தலையங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: அரசின் பொறுப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயதுச் சிறுமி, பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தச் சம்பவம் நடந்து 10 நாள்களுக்கு மேல் கடந்துவிட்ட பிறகும் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரிக்கிறது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்படும் குற்றங்கள் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024இல் 52.3% அதிகரித்துள்ளன. ஒருபக்கம் குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் மறுபக்கம் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் ‘பதிவுசெய்யப்படும் குற்றங்க’ளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் இதைக் கொள்ளலாம்.

எப்படி இருந்தபோதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தபடி இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. பாலியல் குற்றங்கள் குழந்தைகளை உடலளவிலும் மனதளவிலும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியவை. அதனால்தான் இதுபோன்ற வழக்குகளில் உடனுக்குடன் நீதி வழங்கப்பட வேண்டும் எனச் சட்டம் வலியுறுத்துகிறது.

ஆனால், இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் விரைவு சிறப்பு நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகள், சட்டம் நிர்ணயித்த காலத்தைக் கடந்து குழந்தைகள் நீதிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன. அதேபோல் குழந்தைகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதிலும் அவர்களது உடல் - உள நலனை மேம்படுத்துவதிலும் அரசு முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

2024 அக்டோபர் நிலவரப்படி தமிழகத்தில் போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்றங்களில் 4,985 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கடந்துவருவதே மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில், நீதிக்காக அவர்களைக் காத்திருக்க வைப்பது அவர்களின் வாழ்வுரிமைக்கு எதிரானது.

போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையிலும் இதுபோன்ற குறைபாடுகளைக் களையும் வகையிலும் திருநெல்வேலி (வள்ளியூர்), கடலூர் (முஷ்ணம்), திருவள்ளூர் (ஆவடி) உள்ளிட்ட 14 மாவட்டங்களில் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட இருப்பதாகச் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

தாய் - தந்தை இருவரும் வேலைக்குச் செல்வதால் தனித்து இருக்கும் குழந்தைகள், முறைசாராத் தொழில்களிலும் கூலித்தொழில்களிலும் ஈடுபடுவோரது குழந்தைகள் என எளிய பின்புலம் கொண்டவர்களே குற்றவாளிகளின் இலக்காக இருக்கிறார்கள். சிலநேரம், பள்ளிகளிலேயே பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சூழலில் பள்ளிகளிலும் பொதுவெளிகளிலும் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

பள்ளி நேரத்துக்குப் பிறகு பெண் குழந்தைகள் தனித்துவிடப்படுவதைத் தவிர்க்கப் பள்ளியிலேயே குழந்தைகளுக்கான குறுகிய நேரத் தங்கும் மையங்களைப் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் ஒத்துழைப்போடு அரசு அமைக்கலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலர் வரும்வரை குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுவிட்டால், குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்கலாம்.

பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வைப் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் தமிழக அரசு ஏற்படுத்திவருவது பாராட்டுக்குரியது. ஆனால், காவல் துறைத் தரவுகளின்படி பாதிக்கப்பட்டவர்களோ அவர்களது குடும்பத்தினரோ நேரடியாகப் புகார் செய்வது குறைந்திருக்கிறது. சமூக நலத் துறை மூலமும் பாதிக்கப்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் செல்லும்போது மருத்துவமனைகள் வாயிலாகவும்தான் அதிகக் குற்றங்கள் பதிவாகின்றன.

போக்சோ புகார்களைப் பதிவுசெய்வதில் காவல் துறையினரின் அணுகுமுறைக்குப் பயந்தே பலர் நேரடியாகக் காவல் நிலையங்களுக்குச் செல்வதில்லை என்கிற விமர்சனமும் நேரடிப் புகார் பதிவு குறைந்ததற்குக் காரணம். போதுமான நீதிமன்றப் பணியாளர்கள் இல்லாததும் போக்சோ வழக்குகளின் தேக்கத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற நிர்வாகக் குறைபாடுகளால், ஒரு குழந்தை தனக்கான நீதிக்காகக் காத்திருப்பது என்பது ஒரு வகையில் அந்தக் குழந்தைக்கு இழைக்கப்படும் அநீதி. ஒவ்வொரு குழந்தையின் வளமான எதிர்காலத்தைக் கட்டமைக்கும் சமூகத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிடாமல் காப்பது அரசுகளின் கடமை.

SCROLL FOR NEXT