அரசு ஊழியர்களும் பொதுமக்களும் சட்டத்தை மதிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஐஏஎஸ் அதிகாரிகளே தொடர்ச்சியாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாவது ஏமாற்றம் அளிக்கிறது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல. கடலூர் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கூடம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தைப் பள்ளி நிர்வாகம் காலி செய்ய வேண்டும் எனவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவின் ‘ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாடு பிரிவு’ சார்பாக வழக்குத் தொடுக்கப்பட்டது.
அப்போது, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஏற்கெனவே பள்ளி நிர்வாகம் 2009இல் மனு தாக்கல் செய்து, மாற்று இடம் வழங்கப்படுவதற்கான நீதிமன்ற ஆணையை 2019இல் பெற்றுள்ளதாகக் கூறினார். மாற்று இடத்துக்கான திட்டம் ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், ஆறு மாதங்களுக்குள் இடத்தை ஒதுக்கீடு செய்யும்படி உத்தரவிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தது.
ஓராண்டைக் கடந்த பின்னரும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாததால், மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் 24 அன்று தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதற்காக மாவட்ட ஆட்சியர் முதல் வருவாய்த் துறைச் செயலாளர் வரைக்கும் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என உத்தரவிட்ட அமர்வு, ஜூலை 10க்கு வழக்கைத் தள்ளிவைத்துள்ளது.
ஏற்கெனவே ஐஏஎஸ் அதிகாரி அன்ஷுல் மிஸ்ராவுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக ஒரு மாதச் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்ட சம்பவம், ஆட்சி நிர்வாகத்தின் மீதான கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. சென்னை நெசப்பாக்கம் அருகே சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (சிஎம்டிஏ) பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்பட்ட தங்களது நிலம் 20 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாததால் அதை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கும்படி 2003இல் அதன் உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.
நிலத்தின் முழுப் பகுதியையும் பெறுவதற்காக உரிமையாளர்கள் 2023இலும் 2024இலுமாக இரண்டு முறை வழக்குத் தொடுக்க வேண்டியிருந்தது. ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த அன்ஷுல் மிஸ்ரா பிப்ரவரி, 2025இல் மாற்றலாகும் வரை உரிமையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
2024 ஆம் ஆண்டு வழக்கு குறித்து மே 22 அன்று நடந்த விசாரணையில், அன்ஷுல் மிஸ்ராவுக்கு மேல்முறையீடு செய்யும் உரிமையோடு ஒரு மாதச் சிறைத்தண்டனையும் சொந்த நிதியிலிருந்து செலுத்த வேண்டிய அபராதத்தையும் நீதிபதி பி.வேல்முருகன் விதித்தார். அன்ஷுல் மிஸ்ரா மேல்முறையீடு செய்ததால் சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பான ஒரு வழக்கில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, தற்போதைய தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் ஆகியோரும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, உயர் நீதிமன்றத்துக்கு நேரில் சென்று பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அரசு அதிகாரிகள் இத்தகைய சட்ட நெருக்கடிகளைத் தவிர்க்க வேண்டும் எனத் தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் சேவைக்குத் தடையாக இருக்கும் காரணிகளை அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் களைவதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு. அதிகாரிகளுக்கு வரும் அரசியல் இடைஞ்சல்களும் தடுக்கப்பட வேண்டும். அரசு அலுவலர்கள் தங்கள் பணியைக் காலதாமதம் இன்றிச் செய்தால், ஆட்சியாளர்களுக்கு அதைவிடச் சிறந்த பரப்புரை தேவைப்படாது.