தலையங்கம்

மருத்துவக் கழிவு விவகாரம்: அரசு நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவைக் கொட்டினால் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யும் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் மருத்துவக் கழிவைப் பொதுவெளியில் கொட்டும் போக்கைத் தடுக்க இச்சட்டம் உதவும். அபாயகரமானதாகக் கருதப்படும் மருத்துவக் கழிவு, உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின்படி கட்டாயமாக அகற்றப்பட வேண்டும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே கேரளத்திலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள் ரகசியமாகத் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கொட்டும் போக்கு நீடித்துவருகிறது. ஏற்கெனவே 2018இல் கேரள மருத்துவக் கழிவைத் தமிழகத்தில் கொட்ட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. என்றாலும், இந்தப் போக்கு நின்றபாடில்லை.

2023இல் கேரள மருத்துவக் கழிவுகள் தென்காசி மாவட்டத்தில் கொட்டப்பட்ட விவகாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி தொடர்பான வழக்கில், மருத்துவக் கழிவைக் கொட்டுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுறுத்தியது.

திருநெல்வேலியில் 2024 டிசம்பரில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில், கேரள அரசு செலவில் அந்த மருத்துவக் கழிவை மீண்டும் எடுத்துச்செல்ல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதும் நினைவுகூரத்தக்கது.

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது தொடரும் நிலையில், 2025-26 தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், தமிழகத்தில் பொது இடங்கள், நீர்நிலைகளில் முறையற்ற வகையில் மருத்துவக் கழிவைக் குவித்தாலோ, அண்டை மாநிலங்களிலிருந்து அவற்றைக் கொண்டுவந்து கொட்டினாலோ தொடர்புடைய நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இதற்காக தமிழ்நாடு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1982, உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஆகிய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததன் மூலம் ஜூலை 8 முதல் அச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இதன் மூலம் சட்டவிரோதமாக இனி மருத்துவக் கழிவைப் பொதுவெளியில் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்பது வரவேற்கத்தக்கது. அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் அம்சமும் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.

தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர், கள்ளச்சாராயம், சைபர் குற்றங்கள், மணல் கடத்தல், பாலியல் குற்றவாளிகள் உள்ளிட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டர் தடுப்புக் காவல் நடவடிக்கையில் மருத்துவக் கழிவைக் கொட்டுவதும் சேர்க்கப்பட்டிருப்பது மக்கள், சுற்றுச்சூழல் நலன் சார்ந்த நடவடிக்கை.

அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டுவந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவைக் கொட்டுவோருக்கும் இது பொருந்தும் என்பது இதில் ஈடுபடும் நபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. இதன்மூலம் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்படும் போக்கு குறையும் என்று நம்பலாம்.

அதேநேரத்தில் உள்ளூரில் உயிரி, மருத்துவக் கழிவுகள் முறைப்படி மேலாண்மை செய்யப்பட்டு, அகற்றப்படுகின்றனவா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும். அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவைத் தமிழ்நாட்டுக்குள் கொண்டுவர முடியாதபடி சோதனைச் சாவடிகளை வலுப்படுத்த வேண்டும்.

மேலும் மருத்துவக் கழிவைக் கேரள மாநில அரசே தடுத்து நிறுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசு அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அபாயகரமான மருத்துவக் கழிவுகள் எந்த ரூபத்திலும் தமிழ்நாட்டுக்குள் வராமல் இருப்பதை உறுதிசெய்ய இதுபோன்ற ஆக்கபூர்வமான தொடர் நடவடிக்கைகளும் தேவை.

SCROLL FOR NEXT