பகுதி நேர ஆசிரியர்கள் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் 12 நாள்களுடன் முடிவுக்கு வந்துள்ளது. பணி நிரந்தரக் கோரிக்கைக்காக அவர்கள் அடிக்கடி போராடும் நிலை முடிவுக்கு வர வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் உடற்கல்வி, கணினி அறிவியல் போன்ற சிறப்புப் பாடங்களைக் கற்பிக்கப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கான அரசாணை 2011இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டது.
2012இல் 7,000 பள்ளிகளில் 16,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் நடைபெற்றது. இவர்கள் வாரத்துக்கு மூன்று வகுப்புகள் எடுக்கின்றனர்.
பணி ஓய்வு, இறப்பு, வேறு பணிக்குச் செல்லுதல் போன்ற காரணங்களால் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுத் தற்போது ஏறக்குறைய 12,000 பகுதி நேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருகின்றனர். 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு மே மாத ஊதியம், மருத்துவக் காப்பீடு, பண்டிகை முன்பணம் போன்றவை கிடையாது.
எனினும், வாரத்துக்கு 3 அரை நாள்கள் மட்டும் பணிபுரிந்தால் போதுமானது என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது; மாதத்துக்கு நான்கு பள்ளிகளில் பணிபுரிந்தால்கூட ரூ.20,000 ஊதியமாகப் பெற முடியும் என்கிற நம்பிக்கையில் பலர் இப்பணியில் சேர்ந்தனர். ஆனால், இவர்கள் ஒரு பள்ளியில் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர்.
ஊதிய உயர்வுக்காகவும் பணி நிரந்தரத்துக்காகவும் காலப்போக்கில் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்; பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். முந்தைய அதிமுக ஆட்சியில் இவர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.10,000 ஆனது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்கள் ஆக்குவோம் என்கிற வாக்குறுதியை 2016, 2021 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக முன்வைத்தது.
எனினும், ஆட்சிக்கு வந்த பின்னர் இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. செப்டம்பர், 2023இல் நடந்த போராட்டத்தை அடுத்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ரூ.2,500 ஊதிய உயர்வு, ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். ஜனவரி, 2024 அரசாணை மூலம் ஊதிய உயர்வு மட்டும் அமலுக்கு வந்தது.
பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியத்தில் ரூ.10,000 மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழும், ரூ.2,500 மாநில அரசு நிதியிலிருந்தும் பெற்று வந்தனர். மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அமல்படுத்தாததால், மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்திருப்பதாகவும், தற்போது மாநில அரசே மொத்த நிதியையும் ஒதுக்க வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தகுந்த நிதி ஆளுமைத் திறனோடு இவர்களது ஊதியத்துக்கான வருவாய் ஆதாரங்களை அரசு உருவாக்க முடியும். மத்தியில் ஆட்சி புரியும் பாஜகவின் தமிழகத் தலைவர்களும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை ஆதரிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவின் ஏற்ற இறக்கம், மாநிலத்தின் கல்வியைப் பாதிக்கக் கூடாது.
பல்வேறு கவனச்சிதறல்களால் மாணவர்கள் பாதை மாறி விடுகிற பல சம்பவங்களைக் காண முடிகிறது. சிறப்புப் பாடங்கள் அதற்கான சாத்தியங்களைத் தடுத்து, அவர்களுக்கு வாழ்க்கை மீது பிடிப்பை ஏற்படுத்தக்கூடியவை.
பதின்மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யக் கோரும் பகுதி நேர ஆசிரியர்களை அரசு பரிதவிக்க விடக் கூடாது. கல்வி உள்ளிட்ட எந்தத் துறையிலும் ஊழியர்களை நிச்சயமற்ற நிலையில் நிறுத்துகிற இது போன்ற பணிநியமனங்களை இனியாவது தவிர்ப்பது நல்லது.