தலையங்கம்

கேள்விக்குறியாகும் இலவசக் கல்வித் திட்டம்

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் இலவசக் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு பெற்றோர்களைத் தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை வழங்குவதில் இழுபறி நீடிப்பது இலவசக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) 2010இல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவது ஓர் அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகள் 25% இடங்களை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய சட்டம் இது.

அதாவது, தனியார் பள்ளிகளில் மழலையர் கல்வி முதல் 8ஆம் வகுப்பு வரை ஏழைக் குழந்தைகள் படிப்பது இச்சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 2013 முதல் செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தின் கீழ் 8,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் வரை பூர்த்தி செய்யப்பட்டு வந்தன. இத்திட்டத்துக்குச் செலவாகும் தொகையில் மத்திய - மாநில அரசுகள் 60-40 என்கிற விகிதத்தில் இணைந்து தனியார் பள்ளிகளுக்கு வழங்குகின்றன.

இதில் மத்திய அரசு வழங்கும் நிதி என்பது சமக்ர சிக் ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ.) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு ஏற்காததால், எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கு வழங்கப்படும் மத்திய அரசின் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசின் நிதி கிடைக்காததால், இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்குக் கல்விக் கட்டண நிதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும் 2025-26ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கையையும் தமிழ்நாடு அரசு நிறுத்தியது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ‘கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பொறுப்புகள் மத்திய - மாநில அரசுகளுக்கு உள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.

இதைத் தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை சமக்ர சிக் ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை எனக் கூறாமல் தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசு உரிய நிதியை ஒதுக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 10 அன்று உத்தரவிட்டது.

இருந்தபோதும், தனியார் பள்ளிகளுக்குச் சரிவரக் கல்வி நிதி செலுத்தப்படாததால், 25% இடங்களில் படித்துவரும் ஏழைக் குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்தும்படி பள்ளிகள் நெருக்கடி தருவதாகத் தற்போது தகவல்கள் வெளியாகின்றன. இது இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தை நீர்த்துப்போக வைத்துவிடும்.

ஏழைப் பெற்றோர் மீது, பெரும் சுமை ஏற்றப்படும் அவலம் ஏற்க முடியாதது. எனவே, நீதிமன்றம் உத்தரவிட்டப்படி மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை விரைந்து வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நிலுவை இல்லாமல் நிதி வழங்கி, ஏழைக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை மாநில அரசும் உறுதிப்படுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT