சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கும் நிலையில், அதற்கான பங்களிப்பைத் தரும் அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் அடிப்படைக் கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டிய நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்களும் செவிலியர்களும் நியமிக்கப்பட வேண்டும்; ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் நடத்தியுள்ள பாதயாத்திரைப் போராட்டம் அவர்களின் கையறு நிலையையே வெளிப்படுத்துகிறது.
‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இன்னுயிர் காப்போம்’, ‘இதயம் காப்போம்’, ‘பாதம் பாதுகாப்போம்’ உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக, மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் திறந்துவருவதும் பாராட்டுக்குரியது.
அதேவேளையில், இவை சரியாகச் செயல்பாட்டுக்கு வருவதற்குப் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்களும் செவிலியர்களும் இருப்பது இன்றியமையாதது. ஆனால், பல மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்பதே கள நிலவரம்.
உதாரணமாக, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு துறையில் 31 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 8 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. சேலம் அம்மாபேட்டை அரசு மருத்துவமனை திறக்கப்பட்டு 16 மாதங்கள் ஆகியும், அங்கு மருத்துவர்கள் நியமனம் செய்யப்படாததால் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து தினமும் 8 மருத்துவர்கள் இந்த மருத்துவமனைக்கு அயல் பணியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்; புதிதாகத் திறக்கப்பட்ட திருநெல்வேலி கண்டியப்பேரி அரசு மருத்துவமனையிலும் இதே நிலைதான் எனக் கூறப்படுகிறது.
இதனால் பொது மருத்துவம், மகப்பேறு துறை, குழந்தைகள் நலம் உள்ளிட்ட அடிப்படையான துறைகளில் சேவைகள் தடைபட்டு, அரசு மருத்துவமனைகளைச் சார்ந்துள்ள ஏழை எளிய மக்களே பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவர்களுக்கு அரசாணை எண் 354இன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது மு.கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோரிக்கைதான். அவரை முன்னுதாரணமாகக் கொண்டுள்ள தற்போதைய திமுக ஆட்சியில், இந்தக் கோரிக்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்ந்து புறக்கணிப்பது புரியாத புதிராகவே உள்ளது.
கரோனா தொற்றுக் காலத்தில் பணிபுரிந்து உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பது, ஓர் அரசின் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது. அக்காலக்கட்டத்தில் மக்களுக்காகப் பணியாற்றி உயிரிழந்த சேலம் அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், அரசு அதைச் செயல்படுத்தாமல் இருப்பதும் சரியல்ல. இத்தகைய புறக்கணிப்புகள், பேரிடர்களின்போது அரசு மருத்துவர்கள் - செவிலியர்கள் தங்கள் அர்ப்பணிப்பு உணர்வை எதிர்காலத்தில் கைவிடும் சூழலை உருவாக்கும்.
19,000 அரசு மருத்துவர்கள் சார்பில் இம்மூன்று கோரிக்கைகளுக்காகப் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தியுள்ள அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு, அண்மையில் பாதயாத்திரைப் போராட்டத்தை அறிவித்தது. அதன்படி, ஜூன் 11 அன்று சேலம் அருகில் உள்ள மேட்டூரிலிருந்து நடைப் பயணமாகவே எட்டு மருத்துவர்கள் கிளம்பி ஜூன் 19 அன்று சென்னையை வந்தடைந்தனர்.
இப்படித் தங்கள் கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் நெடும் நடைப்பயணம் மேற்கொள்வது நாட்டிலேயே இதுதான் முதல்முறை எனப்படுகிறது. அவர்கள் காவல் துறையின் அனுமதி பெற்றிருந்தாலும், தேனாம்பேட்டையில் தடுக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர்.
அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் இதே கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
தற்போது முதல்வர் பொறுப்பில் இருக்கும் அவர், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது முரணாக இருக்கிறது. மருத்துவத் துறை சார்ந்த நல்ல பணிகளுக்கு இடையே, அரசின் இத்தகைய போக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. உயிரைக் காக்கும் மருத்துவர்களின் குரல்களுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்!