தலையங்கம்

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு எப்போது?

செய்திப்பிரிவு

அரசுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றிவரும் ஊழியர்களும் ஓய்வுபெற்ற ஊழியர்களும் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட முடிவை அறிவிக்க உள்ளதாக சிஐடியு தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களும் ஓய்வூதியர்களும் அவ்வப்போது இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுப்பதும், அந்தப் போராட்டங்களுக்கு அரசிடமிருந்து சாதகமான பலன் கிடைக்காமல் போவதும் துரதிர்ஷ்டவசமானது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஏறக்குறைய 1.20 லட்சம் ஊழியர்களும், 94,000 ஓய்வூதியர்களும் உள்ளனர். பொதுத் துறையின்கீழ் வரும் அரசுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதியப் பணப்பலன்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வழங்கப்பட்டுவிட வேண்டும்.

ஆனால், போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இந்தப் பணப்பலன்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்கிற குறைபாடு நீண்ட காலமாகவே உள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த பணப்பலன்களை வழங்க 2023இல் ரூ.1,030 கோடியை அரசு ஒதுக்கியது. இப்படித்தான் காலதாமதமாகப் பணப்பலன்கள் வழங்கப்படுகின்றன.

110 மாதங்களாக வழங்கப்படாமல் இருந்த அகவிலைப்படி உயர்வு நீதிமன்றத்தின் அழுத்தங்களுக்குப் பிறகு 2025 பிப்ரவரியில் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டது. அத்தொகையும் குறைவானது என்கிற விமர்சனமும் உண்டு. இந்தச் சூழலில் அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் அண்மையில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றாவிட்டால், ஆகஸ்ட் 5, 6, 7 ஆகிய தேதிகளில் தருமபுரியில் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாட்டில் அடுத்த கட்ட முடிவை அறிவிக்க உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

பொதுவாக, பொதுத் துறையின்கீழ் வரும் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாகப் போக்குவரத்து ஊழியர்களும் ஓய்வூதியர்களும் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கப் போராட்டங்கள் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுவது வருந்தத்தக்கது.

அரசு இதுபோன்ற காலதாமதத்துக்குப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதைக் காரணமாகச் சொல்வதாகப் போக்குவரத்து ஊழியர்களும் ஓய்வூதியர்களும் குற்றம்சாட்டுகின்றனர். அகவிலைப்படி என்பது பணவீக்கத்தின் தாக்கத்தைத் தணிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கும் கொடுப்பனவுத் தொகை (அலவன்ஸ்).

இச்சலுகையை அரசின் பிற துறைகளில் பணியாற்றுபவர்களும் ஓய்வூதியர்களும் அனுபவிக்கும் நிலையில், போக்குவரத்துத் துறை ஓய்வூதியர்களுக்கு மட்டும் இதில் பாகுபாடு காட்டுவது நியாயமற்றது. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரிக்கைவிடுத்துப் போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர் சங்கங்கள் அனைத்துமே போராடிவருகின்றன.

இது பற்றி ஆராயத் தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்து, அக்குழு செப்டம்பரில் அறிக்கை அளிக்கும் என்று தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று திமுக அளித்திருந்த தேர்தல் வாக்குறுதி ஊழியர்களிடம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பை அரசு புறந்தள்ள முடியாது.

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் இனியாவது உரிய நேரத்தில் அரசின் சலுகைகள் கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். குறிப்பாக, ஓய்வூதியர்களுக்குப் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றைத் தாமதமின்றி உரிய நேரத்தில் அரசு வழங்க வேண்டும். அவர்களுடைய பணத்தை வழங்குவதற்கு காரணங்களைத் தேடக் கூடாது. மற்ற அரசுத் துறை ஊழியர்கள், ஓய்வூதியர்கள்போல போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் நிம்மதியாக வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT