வட கிழக்குப் பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி, மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலத்திலும் அதற்குப் பிந்தைய நாள்களிலும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் மக்களிடையே பரவிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்காக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் அனைவரும் கள ஆய்வில் ஈடுபட்டு, 20 நாள்களுக்குள் திட்ட அறிக்கையைத் தயாரிக்கும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் மலேரியாவின் தாக்கம் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2012 – 2024 வரையிலான காலக்கட்டத்தில் 78% மலேரியாவையும் அது தொடர்பான இறப்புகளையும் ஒழித்துவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 2022 - 2024இல் 160 மாவட்டங்கள் மலேரியா இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2030க்குள் மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்கும் பணியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது; மாநிலங்களுக்கு டெங்கு, சிக்குன்குனியா பரிசோதனைக் கருவிகளை இந்த ஆண்டு கொடுத்திருக்கிறது.
கோடைக்காலத்தைவிட மழைக்காலத்தில் பரவும் நோய்கள்தான் நம் நாட்டில் அதிகம். குறிப்பாக, கொசுக்களின் பெருக்கத்தால் பரவும் நோய்கள் மக்களைப் பெருமளவில் பாதிக்கக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 27,378 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்; 13 பேர் இறந்தனர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக கேரளத்தில் 128 பேர் டெங்குவால் உயிரிழந்தனர். 2025இல் மார்ச் வரை தமிழ்நாட்டில் 5,535 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 2 பேர் மரணமடைந்தனர்.
இந்த ஆண்டு இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக கேரளத்தில் டெங்கு பாதிப்பு அதிகம். பொதுவாக, மருத்துவமனைகளில் பதிவாகும் எண்ணிக்கையைப் பொறுத்ததுதான் இந்தக் கணக்கீடு என்பதால், டெங்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கே செல்லாதவர்கள் இந்தப் பட்டியலில் விடுபட்டிருக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பு மேம்பட்டிருப்பதாலும் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாலும் டெங்கு பாதிப்புக்கு ஆளானதுமே பெரும்பாலானோர் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்பதாகவும் இதைக் கருதலாம்.
இருந்தபோதும் மூன்று மாதங்களில் 5,000க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மழைக்காலம் தொடங்கவிருப்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். அதனால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் அரசு இப்போதே கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும்.
மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளில்தான் கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகும் என்பதால், சுற்றுப்புறத்திலும் வீடுகளிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். கொசு ஒழிப்பு நடைமுறைகளைச் செயல்படுத்துவதோடு, அவை சீரான இடைவெளிகளில் நடைபெறுவதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் குடிநீரால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
மழைக்கால நோய்களை எதிர்கொள்ளும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி, மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருப்பதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை, சிகிச்சை, மருந்து - மாத்திரைகள் கையிருப்பு, உள்ளிருப்பு நோயாளிகளுக்கான படுக்கைகள், சுகாதாரமான மருத்துவமனை வளாகம் போன்றவையே நோய்ப் பரவலில் இருந்து மக்களை மீட்கும். தீவிரக் கண்காணிப்பு, சிகிச்சை, கொசுக்களின் உற்பத்தி ஆதாரத்தை அழித்தல், மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி மழைக்கால நோய்களின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் பொறுப்பு.