யானை வழித்தடங்களின் புதிய பட்டியலை வெளியிடுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும்படி தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது; இவ்விஷயத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஜூலை 25க்குள் தாக்கல் செய்யும்படியும் கூறியுள்ளது. காட்டுயிர் ஆர்வலர்களுக்கு ஆறுதல் அளிக்கும் உத்தரவு இது.
தமிழக முதன்மை வனப் பாதுகாவலர் அளித்த தகவல்படி தமிழகத்தில் 36 யானை வழித்தடங்கள் இருப்பதாக 2023இல் தெரியவந்தது. இதைச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகும் யானை வழித்தடங்களைச் சீரமைப்பதில் ஏன் இன்னும் முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியது.
வழித்தடங்களைச் சீரமைப்பதற்கான நிதியைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் மனித – யானை எதிர்கொள்ளலில் எதிர்மறையான விளைவுகள் நிகழ்வதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிக்கை வெளியிடுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும்படியும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் இருக்கும் யானைகளில் கிட்டத்தட்ட 10% யானைகள் தமிழ்நாட்டில் உள்ளன. 2023ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 2,961 யானைகள் 9,217.13 ச.கிமீ. பரப்பளவில் 26 வன மண்டலங்களில் பரவியிருக்கின்றன. இவற்றில் 20 வன மண்டலங்களில் மனித – யானை எதிர்கொள்ளல் நிகழ்கிறது. யானைகளின் வழித்தடங்களை மனிதர்கள் பயன்படுத்துவதாலும் அழிப்பதாலும் யானைகள் மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகின்றன. 2010 – 2023 வரை தமிழக வனப் பகுதிகளில் 110 யானைகள் பல்வேறு காரணங்களால் கொல்லப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலும் மின்வேலிகளாலும் சட்ட விரோத யானை வேட்டை - துப்பாக்கிச் சூடு போன்றவற்றாலும் நிகழ்ந்துள்ளன. யானை வழித்தடங்களை அழிப்பதில் சட்ட விரோத மணல் குவாரிகளுக்கும் செங்கல் சூளை நிறுவனங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற அமர்வு 2025 ஜனவரி 10 அன்று பிறப்பித்த உத்தரவுக்குப் பதில் அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் ஆட்சியர் அறிக்கை சமர்ப்பித்தார்.
அதன்படி காட்டுப் பகுதியில் சட்ட விரோத மணல் குவாரிகள் அமைத்தது தொடர்பாக 270 வழக்குகள் பதியப்பட்டு, அவற்றில் 100 வழக்குகளில் ரூ. 26.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். காட்டுயிர் பாதுகாப்பு, யானைகளின் வாழ்வாதாரம் உள்ளிட்டவை எந்த அளவுக்குக் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளன என்பதற்கான சான்றாக இதைக் கொள்ளலாம்.
யானை வழித்தடங்களைக் கண்டறிவதற்காகத் தமிழக அரசு அமைத்த குழு, தமிழ்நாட்டில் 42 யானை வழித்தடங்களைக் கண்டறிந்து அதற்கான வரைவு அறிக்கையை 2024இல் வெளியிட்டது. மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் ‘யானைகள் திட்ட’க் குழு வெளியிட்டதைவிட இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு? மத்திய அமைச்சகம் தமிழகத்தில் 20 யானை வழித்தடங்களே உள்ளன எனக் கண்டறிந்திருந்தது.
இத்தகைய சூழலில் அவற்றைப் பராமரிப்பதுடன் மனித – யானை எதிர்கொள்ளலைத் தவிர்ப்பதற்கான செயல்பாடுகளை அரசு தீவிரப்படுத்தி, அது சார்ந்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க வேண்டும். யானைகளை விரோதிகள்போல் பாவிக்காமல் அவற்றின் வாழிடங்களை வளர்ச்சியின் பெயரால் நாம் கையகப்படுத்தியதன் விளைவே இது என்கிற விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும்.
ரயில் மோதி யானைகள் இறப்பது தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகமும் ரயில்வே அமைச்சகமும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
யானை வழித்தடங்களுக்கு இடையே ரயில்பாதை இருக்கும்பட்சத்தில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தல், யானைகளின் நடமாட்டம் இருக்கும் இடங்களை ரயில் ஓட்டுநர்களுக்கு அறிவிக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகள் அமைத்தல், வேகக் கட்டுப்பாடுகளை அமைத்தல் போன்றவற்றை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். யானைகள் போன்ற பேருயிர்களின் பாதுகாப்பில் மத்திய – மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.