தலையங்கம்

திறமைக்கு வாய்ப்பளிக்கும் ‘பிரதிபா சேது’ திட்டம்

செய்திப்பிரிவு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் நேர்காணல் வரை தேர்ச்சி பெற்றாலும் வேலைவாய்ப்பைப் பெற முடியாதவர்களுக்காக ‘பிரதிபா சேது’ என்கிற திட்டத்தை அறிவித்திருக்கிறது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி).

குடிமைப் பணித் தேர்வுகளில் இறுதிக் கட்டம்வரை சென்றும் பணி வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது பாராட்டுக்குரியது. இதே நோக்கத்துக்காக 2018இல் அறிமுகப்படுத்தப்பட்ட பொது வெளிப்படுத்துதல் திட்டம்தான் (Public Disclosure Scheme) தற்போது ‘பிரதிபா சேது’ திட்டமாக விரிவாக்கப்பட்டுள்ளது.

நிர்வாகப் பணிகளுக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் குடிமைப் பணித் தேர்வுகள், மற்ற தேர்வு முகமைகள் நடத்துகிற தேர்வைக் காட்டிலும் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு ஆகிய மூன்று கடினமான நிலைகளைக் கொண்டிருப்பதும் வினாத்தாள் கசிவு - குளறுபடி, தேர்வுக்கு முந்தைய-பிந்தைய நிலைகளில் நிகழும் முறைகேடுகள் போன்ற பிரச்சினைகள் குறைவாக இருப்பதுமே இதன் நம்பகத்தன்மைக்குக் காரணங்கள். மிகக் கடினமான கட்டங்களைத் தாண்டி, இறுதிக் கட்டத்தை எட்டும் அனைவருமே திறமையானவர்கள்.

ஆனால், ஆளுமைத்திறன் தேர்வில் மிகக் குறைவான புள்ளிகளில் வாய்ப்பைத் தவறவிடுகிறவர்கள் மீண்டும் அடுத்த ஆண்டுத் தேர்வுக்கோ அல்லது தேர்ந்தெடுக்கப்படும் வரையோ காத்திருக்க வேண்டும். இது அவர்களை மனதளவில் சோர்வடைய வைத்து, வேலைவாய்ப்பு குறித்த நிச்சயமின்மையை நோக்கித் தள்ளுவதோடு, போட்டித் தேர்வுகள் மீதான அவநம்பிக்கையையும் அவர்களிடம் ஏற்படுத்தக்கூடும்.

காரணம், குடிமைப் பணித் தேர்வுகள் அத்தகைய உழைப்பைக் கோருபவை. தேர்வர்களைக் கலக்கமுற வைக்கும் இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும்விதமாகவும் இறுதிவாய்ப்பு வரை காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டும் ‘பிரதிபா சேது’ திட்டம் செயல்படுத்தப்படும் என்பது நம்பிக்கை அளிக்கிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தகவல்படி 2024இல் ஐந்து லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை எழுதினர். அவர்களில் 14,627 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தேர்வாகினர். அவர்களில் 2,845 பேர் ஆளுமைத்திறன் தேர்வுக்குத் தேர்வாகி, இறுதியாக 1,009 பேர் பணி வாய்ப்பைப் பெற்றனர்.

ஆளுமைத் திறன் தேர்வுக்குத் தேர்வான அனைவருமே மிகக் கடினமான தேர்வுநிலைகளைக் கடந்துவந்த தகுதிவாய்ந்த நபர்கள் என்கிற நிலையில் அவர்களது திறன், உற்பத்திச் சந்தைக்கு உடனடியாகப் பலனளிக்காமல் போவது வருந்தத்தக்கதே. ஆண்டு முழுவதும் தேர்வுக்காக உழைத்துச் சில புள்ளிகள் வித்தியாசத்தில் வாய்ப்பை நழுவவிடும் இவர்களது அறிவுத்திறனை அங்கீகரிக்கும் வகையில், இப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருப்பது நல்ல முன்னெடுப்பு.

இந்தத் திட்டத்தின்படி யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்றவர்களைப் பற்றிய தகவல்கள் மத்தியத் தொழிலாளர் - வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தோடு இணைந்த தேசிய வேலைவாய்ப்பு முகமை தளத்தில் பதிவேற்றப்படும். தகுதிவாய்ந்த தொழில் நிறுவனங்கள் இதில் பதிவுசெய்து பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

யுபிஎஸ்சி மூலம் தேர்வில்லாமல் நிரப்பப்படும் மத்திய அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனப் பணியிடங்கள் போன்றவற்றிலும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்கள் அனைவருமே பல்வேறு கட்டத் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்கள் என்பதால், தொழில் நிறுவனங்களின் வழக்கமான நேர்காணலுக்கும் தேர்வுகளுக்கும் தேவை இருக்காது என்பதும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம்.

நிர்வாகப் பொறுப்புடன் சமூக அக்கறை கொண்ட பணிகளில் சேர வேண்டும் என்பதற்காகத்தான் பலரும் யுபிஎஸ்சி தேர்வை எழுதுகிறார்கள். சில புள்ளிகள் குறைவதால் அவர்களைத் தனியார் துறைகளின் பக்கம் மடைமாற்றிவிடும் திட்டமாக இது சுருங்கிவிடாமல், அரசு கவனத்துடன் செயல்படுவதும் அவசியம்.

SCROLL FOR NEXT