தலையங்கம்

நாடாளுமன்ற நேரம் வீணடிக்கப்படக் கூடாது!

செய்திப்பிரிவு

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையிட்டதாக எழுந்திருக்கும் புகார்கள், பிஹார் தேர்தலை ஒட்டி வாக்காளர்கள் நீக்கம் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

விவாதங்களை எதிர்க்கட்சியினரும் ஆளுங்கட்சியினரும் ஆரோக்கியமாகக் கொண்டுசெல்கின்றனரா என்பது முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. ஜூலை 21ஆம் தேதி தொடங்கியிருக்கும் இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், முதல் மூன்று நாட்களில் மக்களவையும் மாநிலங்களவையும் முடங்கின.

தெருவில் போராட்டம் நடத்துவதுபோல நடந்துகொள்வதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கண்டிக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் ஆவேசம் காட்டின. ஒருவழியாக, முக்கிய விவகாரங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எனினும் இந்த விவாதங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இதுவரை நடந்திருக்கின்றன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 100 நாள்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் அது தொடர்பாகக் காத்திரமான விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், பழிச்சொற்கள் என்றே இரு தரப்பும் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்துவருகின்றன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா தொடங்கிய போரை (ஆபரேஷன் சிந்தூர்) தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிவருவது குறித்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைக்க, அதற்கு மேலோட்டமான பதிலைப் பிரதமர் அளிக்க... விவகாரம் இன்னும் சிக்கலாகிக்கொண்டே செல்கிறது.

ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில், இன்னொரு நாட்டின் தலைவரான டிரம்ப்பைப் பொய்யர் என விளிக்கச் சொல்லி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியது பொருத்தமற்றது. அதேவேளையில், தானே போரை நிறுத்தியதாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் டிரம்ப் கூறிவரும் நிலையில், அதற்குப் பதிலடியாக உறுதியான முறையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளித்திருக்க வேண்டும்.

இந்த விவாதம் நடந்துகொண்டிருந்தபோதே, இந்தியா - பாகிஸ்தான் போரை வர்த்தகக் காரணங்களை முன்வைத்து தான் நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேசியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆனால், பாகிஸ்தானின் ரிமோட் கண்ட்ரோலாக காங்கிரஸ் இருப்பதாகவும், பயங்கரவாதிகளின் மொழியில் எதிர்க்கட்சிகள் பேசுவதாகவும் ஆளுங்கட்சி சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த இரண்டு அணுகுமுறையும் விமர்சனத்துக்குரியது.

உண்மையில், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்ததாகக் கூறப்படுவது போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த கருத்துகள் புறந்தள்ள முடியாதவை.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீரை விருந்துக்கு அழைத்தது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்பு அமைப்பில் பாகிஸ்தானுக்கு இடம் அளித்தது போன்றவை - இந்தியாவைவிடவும் பாகிஸ்தானுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது போன்ற தோற்றத்தை அளிக்கின்றன.

அதேவேளையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு மட்டுமல்ல பல்வேறு நாடுகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில்தான் நடந்துகொள்கிறார்.

ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரியும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கும் டிரம்ப், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம் என்றும் இந்தியாவைச் சீண்டியிருக்கிறார்.

தேசநலன், பாதுகாப்பு தொடர்பான இந்த விவகாரங்களில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கருத்தொற்றுமையுடன் இணைந்து செயலாற்றுவதுதான் ஆரோக்கியமானது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடக்க அனுமதி அளிப்பது அரசின் கடமை என்றால், கிடைக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுப்பது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு.

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் முக்கியமான கேள்விகளுக்கு அரசு அளிக்கும் விளக்கம், எதிர்க்கட்சிகளுக்கானது மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்துக்குமானது. நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுவது, ஜனநாயகத்துக்கு அழகல்ல!

SCROLL FOR NEXT