தமிழ்நாட்டின் 4 சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.276 கோடிக்குக் கட்டணம் நிலுவை வைத்திருப்பதும், அந்தச் சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் பேருந்துகளை இயக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை சென்றிருப்பதும் வருத்தம் அளிக்கின்றன. இதுபோன்ற பிரச்சினைகளில் மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது மாநில அரசின் பொறுப்பு.
மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டூர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர், நாங்குனேரி ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்குத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.276 கோடி நிலுவை வைத்திருப்பதாகக் கூறி, இந்த சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நிலுவைத் தொகையை உரிய காலத்தில் செலுத்தாமல் இருப்பது சரியல்ல’ என்றும், ‘இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மாநிலப் போக்குவரத்துத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை ஜூலை 10 முதல் இயக்க அனுமதிக்கக் கூடாது’ என்றும் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம், சுங்கச்சாவடி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக அரசுத் தரப்பில் கூறியதையடுத்து, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஜூலை 31 வரை உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்து, போக்குவரத்துக் கழகத்துக்கு அவகாசம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 67க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தச் சுங்கச்சாவடிகள் வழியாகப் பயணம் செய்வதற்கு கார், வேன், லாரி, தனியார் பேருந்துகள் உள்ளிட்டவை சுங்கக் கட்டணம் செலுத்தித்தான் செல்கின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகளும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்திய பின்னரே கடக்க முடியும். ஆனால், பல கோடி ரூபாய் வரை நிலுவை வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
ஏற்கெனவே அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஓய்வுபெறும் ஊழியர்களுக்குப் பணப் பலன்களை உரிய நேரத்தில் வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. தற்போது சுங்கச்சாவடிகளுக்கு உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தாமல் இருப்பதாக எழும் புகார்கள், நிதி நிர்வாகம் சார்ந்த கேள்விகளை அழுத்தமாக எழுப்புகின்றன.
இதுபோன்ற பிரச்சினைகள் நீடித்தால், அது மக்களைப் பாதிக்கும் என்பதையும், சுங்கச்சாவடிகளில் சட்டம் - ஒழுங்கு சார்ந்த பிரச்சினைகள் எழ வழிவகுத்துவிடும் என்பதையும் அரசு உணர வேண்டும். எனவே, நிலுவை இல்லாமல் கட்டணத்தைச் செலுத்தி பேருந்து சேவை பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
வழக்குத் தொடர்ந்த சுங்கச்சாவடி நிறுவனங்கள், ‘நிலுவைத் தொகை கிடைக்காததால் சாலைகளைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது’ என்பதைக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு, பழுதுபார்ப்புக்காகச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்ந்தாலும் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பும், பயணிகளுக்குத் தேவையான வசதிகளும் கிடைப்பதில்லை என்கிற புகார்கள் நீடிக்கின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காகச் செய்யப்பட்ட முதலீட்டை லாபத்துடன் எடுத்துவிட்டதால், சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கைகளும் கண்டுகொள்ளப்படுவதில்லை.
இந்தச் சூழலில், சுங்கச்சாவடிகளுக்கு நிலுவைத் தொகையைச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அதை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்குக் கொண்டுசென்று, கட்டணத்தை வசூலிக்கச் சுங்கச்சாவடி நிறுவனங்கள் முன்வர வேண்டும். மக்களின் வசதிக்காகவும் நலனுக்காகவும்தான் சாலைகளும் பேருந்துகளும் இருக்கின்றன. எனவே, எந்த விதத்திலும் பேருந்துப் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்கிற முனைப்புடன் செயல்பட வேண்டியது அரசின் கடமை!