தலையங்கம்

ரயில் விபத்துகள் தொடர்கதையாகக் கூடாது!

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்துக்கு வெவ்வேறு காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் தாண்டி, மனித அலட்சியத்துக்குக் கொடுக்க வேண்டிய விலை எவ்வளவு மோசமானது என்பதையே இவ்விபத்து தீவிரமாக உணர்த்தியிருக்கிறது.

ஜூலை 8 அன்று காலை, செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் வழக்கம்போல பள்ளி வாகனத்தில் பள்ளியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. ரயில்வே கேட்டை மூட வேண்டிய வாயிற்காவலர் ரயில் வரும் நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்ததாகவும், அவரது அலட்சியத்தால்தான் விபத்து நிகழ்ந்தது என்றும் முதற்கட்டத் தகவல்கள் கூறின.

அந்தப் பகுதி மக்களால் தாக்கப்பட்டுக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அவர், கேட்டைத் திறக்கச் சொல்லித் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால்தான் அவ்வாறு செய்ய நேர்ந்ததாகப் பின்னர் வாதிட்டார். தெற்கு ரயில்வே தரப்பும் அப்படித்தான் விளக்கம் அளித்தது. ஆனால், ரயில்வே கேட் திறந்திருந்ததால்தான் அதைக் கடக்க முயன்றதாக வேன் ஓட்டுநர் கூறினார்.

மறுபுறம், செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்தும், மாவட்ட ஆட்சியர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று தெற்கு ரயில்வே கூறியது. அதேவேளையில், விபத்து நிகழ்ந்த ரயில்வே கேட்டில் இன்டர்லாக்கிங் அமைப்பு பொருத்தப்பட்டிருந்தால், இத்தகைய சூழலில் ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கிடைத்து ரயிலை நிறுத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2019ஆம் ஆண்டே ஆளில்லா ரயில்வே கேட்டுகள் என்பதே இல்லை என்னும் நிலை இந்தியாவில் உருவாகிவிட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. எனினும், மனிதத் தவறுகளால் நிகழும் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

ஒடிஷா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் 2023 ஜூன் 2ஆம் தேதி மூன்று ரயில்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் 275க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், ரயில்வே அமைப்பு இயங்குவதில் இருக்கும் சிக்கல்களைப் பட்டவர்த்தனமாக உணர்த்தியது. குறிப்பாக, விபத்தைத் தடுக்கும் ‘கவச்’ அமைப்பு பெரும்பாலான ரயில்களிலும் ரயில் சிக்னல்களிலும் பொருத்தப்படவில்லை என்பது பேசுபொருளானது.

2023 அக்டோபர் 29இல் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நடந்த விபத்துக்கு ‘சிக்னல் ஓவர்ஷூட்டிங்’ (சிவப்பு சிக்னல் போடப்பட்ட பின்னரும், நிறுத்தாமல் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வது) என்பதே காரணமாகச் சொல்லப்பட்டது.

ஒடிஷா விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அளித்த அறிக்கையில், ‘சிக்னலிங் - பராமரிப்பு அமைப்பை மேம்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சர்க்யூட், வயரிங் வரைபடங்களை வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றின் நிலை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

செம்மங்குப்பம் விபத்தைத் தொடர்ந்து, அனைத்து ரயில்வே கேட்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டிருக்கிறார். கூடவே, விபத்துகளைத் தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும், அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில்வே கேட்டுகளிலும் எடுக்கப்பட வேண்டும்.

ரயில் பாதுகாப்புப் பணிகளுக்கான நிதி குறைக்கப்படுவதாகத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) கூறியதை ரயில்வே நிர்வாகம் அலட்சியம் செய்யக்கூடாது. மறுபுறம், ரயில்வே கேட்டுகளைத் திறக்கச் சொல்லி வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுப்பதாக ரயில்வே ஊழியர்கள் முன்வைக்கும் புகாரும் விசாரிக்கப்பட வேண்டும். ரயில் விபத்துகள் மிக மோசமான இழப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், ரயில்வே நிர்வாகம், வாகன ஓட்டிகள் என அனைவரும் ஆபத்தைத் தவிர்க்கும் வகையில் நடந்துகொள்வது மிகமிக அவசியம்!

SCROLL FOR NEXT