தலையங்கம்

அரசு சேவை இல்லங்கள்: பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும்

செய்திப்பிரிவு

அரசு சேவை இல்லத்தில் 13 வயதுச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், இத்தகைய காப்பகங்களில் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஏழை எளியவர்கள் அரசை மட்டுமே நம்பி அடைக்கலம் தேடும் இடங்களில், குற்றங்கள் அச்சமின்றி அரங்கேறும் சூழல் நிலவுவதைத் தமிழக அரசு ஓர் இழிவாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவற்றவர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள், சில சமூகக் கொடுமைகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் போன்றோருக்காகத் தமிழகச் சமூக நலத் துறையின்கீழ் அரசு சேவை இல்லங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள பெண் குழந்தைகள் 12ஆம் வகுப்பு வரைக்கும் பயில முடியும். கைவிடப்பட்ட பெண்கள், தங்கள் குழந்தைகளையும் இல்லத்தில் வளர்க்க அனுமதிக்கப்படுகின்றனர். தங்குமிடம் மட்டுமல்லாமல், உணவு, சுகாதாரம் - மருத்துவ வசதிகள், வேலைவாய்ப்புக்கான கூடுதல் பயிற்சி ஆகியவையும் அரசால் வழங்கப்படுகின்றன. இத்தகைய அரசு சேவை இல்லங்கள் தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் உள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமி, சென்னை தாம்பரத்தில் உள்ள சேவை இல்லத்தில் தங்கியிருந்தவர். அருகில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். ஜூன் 7 அன்று காலையில் அவரை ஒருவர் தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். சிறுமியின் அலறலைக் கேட்டு மற்றவர்கள் வந்ததும், அந்த நபர் ஓடிவிட்டார். பாலியல் தாக்குதலுக்கு முயன்ற நபர், சேவை இல்லத்தின் பாதுகாவலரான மேத்யூ (49 வயது) என்பது சிசிடிவி பதிவுகள், சிறுமியின் வாக்குமூலம் மூலமாகத் தெரியவந்துள்ளது.

காலில் எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்குக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள சிறுமி, தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சிறுமி தந்தையை இழந்தவர்; ஐந்து நாள்களுக்கு முன்புதான், அவரது தாய் சேவை இல்லத்தில் இவரைச் சேர்த்திருக்கிறார். குடும்ப நிலைமை காரணமாக ஏற்கெனவே மன இறுக்கத்தில் இருந்திருக்கக்கூடிய இந்தச் சிறுமியின் கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடிப்பதுபோல இந்தச் சித்திரவதை நிகழ்ந்துள்ளது.

பெண்களும் குழந்தைகளும் தங்கியுள்ள இடத்தில் எந்தத் தடையும் இன்றி ஒருவர் எப்படி நடமாட முடிந்தது, சிறுமி எளிதில் வன்முறைக்கு உள்படுத்தப்படும் அளவுக்குத் தனிமையில் விடப்பட்டது எப்படி, போதுமான எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியில் உள்ளனரா, பாதுகாவலருக்கு இந்த அளவுக்குத் துணிச்சல் எப்படி வந்தது, அவர் வேறு யாரிடமாவது இப்படி நடந்துகொண்டுள்ளாரா, இல்லத்தின் நிர்வாகிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா எனப் பல கேள்விகள் இந்தச் சம்பவத்தையொட்டி எழுகின்றன.

பாதுகாவலர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியவர்களே இத்தகைய தாக்குதலிலிருந்து மனரீதியாக மீண்டு வரப் பல நாள்கள் ஆகும் நிலையில், 13 வயதுச் சிறுமியான இவருக்குக் கூடுதல் பராமரிப்பும் மனநலப் பராமரிப்பும் அளிக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தை அடுத்து, அனைத்து அரசு சேவை இல்லங்களிலும் பெண் பாதுகாவலர்களையே நியமிக்க உள்ளதாகத் தமிழகச் சமூகநலன் - மகளிர் உரிமைத் துறையின் அமைச்சர் பெ.கீதாஜீவன் கூறியுள்ளார். இல்லத்தின் மற்ற குழந்தைகளிடம் அதிகாரிகள் பேசியதாகவும், வேறு புகார்கள் எதுவும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

சமூகநலக் கண்ணோட்டத்தோடு நீண்ட கால ஆய்வுகளின் அடிப்படையில் அரசு சேவை இல்லங்கள் போன்ற அமைப்புகள் நிறுவப்படுகின்றன. இங்கு நிகழ்த்தப்படும் குற்றங்கள், அமைப்புகளின் நோக்கத்தையே தடம்புரளச் செய்துவிடும். அரசு இல்லங்களிலேயே குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகும்போது, தனியார் தங்கும் விடுதிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைத் தார்மிகரீதியில் அரசு இழந்துவிடுகிறது என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.

SCROLL FOR NEXT