தலையங்கம்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஒலிப்பது எப்போது?

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தமிழ் மொழியில் வாதாடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளார். கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்ட நிலையை நீதிமன்றங்களில் அனுபவிக்கும் லட்சக்கணக்கான மக்களின் குரல் என்றே இதைக் கூறலாம்.

ஆங்கிலம் மட்டுமே உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் வாதாடுவதற்கான மொழியாக இருப்பது தற்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஆங்கிலேயர் கால நடைமுறைகளில் ஒன்று. இந்திய அரசமைப்புச் சட்டம், மக்களின் தற்சார்பு உரிமையையும் நாட்டின் பன்முகத்தன்மையையும் கருத்தில் கொண்டு ஆங்கிலத்தோடு உள்நாட்டு மொழிகளிலும் வாதாட அனுமதிக்கிறது.

இச்சட்டத்தின் 348(2) பிரிவின்படி, குடியரசுத் தலைவரின் அனுமதியோடு, ஒரு மாநிலத்தின் அலுவல் மொழியை அங்குள்ள உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக மத்திய அரசு அங்கீகரிக்க முடியும் எனச் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். 1950இலேயே மத்திய அரசின் ஒத்துழைப்போடு உயர் நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்திவிட்டது ராஜஸ்தான் அரசு. பிற்காலத்தில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களிலும் உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

1997இல் மேற்கு வங்காளம், கொல்கத்தா உயர் நீதிமன்ற மொழியாக வங்காளத்தையும் அங்கீகரிக்கும்படி அப்போதைய ஐக்கிய முன்னணி தலைமையிலான மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. அதை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்ப, அங்கு அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆங்கிலேயர் காலத்திலேயே ஆட்சி நிர்வாகம் தொடர்புடைய ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது தொடங்கிவிட்டது. உதாரணமாக, நீதிமன்ற உத்தரவுகளையும் இந்தியக் குற்றவியல் சட்டத்தையும் நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழில் மொழிபெயர்த்து எழுதியதோடு, வழக்குகளைத் தாய்மொழியில் நடத்தவும் வலியுறுத்தினார். உயர் நீதிமன்ற மொழியாகத் தமிழ் ஆக வேண்டும் என்பது தமிழகத்தில் ஏறக்குறைய 100 ஆண்டுகளாக உயிர்ப்புடன் விளங்கும் கோரிக்கை எனலாம்.

2006இல் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, உயர் நீதிமன்ற மொழியாகத் தமிழும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். கூட்டணிக் கட்சியாக இருந்தும் திமுகவின் கோரிக்கையை, மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு நிராகரித்தது. இத்தகைய சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோரிக்கையைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பிவருகிறார்.

உச்ச நீதிமன்றம்/உயர் நீதிமன்ற நீதிபதிகள் பன்முகத்தன்மை நிலவும் வகையில் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் நியமிக்கப்பட வேண்டும்; உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களிலும் அமைக்கப்பட வேண்டும்; உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழும் அமைய வேண்டும் என 2023இல் மதுரையில் ஒரு நிகழ்வில் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மத்திய சட்டத் துறை அமைச்சர் முன்னிலையில்கூட ஸ்டாலின் வலியுறுத்தினார்.

கடந்த வாரம் தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிலும் வழக்காடு மொழி தொடர்பான கோரிக்கையை ஸ்டாலின் விடுத்துள்ளார். கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது; தீர்ப்புகள் தமிழ் மொழியில் கிடைக்கின்றன. எனினும் மேல்முறையீடு என்று வரும்போது, இந்தியச் சமூகம் உச்ச நீதிமன்றத்தையும் உயர் நீதிமன்றங்களையும்தான் சார்ந்திருக்கிறது. அங்கும் தங்கள் மொழியிலேயே வழக்காடும் சூழல் அவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும். மத்தியில் உள்ள பாஜக அரசு, தமிழகத்தின் நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு வலுசேர்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT