந்தனைகளும் இன்றி அனுமதி பெறுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. எனவே, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகளை அரசு வகுப்பது, இதுபோன்ற சர்ச்சைகள் எழுவதைத் தடுக்கும். விதிகளும் வழிகாட்டுதல்களும் அனைவருக்கும் பொதுவானவை என்கிற நியதியை அரசு உறுதிப்படுத்த வேண்டும்!

SCROLL FOR NEXT