சென்னை பெரம்பூரில் தண்ணீர் லாரி ஏறியதால் பள்ளிச் சிறுமி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த விபத்துக்குப் பிறகு காலை, மாலை வேளைகளில் வாகனக் கட்டுப்பாடுகளை சென்னை மாநகரக் காவல் ஆணையர் அறிவித்துள்ளார். ஆனால், போக்குவரத்துக் காவலர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்ய ஓர் உயிரிழப்பு தேவைப்படுகிறது என்பது கவலையளிக்கிறது.
சென்னை கொளத்தூர், பொன்னியம்மன்மேடு தெருவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி செளமியா, ஜூன் 18 அன்று தாயாருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது, பேப்பர் மில்ஸ் சாலையில், பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதால் உயிரிழந்தார். பெற்றோர் கண் முன்னே ஒரு குழந்தை உயிரிழப்பது, வாழ்நாள் முழுவதும் பெற்றோருக்கு வேதனையைத் தரக்கூடியது.
இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நெரிசல் மிகுந்த காலை நேரத்தில் தண்ணீர் லாரியை அனுமதித்த செம்பியம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், புளியந்தோப்பு போக்குவரத்துக் காவல் உதவி ஆணையர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவை எல்லாமே ஓர் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைகள் என்றே கருத வேண்டியிருக்கிறது.
இந்த விபத்துக்குப் பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது; பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் காவலர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்; காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
சென்னை கோவிலம்பாக்கத்தில் 2023இல் தாயுடன் பள்ளிக்குச் சென்ற 10 வயதுப் பள்ளி மாணவி லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னரும் இப்படியான சம்பவங்கள் தொடர்வதுதான் வேதனை. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில் ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் நெரிசல் மிகுந்த நேரத்தில் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
என்றாலும், இந்த உத்தரவைப் போக்குவரத்துக் காவலர்கள் மீறுவது அல்லது செயல்படுத்தாமல் அலட்சியமாக இருப்பது போன்றவை இதுபோன்ற விபத்துகள் ஏற்படக் காரணமாகின்றன. பள்ளிகள் அமைந்துள்ள சாலைகளில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைச் சிரத்தையுடன் கடைப்பிடித்தால் விபத்துகளைத் தடுக்க முடியும்.
அதிவேகமாக ஓட்டும் தண்ணீர் லாரி ஓட்டுநர்கள், தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்குக் கட்டுப்பாடு தேவை. அதேவேளையில், உத்தரவுகள் பிறப்பிப்பதால் மட்டுமே மாற்றம் வந்துவிடாது. சென்னையில் தண்ணீர் லாரிகள் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்றன. எனவே, பள்ளி நேரத்தில் லாரிகளை இயக்காமல் இருப்பது குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்களுடன் காவல் துறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மேலும், சாலை விபத்துகளுக்குக் குண்டும் குழியுமான சாலைகள் ஒரு முக்கியக் காரணம். இதுபோன்ற சாலைகளில் நெரிசல் மிகுந்த நேரத்தில் அடிக்கடி பிரேக் பிடித்து ஓட்டுவதன் மூலம் வாகன ஓட்டிகள் சமநிலையை இழக்கும் அபாயம் உண்டு. இது தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தும். எனவே, உள்ளாட்சி அமைப்புகள் குண்டும் குழியுமான சாலைகளை உடனுக்குடன் சீரமைப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
பள்ளிக்குக் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பு பெற்றோருக்கும் உண்டு. போக்குவரத்து விதிகளை மீறாமல் வாகனங்களைப் பெற்றோர் இயக்க வேண்டும். சிறு குழந்தைகளைப் பின்னால் உட்கார வைப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். எல்லாருடைய ஒத்துழைப்பின் மூலமே இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும்.