தலையங்கம்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் காக்கப்பட வேண்டும்

செய்திப்பிரிவு

ஆண்டுக்கு ரூ.3,000 கோடி மதிப்பில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுவந்த நிலையில், இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் 50% வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதனால், ஏற்றுமதி 70% அளவுக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருப்பூர், நொய்டா, சூரத் ஆகிய நகரங்களில் உள்ள ஜவுளி / ஆடை உற்பத்தியாளர்கள் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்கள். இந்நிலையில், திருப்பூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் எதிர்காலத்தைக் காக்க வேண்டும் என்கிற குரல் தமிழக முதல்வரிடமிருந்து எழுந்திருக்கிறது.

ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, உக்ரைன் போர் தொடர்ந்து நடத்தப்படுவதற்குக் காரணமாக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். உக்ரைன் போரில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டைக் காரணம் காட்டித்தான் 50% வரியை டிரம்ப் விதித்திருக்கிறார். இந்தியா போன்ற இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் வர்த்தகப் போர் என்றே இது கருதப்படுகிறது.

ஜவுளி உற்பத்தி / ஏற்றுமதிக்குப் புகழ்பெற்ற திருப்பூர் இதில் பெரும் பாதிப்பைச் சந்திக்கவிருக்கிறது. இந்திய ஜவுளித் துறையில் தமிழத்தின் பங்கு மிக அதிகம். இதில் திருப்பூரின் பங்கே முதன்மையானது. 2024-25இல் திருப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரித்திருந்த நிலையில், டிரம்ப் அரசின் இந்த முடிவால் திருப்பூர் ஜவுளி / ஆடை உற்பத்தியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகள் குறைந்த விலைக்கு இதே பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலையில் நிலைமை சிக்கலாகியிருக்கிறது.

இதையடுத்து, ‘அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு தமிழ்நாட்டின், குறிப்பாகப் பின்னலாடை மையமான திருப்பூரின், ஏற்றுமதி வர்த்தகத்தினைப் பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் பாதிப்படைந்துள்ளது’ எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். 50% வரிவிதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளைச் சரிகட்டச் சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.
திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து, தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டால், நிலைமை சரியான பின்னர் அவர்கள் திரும்பி வருவதற்கான சாத்தியம் குறைவு என்றே கருதப்படுகிறது. அமெரிக்காவுக்கு மாற்றாக பிற நாடுகளுடன் வர்த்தக உறவை ஏற்படுத்துவது உடனடியாகச் சாத்தியமாகும் விஷயமும் அல்ல.

இத்தகைய சூழலில், இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 25ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றிருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளில் முதன் முறையாக சீனா சென்றிருக்கிறார் பிரதமர் மோடி. ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வரிவிதிப்பு நெருக்கடிக்கு நடுவில், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அத்துடன் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுடன் உருவாக்கப்பட்ட ‘குவாட்’ அமைப்புக்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமா என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

மறுபுறம், செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா மேலும் அதிகரிக்கும் எனச் செய்திகள் வெளியாகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் கவனமாகக் காய் நகர்த்துவது அவசியம்!

SCROLL FOR NEXT