சான்றிதழ் வழங்குவதற்குக் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், “ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநரகம் வலுப்படுத்தப்பட வேண்டும்; தனக்கு வரும் புகார்களைப் பிற துறைகளுக்கு அனுப்பிவைத்துத் தபால் அலுவலகம்போல அந்தத் துறை செயல்பட முடியாது” என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் நிலையில், இதுபோன்ற தீர்ப்புகள் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பவையாக உள்ளன. மதுரையைச் சேர்ந்த மலர்ச்செல்வி என்பவர் தனது பூர்விகச் சொத்துகள் சிலவற்றைப் பெறுவதற்காகச் சட்டபூர்வ வாரிசுச் சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்தார். சான்றிதழ் அளிக்கக் கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் பெற்றது குறித்து, ஊழல் தடுப்பு - கண்காணிப்பு இயக்குநரகத்தில் அவர் புகார் செய்தார்.
அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை அவர் அணுகினார். அண்மையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இது மிகத் தீவிரமான பிரச்சினை எனக் குறிப்பிட்டதோடு, இது குறித்து விசாரிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும் ஊழல் தடுப்பு - கண்காணிப்பு ஆணையருக்கும் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது புகார் பதிவுசெய்யவும் உத்தரவிட்டார்.
அரசு அதிகாரிகள் தங்கள் கடமையிலிருந்து பிறழக் கூடாது என்பதற்காக 1964இல் லஞ்ச ஒழிப்புத் துறை உருவாக்கப்பட்டது. கடமையைச் செய்ய அல்லது அது சார்ந்த பணிகளைச் செய்ய அரசு நிர்ணயித்திருக்கும் ஊதியம் தவிர, பிற பலன்களைப் பெற்றுக்கொள்வதோ, தன்னைச் சார்ந்தவருக்குத் தரும்படி வலியுறுத்துவதோ சட்டப்படி குற்றம்.
இத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அபராதத்துடன் சிறைத் தண்டனையும் உண்டு. ஆனால், கடைநிலையில் தொடங்கி உயரதிகாரிகள்வரை அரசு ஊழியர்களில் சிலர் சட்டம் குறித்த எவ்வித அச்சமும் இன்றி மக்களிடம் பணமோ வேறு பொருளாதாரப் பலனோ பெறுகின்றனர்.
எத்தனையோ பேர் புகார் கொடுக்கத் தயங்கி, பணத்தைக் கொடுத்து ஏமாறுவதும் நடக்கிறது. அரசு அலுவலகங்களில் பணம் கொடுத்தால்தான் பணி நடக்கும் என்கிற நிலை அரசின் செயல்பாடு மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைத்துவிடும். அரசு இதைச் சரிசெய்வதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில், “ஊழலை எதிர்த்துப் போராடுவது என்பது அரசமைப்புச் சட்டத்தின் கட்டாயம்; அது விருப்பக் கொள்கை அல்ல” எனக் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி புகழேந்தி.
மேலும், மலர்ச்செல்வியின் புகாரில் போதுமான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்கிற ஊழல் தடுப்பு - கண்காணிப்புத் துறையின் வாதத்தை விமர்சித்த நீதிபதி, ‘ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, உண்மை கண்டறியவும் அரசுத் துறை ஆவணங்களைப் பெறவும் அரசு அலுவலகங்களைச் சோதனையிடவும் அதிகாரம் பெற்றது’ எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தங்களிடம் போதுமான ஊழியர்கள் இல்லை என ஊழல் தடுப்பு - கண்காணிப்புத் துறை தெரிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது. 16.93 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கும் இடத்தில் 541 அதிகாரிகளே இருப்பதாகவும் ஆண்டுக்குச் சராசரியாக 15,000 கையூட்டுப் புகார்கள் பதிவுசெய்யப்படுவதாகவும், அத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதைக் கருத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி, போதுமான எண்ணிக்கையில் ஆறு மாதங்களுக்குள் ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
மக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களின் செயல்பாடுதான் ஒட்டுமொத்த அரசின் செயல்பாடுகளுக்குக் கட்டளைக் கல்லாக விளங்கும். இதில் சிறு மெத்தனம் காட்டினால்கூட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் கடமை உணர்வோடு நேர்மையுடன் பணியாற்றும் வகையில் அனைத்துத் தளங்களிலும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி, கண்காணிக்க வேண்டும். மக்கள் நல அரசின் தலையாய கடமை அது!