‘அரசுப் பள்ளிகளில் உடற்கல்விப் (physical education) பாடத்துக்கான நேரத்தை ஆசிரியர்கள் பிற பாடங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது’ எனத் தமிழ்நாட்டின் துணை முதல்வரும் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்திவருவது வரவேற்கத்தகுந்தது. அதேவேளையில், விளையாட்டில் மாணவர்களின் திறனை அதிகரிக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத் தடைகளாக உள்ள சில பற்றாக்குறைகள் சரிசெய்யப்படுவதும் அவசியம்.
விளையாட்டு இல்லாமல் கல்வி முழுமை அடைவதில்லை. அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ அதன் வளாகத்தில் விளையாட்டுத் திடல் இருக்க வேண்டும் என்பது பள்ளிக்கான அரசின் அங்கீகாரத்தை நிர்ணயிப்பதாக உள்ளது. ஒரு மாணவர் வாரத்தில் குறிப்பிட்ட சில நாள்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்பதை இந்த விதிமுறை உறுதிப்படுத்துகிறது. எனினும் கணக்கு, அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், விளையாட்டுக்கு அளிக்கப்படுவதில்லை.
தனியார் பள்ளி நிர்வாகங்கள் விளையாட்டுக்கான கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் பெற்றோரின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலையில், அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் விளையாட்டு வகுப்புகளைப் பெரும்பாலும் சம்பிரதாயமாகவே அணுகுகின்றன. உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட அம்சங்களில் அரசுப் பள்ளிகள் பின்தங்கியே காணப்படுகின்றன.
உதயநிதி விளையாட்டுத் துறைக்கான அமைச்சரானதில் இருந்து, இந்த நிலையை மாற்ற முயல்கிறார். 2022இல் செஸ் ஒலிம்பியாட் போட்டியும் 2024இல் கேலோ இந்தியா போட்டியும் அவரது முன்னெடுப்பால்தான் தமிழகத்தில் நடைபெற்றன. சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற 5,788 பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா ஜூலை 22 அன்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய உதயநிதி, “பள்ளிகளில் விளையாட்டுக் கல்விப் பாடத்துக்கான நேரத்தைப் பிற பாடங்களுக்காகக் கடன் வாங்கக் கூடாது” எனக் கூறியுள்ளார். இதற்கு முன்னரும் ஒரு நிகழ்வில், அவர் இதை அறிவுறுத்தியிருக்கிறார். அமைச்சர் என்பதோடு, துணை முதல்வர் பொறுப்பிலும் உள்ள ஒருவர் அக்கறையோடு கூறும் அறிவுரை செவிமடுக்கப்பட வேண்டும்.
கூடவே, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான சங்கங்கள் நீண்ட காலமாக முன்வைத்து வரும் கோரிக்கைகளையும் நினைவூட்ட வேண்டியுள்ளது. 1997ஆம் ஆண்டு அரசாணையின்படி, உயர்நிலைப் பள்ளியில் 250-400 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் இருக்க வேண்டும்.
கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு 300 பேருக்கும் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 11, 12 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த ஒவ்வொரு 400 பேருக்கும் ஓர் உடற்கல்வி இயக்குநர் இருக்க வேண்டும். இதுவே முழுமையாகப் பின்பற்றப்படாத நிலையில், 2024 ஜூலை 2இல் தமிழக அரசு இந்த விகிதத்தை 700 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என மாற்றியது. இதன் மூலம் ஒரே ஆசிரியர் அதிக மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்.
மேலும், ஏராளமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. மாணவர்களை வெளியூர்ப் போட்டிகளுக்கு அழைத்துச்செல்லப் போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் புரவலர்களையே சார்ந்திருக்கின்றனர். மண்டல அளவிலான போட்டிகள் அருகமை பகுதிகளில்தான் நடைபெறுகின்றன.
ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் மாணவர்களைப் போட்டிகளுக்குக் கூட்டிச் செல்கின்றனர். மாணவர்களால் மாவட்ட, மாநிலப் போட்டிகளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நிதிப் பற்றாக்குறையால் பல ஏழை எளிய மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போகிறது.
பள்ளிக்கல்வித் துறையும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் இணைந்து செயல்பட்டு இத்தகைய அடிப்படைக் குறைபாடுகளை நீக்கினாலே, அரசுப் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் சிகரம் தொடுவார்கள் என்பதைத் தமிழக அரசு மறந்துவிடக் கூடாது.