தலையங்கம்

போதைப் பொருள் வழக்குகள்: கடுமையான தண்டனை அவசியம்!

செய்திப்பிரிவு

தமிழ்த் திரையுலகில் போதைப் பொருள் கலாச்சாரம் நிலவுவது குறித்துப் பூடகமாகப் பேசப்பட்டுவந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் போதைப் பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருப்பது இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. பெரும் பேசுபொருளாகியிருக்கும் இந்த வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டால்தான், இத்தகைய குற்றங்களை முழுமையாகத் தடுக்க முடியும் என்கிற குரல்களும் எழுந்திருக்கின்றன.

போதைப் பொருள் கடத்தல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்கள் என்றும், போதைப் பொருள் வைத்திருப்பவர் பற்றி ஒருவர் அறிந்திருந்தும் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறினால் அதுவும் குற்றமாகக் கருதப்படும் என்றும் காவல் துறை தெரிவிக்கிறது. ஆனால், சமூகத்தில் போதைப் பொருள் புழக்கத்தையும் பழக்கத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல, தெலுங்குத் திரையுலகம், இந்தித் திரையுலகம் போன்றவற்றிலும் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாகப் பூடகமான செய்திகள் நிலவுவது உண்டு. ஆனால், அது வழக்காக மாறுவது அரிது. இத்தகைய சூழலில், கடந்த மே மாதம், சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு மதுபானக் கூடத்தில் நடந்த தகராறு தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் சமீபத்திய விவகாரமே வெளியில் வந்திருக்கிறது.

கைதான எட்டுப் பேரில் ஒருவரான அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மீது கொலை முயற்சி, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. அவருக்கும் பிரதீப் என்பவரின் தலைமையிலான குழுவுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரித்தபோதுதான் போதைப்பொருள் பரிமாற்றம் குறித்த தகவல் தெரியவந்தது.

இதன் வலைப்பின்னல் திரையுலகப் பிரபலங்கள் வரை நீள்வதாகத் தெரியவந்த நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். பின்னர், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவும் கைதுசெய்யப்பட்டார். கோகெய்ன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை இந்தக் கும்பல் பயன்படுத்தியும் விற்பனை செய்தும் வந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்த வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இதில் தொடர்புடைய மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் எனக் காவல் துறை தெரிவிக்கிறது. பொதுவாகவே, இதுபோன்ற வழக்குகளில் முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் அடிபட்டாலும், விசாரணையில் பெரிய முன்னேற்றம் இருப்பதில்லை. பரபரப்பாகப் பேசப்பட்ட பல செய்திகள் காலப்போக்கில் மறக்கடிக்கப்படுவதும் இயல்பாகிவிட்டது.

இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் செல்வாக்கு, பணபலம் போன்ற அம்சங்கள் குறித்துப் பரவலாகப் பேசப்படுவதால் இதுபோன்ற விவகாரங்கள் குறித்து மக்களும் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. அதன் காரணமாக, இப்படியான வழக்குகளில் சிக்கினாலும், ஏதேனும் ஒரு வழியில் தப்பித்துவிடலாம் என்கிற எண்ணம் சாமானியர்களுக்கும் வந்துவிடுகிறது.

அவர்களும் இந்த விஷ வலையில் விழுந்து வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். குறிப்பாக, இளம் தலைமுறையினர் - பள்ளி மாணவர்கள் உள்பட – போதைப் பொருள் பழக்கத்துக்குப் பரிச்சயமாகும் அபாயம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் பின்விளைவாக, குற்றச்செயல்களும் பெருகிக்கொண்டே வருகின்றன. போதைப் பொருள் தொடர்பான குற்ற வலைப்பின்னல் உலக நாடுகள் முதல் உள்ளூர் சந்து வரை பல்வேறு முடிச்சுகளைக் கொண்டிருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் இருந்து ஏறக்குறைய ரூ.11,311 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இப்படியான சூழலில், வெளிநாடுகளிலிருந்து போதைப் பொருள்கள் இந்தியாவுக்குள் கடத்திவரப்படுவதை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டியதும் அவசியம்.

மேலிடத்து விவகாரம் என்கிற பதத்துடன் இத்தகைய வழக்குகள் கிடப்பில் போடப்படாமல், தவறிழைத்தவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டால்தான் போதைப் பொருள் கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முடியும். ஆட்சியாளர்கள் இதில் அலட்சியம் காட்டக் கூடாது!

SCROLL FOR NEXT