அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த அறிவுத் தேடல், கருப்பொருள் வாசிப்பு வாரம் ஆகியவை செயல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மத்தியில் பாடப்புத்தகம் சாராத புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும் பள்ளி நூலகங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதும் இதன் நோக்கங்கள் என்பதால், இந்த முன்னெடுப்பு சிறப்புக் கவனம் பெறுவதில் வியப்பில்லை.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. அவற்றில் ஒரு திட்டமான ‘வாசிப்பு இயக்கம்’ சார்பாக, கடந்த ஆண்டு 127 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இந்தப் புத்தகங்களோடு அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையிலும் வருடம் முழுமையும் வாசிப்புச் செயல்பாட்டை மேற்கொள்ளும் வகையிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், நாடகம், குழு விவாதம், பட்டிமன்றம் போன்றவை அரசுப் பள்ளிகளில் வாரம்தோறும் நடத்தப்பட்டு, மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்படுத்தப்படும் எனத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார். அதை உள்ளடக்கியதாகவும் இந்த அரசாணை அமைந்திருக்கிறது.
இதைச் செயல்படுத்தும் வகையில் பருவம், மாதம், வாரம், வகுப்புவாரியான திட்டங்களை வகுக்கும்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனத்துக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பாக நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
வகுப்புவாரியாக உருவாக்கப்படும் அட்டவணையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசத் தலைவர்கள், இயற்கை வளப் பாதுகாப்பு, உடல்நலம், நல்லொழுக்கம், உறவுகளைப் பேணுதல் போன்றவற்றை மையப்படுத்திய பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளதாக அரசு குறிப்பிட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
பள்ளி வளாகத்துக்குள்ளேயே மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாவது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்துவரும் சூழலில், மாணவர்களின் பார்வையை விசாலமாக்கிச் சமூக அக்கறையும் நல்லொழுக்கமும் கொண்டவர்களாக அவர்களை மாற்றும் வகையில் இந்தத் தலைப்புகள் அமைந்திருக்கின்றன.
பாடப் புத்தகங்களை நன்கு கற்றறிந்து தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதும், பாடம் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்வதும் ஒவ்வொரு மாணவருக்கும் அடிப்படையான தேவை. அதேவேளையில், பாட அறிவையும் தாண்டி சமூகம், வரலாறு, சுற்றுச்சூழல், இலக்கியம் போன்றவை சார்ந்து வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் அதை வளர்த்தெடுப்பதும் ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை நிச்சயம் வளமிக்கதாக மாற்றும்.
எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவையும் தர்க்க அறிவையும் வளர்த்துக்கொள்ளப் பல்வேறு வகையிலான புத்தகங்களை வாசிப்பது அவசியம். அதை அரசே முன்னெடுத்து ஊக்குவிப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. அதேவேளையில், கற்றலிலும் வாசிப்பிலும் சமநிலை பேணப்படுவது அவசியம். தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் பொதுவான கற்றல் திறன், வாசிப்பு, கணிதத்திறன் போன்றவை 2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2024இல் அதிகரித்துள்ளதாகக் கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை 2024 (ASER) தெரிவித்துள்ளது.
ஆனால் அதேநேரம், மேற்கண்ட வகைகளில் கற்றல் அடைவுகள் (learning outcome) கவலைக்குரிய வகையிலேயே உள்ளன என்பது கவனத்துக்குரியது. இந்தப் பின்னணியில் கற்றலில் பின்தங்கிய குழந்தைகளையும் உள்ளடக்கியதாக அறிவுத் தேடல் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். பாடப் புத்தகங்களை வாசிக்கவே சிரமப்படும் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பு சுமையாகிவிடாத வகையில் ஆக்கபூர்வமாகத் திட்டமிடுவதும் அவசியம்.