சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் நகை திருட்டுப் புகாரின்பேரில் காவல் துறையால் விசாரணை செய்யப்பட்டு, சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குற்றஞ்சாட்டப்படுபவரைச் சித்திரவதை செய்வது உள்படப் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவதாகக் காவல் துறை தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகிவருவது, மக்களிடையே அத்துறை மீது அச்சத்தையும் அவநம்பிக்கையையுமே ஏற்படுத்தும்.
மடப்புரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் காவல் பணியில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (27). அவரோடு சிலர், கோயிலுக்கு வந்த ஒரு குடும்பத்திடமிருந்து நகைகளைத் திருடியதாக ஜூன் 27 அன்று குற்றம் சாட்டப்பட்டனர். மறுநாள் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரித்து அனுப்பப்பட்ட அஜித்குமாரை மானாமதுரை உட்கோட்டத் தனிப்படையினர் மீண்டும் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அஜித்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல், மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடல் கூறாய்வு செய்யப்பட்டது.
அஜித்குமாரைத் தனிப்படையினர் வெவ்வேறு இடங்களுக்குக் கூட்டிச் சென்று சித்திரவதை செய்து கொன்றுவிட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் சாலை மறியல் செய்தனர். இதில் தொடர்புடைய காவல் துறையினரைக் கைது செய்ய வேண்டும் எனவும் இழப்பீடாகத் தங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அஜித்குமார் குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.
காவல் துறையினரின் சமாதான முயற்சிகளுக்குப் பின்னர், அஜித்குமாரின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை குறித்து திருப்புவனம் காவல் துறை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. தனிப்படையைச் சேர்ந்த ஆறு பேரைக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்.
அதிமுக வழக்கறிஞர் பிரிவின் முறையீட்டின்பேரில், இந்த சம்பவத்தைத் தானாக முன்வந்து விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ‘அஜித்குமார் பயங்கரவாதியா? அவர் ஆயுதம் எதுவும் வைத்திருக்காதபோதும் கடுமையாகத் தாக்கப்பட்டது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கெனவே நடந்ததாகக் கூறப்படும் இத்தகைய மரணங்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில், திருவள்ளூர் கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த கர்ப்பிணி உள்பட மூன்று பெண்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல, சென்னை எம்கேபி நகரில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட நான்கு சிறுவர்கள் தங்கள் தலைமுடியில் பல நிறங்களில் சாயம் ஏற்றியிருந்ததற்காக, காவல் ஆய்வாளர் வலுக்கட்டாயமாக அவர்களை முடிதிருத்தகத்துக்கு அனுப்பி மொட்டை அடித்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து அந்த ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது நிகழ்த்தப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலைய வன்முறையையும் அக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த காவல் துறை அத்துமீறல் ஒவ்வொன்றும் எப்படி எல்லாம் அரசியலாக்கப்பட்டது என்பதையும் தற்போதைய நிகழ்வு நினைவூட்டுகிறது.
யார் ஆட்சிக்கு வந்தாலும், தாங்கள் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற மனநிலையில் பெருமளவு காவல் துறையினர் இருப்பது மட்டும் தொடர்கிறது. அண்மையில், திருவள்ளூர் களாம்பாக்கத்தைச் சேர்ந்த காதல் ஜோடியை மிரட்ட காதலனின் தம்பியான சிறுவனைக் கடத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவரைப் பணியிடை நீக்கம் செய்ததை விலக்கிக்கொள்ள மறுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. ஏடிஜிபி மீதான நடவடிக்கையில் பின்வாங்காமல் இருந்தது அரசின் உறுதிப்பாட்டைக் காட்டியது. இதே உறுதி, காவல் துறை சம்பந்தப்பட்ட அனைத்து அத்துமீறல்களிலும் காட்டப்பட வேண்டும். இப்படிப்பட்ட சூழலுக்கான காரணங்கள் குறித்துத் தமிழக அரசு தீவிர சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.