சாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையைப் பிறப்பிக்கும்படி தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது தொடர்பாக வருவாய்த் துறையினருக்குத் தமிழ்நாடு அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பது, சாதி, மத அடையாளங்களைத் துறப்போருக்கு உதவுவதாக அமையும். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்குச் சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
ஆனால், இந்த வழக்கில் சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் எந்த உத்தரவும் இல்லை என அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கெனவே திருப்பத்தூர், கோவை, அம்பத்தூர் தாசில்தார்கள் சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ்கள் வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டி, சந்தோஷுக்கும் அதுபோல் சான்றிதழை வழங்க உத்தரவிட்டது.
மேலும், சாதிரீதியிலான பாரபட்சத்தைத் தடுக்க வேண்டும் எனப் பலரும் போராடிவரும் நிலையில், தனக்கு சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ் கோருவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டிப் பாராட்டினர். மேலும் சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர். இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வழிவகுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ் கோருவது தமிழ்நாட்டில் புதிய விஷயம் அல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளன. ஆனால், சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதை அரசு ஒரு வாதமாக முன்வைக்கத் தவறுவதில்லை.
ஏற்கெனவே, 2019இல் வேலூரைச் சேர்ந்த சிநேகா பார்த்திபராஜா இதற்கான சான்றிதழைப் பெற்றிருக்கிறார். பின்னர், கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் தன்னுடைய மூன்றரை வயதுக் குழந்தைக்குச் சாதி, மதம் இல்லை என்கிற சான்றிதழைப் பெற்றுள்ளார். இதுபோன்ற முன்னுதாரணங்களை வைத்துதான் தற்போது சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க உரிய அரசாணையைப் பிறப்பிக்கும்படி உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
மேலும், 1973, 2000ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி, பள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மதம் குறிப்பிடாமல் காலியாக விடலாம் என்கிற நடைமுறை உள்ளது. எனவே, தமிழக அரசு இதுபோன்ற சான்றிதழ்களை வழங்குவது குறித்து வருவாய்த் துறைக்கு உத்தரவுப் பிறப்பிக்க முடியும்.
மேலும் சாதி, மத அடையாளத்தை இந்தியக் குடிநபர் துறப்பதைத் தவறு என்றும் சொல்ல முடியாது. அப்படி ஒரு குடிநபர் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ள முனையும்போது, இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் சலுகைகளை அவர் இழக்க நேரிடும் என்பதை அறிந்துவைத்திருப்பார் என்பதையும் மறுப்பதற்கில்லை.
எனவே, உயர் நீதிமன்றப் பரிந்துரைப்படி இந்தச் சான்றிதழ்களை வழங்க அரசு முனைப்புக் காட்ட வேண்டும். இது, சாதி, மதம் அற்றவர் என்று பிரகடனப்படுத்திக்கொள்ள விரும்பும் குடிமக்களின் தனிமனிதச் சுதந்திரத்தைக் காப்பாற்றவும் வழிவகுக்கும்.