தலையங்கம்

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள்: மனமாற்றம் நிகழாதது ஏன்?

செய்திப்பிரிவு

அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் போன்றவை பொது இடங்களில் அனுமதியின்றிக் கொடிக் கம்பங்களை அமைப்பது தொடர்கதையாகிவரும் நிலையில், இது தொடர்பாக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளும் முழுமையாகப் பின்பற்றப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜனவரி 28இல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அமாவாசை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அந்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து, மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்திருந்தது.

கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்றுவது தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு ஜூலை 2 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான விவரங்கள் அடங்கிய அறிக்கை அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. 19 மாவட்டங்களில், கொடிக் கம்பங்கள் 100 சதவீதம் அகற்றப்பட்டுள்ளன என்றும் சென்னையில் 31 சதவீதம் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பொது இடங்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு வாடகை வசூலித்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், மற்ற இடங்களில் கொடிக் கம்பங்களை முழுமையாக அகற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நான்கு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

இதைக் கேட்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவை 100 சதவீதம் அமல்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். சாலை நடுவில் உள்ள தடுப்புகளில் கொடிக் கம்பங்கள் நடுவதற்கு அரசு ஏன் அனுமதி அளிக்கிறது என்று வினவிய நீதிபதி, அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று உத்தரவை அமல்படுத்துவதற்கு ஜூலை 24ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

அதற்குள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பொது இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தார். கூடவே, ‘மனித உயிர்களுக்கு உரிய மதிப்பு அளிக்க மாட்டீர்களா?’ என்று அரசை நோக்கி நீதிபதி எழுப்பியிருக்கும் கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது.

தங்கள் செல்வாக்கைப் பறைசாற்றிக்கொள்ளும் வகையிலும், விளம்பர நோக்கிலும் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கொடிக் கம்பங்களைப் பொது இடங்களில் வைக்கின்றன. இந்தப் போக்கால் பிறருக்கு ஏற்படும் பிரச்சினைகளை யாரும் பொருட்படுத்துவது இல்லை. 2017இல் கோவையில் சாலையில் வைக்கப்பட்ட அலங்கார வளைவால் ஏற்பட்ட விபத்தில் ரகு என்கிற இளைஞர் உயிரிழந்தார்.

2019இல் சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் போர்டு விழுந்து சுப என்கிற இளம் பெண் மரணமடைந்தார், இவை தொடர்பான வழக்குகளில் இனி ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்க மாட்டோம் என்று சில அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தன. ஆனால், யாரிடமும் முழுமையான மனமாற்றம் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

ஏற்கெனவே நகரச் சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத கொடிக் கம்பங்களையும் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் 2019இல் உத்தரவிட்டது. இப்படி நீதிமன்றங்கள் பல முறை அறச்சீற்றத்துடன் உத்தரவுகளைப் பிறப்பித்தாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் அலட்சியமே தொடர்கிறது. இந்நிலை மாற வேண்டும். அரசுக்கு மட்டுமல்ல, அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் என அனைத்துத் தரப்புக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது!

SCROLL FOR NEXT