தலையங்கம்

திரையரங்குக் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டுவது எப்போது?

செய்திப்பிரிவு

விதிமுறைகளை மீறிக் கூடுதலான நுழைவுச்சீட்டுக் கட்டணம் திரையரங்குகளால் வசூலிக்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, திரைப்படம் என்னும் பொழுதுபோக்குக்காக மக்கள் அளவுக்கு மீறிச் செலவழிக்க வேண்டிய கட்டாயம் இனியாவது மாறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

புதிய படங்கள் வெளியாகும் முதல் நான்கு நாள்களுக்குத் திரையரங்குகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக 2017இல் ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். குறிப்பாக, அந்தச் சமயத்தில் வெளியான ‘விவேகம்’ படத்துக்குச் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் அதைப் பார்வையாளர்களுக்குத் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 9 அன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர், திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விற்பனை குறித்துச் சோதனையில் ஈடுபடுவதற்குக் குழுக்களை ஏற்கெனவே அரசு உருவாக்கியிருப்பதாகக் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், “அரசு குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயித்த பின்னர், திரையரங்குகள் அதை மீறக் கூடாது. அத்தகைய மீறல்கள் குறித்துப் புகார்கள் அளிக்கப்படுகையில், அரசுக் குழுக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வழக்கை முடித்து வைத்தார். மேலும், திரைப்படங்களை ஓடிடி தளங்களில் பார்ப்பதற்கு ஆதரவு பெருகிவரும் சூழலில் திரையரங்குகளுக்கான வாய்ப்பு குறைந்துவருவதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கவும் அவர் தவறவில்லை.

புகார்தாரர் ஜி.தேவராஜன் 2015இலிருந்தே இந்தப் பிரச்சினைக்காகச் சட்டப் போராட்டம் நடத்திவருகிறார். ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’, விஜய் நடித்த ‘பைரவா’, சூர்யா நடித்த ‘சிங்கம்-3’ படங்கள் வெளியானபோது குறிப்பிட்ட சில திரையரங்குகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடுத்திருந்தார்.

இவரது ஒரு மனுவை 2016இல் விசாரணை செய்த உயர் நீதிமன்றம், அதிகபட்சக் கட்டணம் ரூ.120; ஐமேக்ஸ் திரையரங்குகளில் கட்டணம் ரூ.480 ஆக இருக்க வேண்டும் எனவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டறிய அரசு பறக்கும் படைகளை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது கவனிக்கத்தக்கது.

2017இல் இவரது இன்னொரு மனுவை விசாரித்தபோது, கூடுதல் கட்டணம் தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை, பறக்கும் படைகளின் சோதனை விவரங்கள், சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிகழ்நிலை அறிக்கை (ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்) தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படித் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையின் மூலம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கண்டறியப்படும் திரையரங்கம் 1,000 ரூபாய் மட்டுமே அபராதம் செலுத்தித் தப்பித்துக்கொள்வது தெரியவந்தது.

வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் மக்களுக்குத் திருப்பி அளிக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்றொரு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 2023இல் அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தனிநபர் ஒருவரின் பிரச்சினையாக அரசு கடந்து செல்ல முடியாது. ஒவ்வொரு மனுவின்போதும் நீதிமன்றம் அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருக்கிறது.

ஒரு திரைப்படம் வெளியாகும் தேதியை ஓடிடி தரப்பு முடிவுசெய்யும் அளவுக்கு இன்றைக்கு ஓடிடியின் செல்வாக்கு உள்ளது. திரைப்படங்களை அனுமதி இன்றித் தரவிறக்கம் செய்து பார்ப்பதும் அதிகரித்துள்ளது. இப்படியான ஒரு சூழலில், முழுமையான திரைப்பட அனுபவத்துக்காகத் திரையரங்கைத் தேடி வரும் ஒரு குடும்பத்துக்கு அரங்க உரிமையாளர்கள் உண்மையாக இருக்க வேண்டும். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்றோரும் இதில் மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.

SCROLL FOR NEXT