சாலை விபத்துகளில் சிக்கித் தவிக்கும் மாநிலமாகத் தமிழகம் இருக்கும் சூழலில், அந்த நிலையை மாற்ற உடனடிச் செயல்திட்டம் தேவை எனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. மனித உயிர்களின் மதிப்பை ஆட்சியாளர்கள் உணர்ந்து, உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டிய தருணம் இது.
இந்திய அளவில் சாலை விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டுதான் உள்ளன. ஆண்டுக்குச் சராசரியாக 1,78,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகவும் இதில் 60% பேர் 18-34 வயதுக்கு உள்பட்டவர்கள் எனவும் 2024 டிசம்பரில் மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சாலை விபத்துகளைக் குறித்த புள்ளிவிவரங்களில் தமிழகம் முதன்மையாக இடம்பெறுவது வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான ஆய்வு, அதில் தொடர்புடைய பல்வேறு துறையினருடனான கலந்துரையாடல், தீர்வுகள் குறித்து விழிப்புணர்வைப் பரப்புதல் ஆகிய பணிகளில் ‘சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்டு சிவிக் ஆக் ஷன் குரூப்’(சிஏஜி) என்கிற தன்னார்வ அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் துறை வெளியிட்ட 2022ஆம் ஆண்டுக்கான தரவுகளை முன்வைத்து ஆய்வில் ஈடுபட்ட சிஏஜி அமைப்பு, அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு தரவுகளின்படி, சாலை விபத்துகள் அதிகம் நிகழ்ந்த மாநிலம் தமிழ்நாடு (64,105); அவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் (17,884) இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.
இதை முன்வைத்து சிஏஜி அமைப்பு, காலக்கெடுவுடன் கூடிய, நடைமுறைக்கு ஏற்ற, தெளிவான இலக்குடன் கூடிய செயல்திட்டம் தமிழகத்துக்கு உடனடித் தேவை என வலியுறுத்துகிறது. சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கு 2007லேயே தனிக் கொள்கையை உருவாக்கியதன் மூலம், தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கினாலும், தேவைக்கேற்ப அந்தக் கொள்கையில் மாற்றங்கள் செய்யவில்லை எனவும் சிஏஜி கூறுகிறது.
எனினும், தமிழ்நாடு காவல் துறை, மாநிலப் போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், 2024ஐவிட, 2025இல் (ஜனவரி-மே வரை) சாலை விபத்து மூலமான மரணங்கள் 13% குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வாகனங்களின் வேகம் கண்டறியும் கருவிகளைக் கண்காணிப்பில் பயன்படுத்துதல், சிசிடிவி கேமராக்களுடன், வாகன எண்ணைத் தானே படம்பிடிக்கும் ஒளிப்படக் கருவிகளை நிறுவுதல், வாகன உரிமையாளரின் கைபேசி எண்ணுக்கு விதிமீறல் குறித்த விவரத்தை அனுப்பி இணையவழியிலேயே அபராதத் தொகை செலுத்தச் செய்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாகவும் விபத்துகள் நிகழ்வதற்கான சூழலைக் கொண்ட 1,434 ‘பிளாக்-ஸ்பாட்’ பகுதிகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
2025இல் இதுவரை, முக்கியமான ஆறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டதாக 5,72,777 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் ஏறக்குறைய 94,000 பேர். 15 லட்சம் பேர் கைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியவர்கள்.
தமிழக அரசின் சாலை விபத்துகளைக் குறைப்பது சார்ந்த கொள்கைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பது முரணாக இருக்கிறது. 2023-204இல் சிறார்கள் வாகனம் ஓட்டுவதால் நேர்ந்த விபத்துகளிலும் தமிழகம் முதலிடம் இருப்பதாக 2025 மார்ச்சில் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்ட பத்து வயதுச் சிறுமி சௌமியா, தண்ணீர் லாரியில் சிக்கி இறந்ததற்குச் சாலையில் பள்ளம் இருந்ததும் ஒரு காரணம். சாலை விபத்துகளில் மறைமுகமாகப் பங்கு வகிக்கும் இத்தகைய காரணிகளும் அகற்றப்பட வேண்டும். அரசின் வலியுறுத்தல் இன்றி வாகன ஓட்டிகள் தாங்களாகவே விதிமுறைகளை மதிக்கப் பழகுவதும் மிக மிக அவசியம்.