தலையங்கம்

இனியும் ஒரு பெண் சிசு கொல்லப்படக் கூடாது

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உமாதேவி, கருவில் இருந்தது பெண் சிசு என்று சொல்லப்பட்டதால், கருக்கலைப்பு செய்ய வேண்டும் என அவரது கணவர் வீட்டினரால் துன்புறுத்தப்பட்ட நிலையில், தனது ஒன்றரை வயதுப் பெண் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைத் தெரிந்துகொண்டு கருவிலேயே கொல்வது பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் அதிகபட்ச வன்முறைகளுள் ஒன்று. இது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமைக்கு எதிரானது.

கலாச்சாரம், சமூக அழுத்தம், பொருளாதார நிலை போன்றவற்றின் காரணமாகத் தங்கள் வயிற்றில் இருக்கும் பெண் சிசுவைச் சட்ட விரோதமாகக் கொல்ல பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் இந்தியா வளர்ந்துவரும் நிலையில், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிய மருத்துவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பெரும் பின்னடைவு.

நம் இந்தியக் குடும்ப அமைப்பில் பெரும்பாலான குடும்பங்களில் ஆணே குடும்ப வாரிசு; ஆணுக்கு மட்டுமே சொத்துரிமை என நம்பப்படுகிறது. குடும்பப் பாரம்பரியத்தின் கண்ணியை ஆண்களே தொடர்கின்றனர் என்றும் பலர் நம்புகிறார்கள். வரதட்சணை கொடுத்துப் பெண்ணை மணம் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், பெண் குழந்தை பிறப்பு என்பது பெரும்பாலான வீடுகளில் பெரும் சுமையாகவே பார்க்கப்படுகிறது. பெண்கள் திருமணம் செய்துகொண்ட பின்னர் வேறொருவர் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள் என்பதால், அவர்களால் குடும்பத்துக்குப் பெரிய அளவில் பொருளாதாரப் பலனோ வேறு வகையான நன்மையோ இல்லை என்கிற லாப – நட்டக் கணக்காக மட்டுமே பெண் குழந்தைகளின் இருப்பு பரவலாகக் கருதப்படுகிறது. இதனால், அவர்களது பிறப்பு விரும்பத்தகாததாக மாறுகிறது. இந்த வெறுப்பு அவர்களின் கல்வி, உணவு, உடல் நலம் போன்றவற்றில் நேரடியாக எதிரொலிக்கிறது.

ஐ.நா. மக்கள் நிதியத்தின் ‘உலக மக்கள்தொகை ஆய்வறிக்கை 2020’இன்படி ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகக் கருவிலோ பிறப்புக்குப் பிறகோ 4 கோடியே 60 லட்சம் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்; கொல்லப்படும் பெண் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் 2023இல் நடத்திய ஆய்வின்படி, பெண் கருக்கொலை - சிசுக்கொலை மிக அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் இருக்கிறது. கருவில் இருக்கும் பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதால் ஆண் - பெண் பாலின விகிதம் குறைந்துவருகிறது. இந்தப் போக்கு, திருமணத்துக்குப் பெண்கள் தட்டுப்பாடு, பெண்கள் மீதான பாலியல் வன்முறை உள்ளிட்ட பெரும் விளைவுகளை ஏற்படுத்துவதோடு சமூகச் சமநிலையின்மையையும் உருவாக்கும்.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவதைத் தடை செய்யும் சட்டம் 1994இல் உருவாக்கப்பட்டது. ஆனால், பல மருத்துவமனைகளில் குழந்தையின் பாலினம் சட்ட விரோதமாகச் சொல்லப்படுகிறது என்பதைத்தான் உமாதேவியின் மரணம் உணர்த்துகிறது. ‘மருத்துவக் காரணங்களுக்காக 24 வாரம் வரை உள்ள கருவைக் கலைக்கலாம்’ என்கிற சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவோரும் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளின் கல்வி, சேமிப்பு, திருமணம் போன்றவற்றுக்காக மாநில அரசுகளும் மத்திய அரசும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவந்தாலும், அவற்றின் நோக்கம் முழுமை அடையவில்லை.

பெண் கருக்கொலைக்கு எதிரான சட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்துவதோடு, பெண் கருக்கொலை குறித்த விழிப்புணர்வை அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும். பெண் குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களது பொருளாதார நிலையை உயர்த்தும் வகையிலும் கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவுகளே சமூகத்தில் மாற்றங்களை விளைவிக்கும். சமூகத்தின் சரிபாதி இனமான பெண்களின் பிறப்பை உறுதிப்படுத்துவது அரசின் தலையாய கடமைகளுள் ஒன்று.

SCROLL FOR NEXT