தலையங்கம்

நாடாளுமன்றக் குழுக் கூட்டங்கள் வெற்றுச் சம்பிரதாயம்தானா?

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் உள்ள மக்களின் குரல் ஒலிக்க வேண்டிய இடமான நாடாளுமன்றத்தில், முதன்மையான அமைப்புகளாக நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் இயங்கிவருகின்றன. ஆனால், அவற்றின் கூட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களே பங்கேற்பது, நாளடைவில் நிலைக்குழுக்களை வெற்றுச் சம்பிரதாய அமைப்புகளாக ஆக்கிவிடும் என இந்திய அரசமைப்புச் சட்ட ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சட்டம் இயற்றுவதும் அதை அமல்படுத்தும் நிர்வாகப் பிரிவை மேற்பார்வை செய்வதும் இந்திய நாடாளுமன்றத்தின் தலையாய பணிகளாக அரசமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. அதை நடைமுறையில் கொண்டுவருவதற்கான ஒரு வழிமுறையாக நாடாளுமன்றம் பல்வேறு வகையான குழுக்களைக் கொண்டுள்ளது.

குறிப்பிட்ட மசோதா சட்டமாக இயற்றப்படுவதற்கு முன், அதன் நிறை குறைகளை மக்கள் சார்பாக இந்தக் குழுக்கள் விவாதிக்கும். நாடாளுமன்றக் குழுக்கள் குறிப்பிட்ட தேவைக்காக உருவாக்கப்பட்டுக் கலைக்கப்படுவதும் உண்டு; தொடர்ந்து செயல்படுவதும் உண்டு. இவற்றின் உறுப்பினர்களை நாடாளுமன்றம் நியமிக்கவோ, தேர்ந்தெடுக்கவோ செய்யும்.

நிலைக் குழுக்கள் (standing committees), அவற்றில் ஒருவகை. துறை சார்ந்த நிலைக் குழுக்கள் மொத்தம் 24 உள்ளன. மக்களவையிலிருந்து 21 பேரும் மாநிலங்களவையிலிருந்து 10 பேருமாக மொத்தம் 31 உறுப்பினர்கள் ஒவ்வொரு நிலைக் குழுவிலும் இடம்பெறுவார்கள். நாடாளுமன்றத்தில் பேசப்படும் முக்கியமான பிரச்சினைகளை நிலைக் குழுக்கள் ஆய்வுசெய்யும்.

இதற்கான கூட்டங்கள் நடைபெறும்போது, அவற்றில் உறுப்பினராக உள்ள எம்.பி-க்கள் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதன் மூலம் பிரச்சினைகளுக்குப் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பிரதிபலிக்கக்கூடிய தீர்வுகளை நாடாளுமன்றம் வழங்க முடியும். ஆனால், நிலைக் குழுக்களின் கூட்டங்களில் குறைவான எண்ணிக்கையிலான உறுப்பினர்களே பங்கேற்பதாக மக்களவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வருகைப் பதிவேட்டுத் தரவுகள் கூறுகின்றன.

நடப்பாண்டில் ஏறக்குறைய 60% பேர் மட்டுமே நிலைக் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். கிராமப்புற மேம்பாட்டுக் குழுக் கூட்டத்திலும் ரயில்வே குழுக் கூட்டத்திலும் 12 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். வேளாண்மை, பாதுகாப்பு, ரசாயனம் மற்றும் உரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கச் செயல்பாடுகள் ஆகியவை குறித்த குழுக்களின் கூட்டங்களில் சராசரியாக 15 பேர் கலந்துகொண்டனர். இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடனான கூட்டத்தில் 24 பேர் கலந்துகொண்டனர்.

குறைந்த அளவிலான பங்கேற்பு, நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் குறித்த விவாதங்களைச் சுருக்கி, அவற்றை மக்களின் விருப்பங்களுக்குத் தொடர்பே இல்லாதவையாக ஆக்கிவிடும். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட 17ஆம் மக்களவையில் சிறிது காலம் நிலைக் குழு ஏதும் உருவாக்கப்படாததால், நாடாளுமன்றத்தில் 22 மசோதாக்கள் விவாதமே இன்றி இயந்திரகதியில் நிறைவேற்றப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. இப்போது நிலைக் குழுக்கள் இருந்தாலும், அவற்றின் உறுப்பினர்கள் கூட்டங்களைப் புறக்கணிப்பது ஆரோக்கியமானதல்ல.

30 பேருக்கு 11 பேர் கலந்துகொள்வது இக்கூட்டங்களுக்கான குறைந்தபட்சப் பங்கேற்பாக (Quorum) கருதப்படுகிறது. ஆனால், பங்கேற்பாளர் எண்ணிக்கை எப்போதுமே குறைந்தபட்சமாக நீடிப்பது ஜனநாயக அமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள், கூட்டங்களுக்காக அடிக்கடி டெல்லிக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், இத்தகைய பணிகளையும் மேற்கொள்பவராகத்தான் தங்கள் பிரதிநிதியைத் தொகுதி மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்பதை அரசியல் கட்சியினர் மறந்துவிடக் கூடாது.

SCROLL FOR NEXT