தலையங்கம்

விண்வெளி நாயகன் ஷுபன்ஷு: இந்தியாவின் பெருமிதம்!

செய்திப்பிரிவு

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ‘ஃபால்கன் 9’ ஏவூர்தி மூலம் வெற்றிகரமாகப் புறப்பட்டிருக்கிறார் ஷுபன்ஷு சுக்லா. ரஷ்ய விண்கலமான சோயுஸ் மூலம் 41 ஆண்டுகளுக்கு முன் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றதற்குப் பிறகு, ஷுபன்ஷு சுக்லா தற்போது விண்வெளிக்குச் சென்றுள்ளார். அது மட்டுமல்லாமல், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் (ஐ.எஸ்.எஸ்.) செல்லும் முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்று, இந்தியாவின் பெயரை விண்வெளி நிலையத்தில் பதித்திருக்கிறார்.

முதலில் மே 29இல் புறப்படத் திட்டமிட்டிருந்த ‘அக்ஸியம் 4’ விண்வெளிப் பயணம், உகந்த வானிலை இல்லாதது, தொழில்நுட்பக் கோளாறு எனப் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுத் தற்போது வெற்றிகரமாகப் புறப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் தளபதி (கமாண்டர்) நாசாவின் பெகி வைட்சன். இவர் ஐ.எஸ்.எஸ்ஸின் முதல் பெண் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது. போலந்தின் ஸ்வாவோஸ் உஸ்னைஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

இந்தப் பயணத்தின் குழுத் தலைவராக - விமானியாக ஷுபன்ஷு செயல்படுகிறார். விண்வெளி நிலையத்தில் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்குத் தங்கப்போகும் ஷுபன்ஷு, எட்டு வகையான பரிசோதனைகளைச் செய்து பார்க்க இருக்கிறார். உயிரி மருத்துவம், பூமியைக் கண்காணித்தல், பருப்பொருள் அறிவியல் துறைகள் சார்ந்து இந்த ஆராய்ச்சிகள் அமையும்.

2027இல் நிகழவுள்ள இந்தியாவின் முதல் நேரடி விண்வெளிப் பயணமான ககன்யானுக்கு முன்னோட்டமாக இந்தப் பயணம் நிகழ்ந்துள்ளது. அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு வீரர்களில் ஒருவரே உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷுபன்ஷு. நாசா, முன்னதாக ரஷ்யாவின் ககாரின் பயிற்சி நிறுவனம், பெங்களூரு இஸ்ரோ பயிற்சி மையம் ஆகியவற்றில் ஷுபன்ஷு பயிற்சி பெற்றிருந்தார். ககன்யான் பயணத்துக்கு நாசா, ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மஸ் உடனான கூட்டுறவு தொடரும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

‘அக்ஸியம் 4’ பயணம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது, அனைத்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே. இதில் ஜூன் 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டதற்குக் காரணமாக இருந்த வாயுக் கசிவு குறித்து இஸ்ரோ முன்னெச்சரிக்கை விடுத்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. விண்வெளித் துறை சார்ந்த நமது அறிவியல் வளர்ச்சி உண்மையிலேயே மெச்சத்தகுந்ததாக இருக்கிறது என்பதற்கு இதுவும் உதாரணம். விக்ரம் சாராபாய், ஜவாஹர்லால் நேரு போன்றோர் கண்ட கனவு இன்று நனவாகி வருகிறது.

எலான் மஸ்க்கின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் வழியாகவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஷுபன்ஷு சென்றிருக்கிறார். இதற்காக 550 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனப் பயணமாக இருப்பதால்தான் இந்தியா, போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளின் வீரர்கள் விண்வெளிக்குச் செல்வது சாத்தியப்பட்டுள்ளது என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. அதேநேரம் நிலவு, மற்ற கோள்கள், அவற்றின் நிலவுகளில் இருக்கும் அரிய கனிமங்கள், உலோகங்களை எடுப்பதற்கான போட்டியாகவே தனியார் விண்வெளி நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுகின்றன.

உண்மையில், நட்பு நாடுகளின் ஒத்துழைப்பால் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் விண்வெளிக்கும், ஐ.எஸ்.எஸ்ஸுக்கும் சென்று திரும்பியிருக்கிறார்கள். இதுவரை 1998இல் 17 நாடுகளின் ஒத்துழைப்பால்தான் சர்வதேச விண்வெளி நிலையமே நிறுவப்பட்டது.

இதுவரை 23 நாடுகளைச் சேர்ந்த 285 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகள் இடையிலான இந்த ஒத்துழைப்பும் கூட்டுறவும் தொடர வேண்டும்.

மாறாக, தனியார் விண்வெளி நிறுவனங்கள் முதன்மை பெறுவதை அரசு அமைப்புகள் கவனத்துடனே அணுக வேண்டும். விண்வெளியும் சூரிய மண்டலத்தின் மற்ற கோள்களும் உலகச் சொத்து, சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு அவை செல்வதைவிட, அரசுகளின் கூட்டுக் கட்டுப்பாட்டில் இருப்பதே சரியானது.

SCROLL FOR NEXT