ராகிங் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டிருப்பது, வரவேற்கத்தக்கது. கல்லூரிகளில் புதிய வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில், யுஜிசியின் இந்த உத்தரவு நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கையாகும்.
அண்மைக் காலமாகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங் தொடர்பான புகார்கள் அதிகரித்துவருகின்றன. 2022 - 2024 காலக்கட்டத்தில், நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் 51 ராகிங் மரணங்கள் பதிவாகியுள்ளதாக ‘கல்வியில் வன்முறைக்கு எதிரான சங்கம்’ (சேவ்) நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்தது.
இதில் 38.6% மரணங்கள் மருத்துவக் கல்லூரிகளில் நிகழ்ந்திருக்கின்றன. இதேபோல ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவலின்படி 2012 முதல் 2023 வரை நாட்டில் 78 ராகிங் தற்கொலைகள் / மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தில் ராகிங் புகார்களும் 208% அதிகரித்திருக்கின்றன. அதாவது, யுஜிசியின் பிரத்யேக உதவி எண்ணில் 8,000-க்கும் அதிகமான ராகிங் புகார்கள் பதிவாகியுள்ளன.
ராகிங் என்பது உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் செயல். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சீனியர் - ஜூனியர் மாணவர்கள் இடையேயான மோதல், ஆட்சேபனைக்கு உரிய ஆதிக்கம், காதல், பாலியல் பிரச்சினைகள் போன்றவற்றை முன்வைத்தே ராகிங் நடப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தீவிரமான பிரச்சினையாகக் கருதப்படும் ராகிங்கை ஒழிக்கும் வகையில் ராகிங் தடுப்புச் சட்டங்களைப் பல்வேறு மாநில அரசுகளும் ஏற்கெனவே இயற்றியிருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நாவரசு படுகொலைக்குப் பிறகு, 1997இல் தமிழ்நாடு அரசு ராகிங் தடுப்புச் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டுவந்தது.
மகாராஷ்டிரம், ஆந்திரம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ராகிங் தடுப்புச் சட்டங்கள் அமலில் உள்ளன. கூடவே, 2001இல் ராகிங்கைத் தண்டனைக்குரிய குற்றமாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது, திருப்புமுனையாக அமைந்தது. ராகிங் தடுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவும் 2009இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பிறகு யுஜிசி விதிமுறைகள், வழிகாட்டுதல்களின்படி கல்லூரிகளில் ராகிங் எதிர்ப்பு உதவி மையம், ராகிங் செய்வதைத் தடுப்பதற்கான விதிமுறைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் உயர் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம் ராகிங் புகார்களும் குறைந்தன. ஆனால், நாடு முழுவதும் குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் ராகிங் புகார்கள் தலைதூக்கியுள்ள நிலையில், ராகிங் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும்.
எந்த ஒரு குற்றத்தையும் தடுக்கச் சட்டங்களை அமல்படுத்துவதும், விதிமுறைகளை வகுப்பதும் மட்டுமே தீர்வாகிவிடாது. இது ராகிங்குக்கும் பொருந்தும். தொடர்ச்சியாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது, மாணவர்களிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்துவது, பாதிக்கப்படும் மாணவர்கள் எந்த இடையூறும் இன்றிப் புகார்களை கொடுக்க வழிவகை செய்வது, மாணவர் விடுதிகளில் திடீர் சோதனைகள் நடத்துவது போன்றவை ராகிங்கைத் தடுக்க உதவும்.
மேலும், ராகிங் தொடர்பாக மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகங்கள் அவ்வப்போது கலந்துரையாடல் நடத்த வேண்டும். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களையும் ஈடுபடுத்த வேண்டும். அறிக்கைகள் பெறுவது, புகார்களைப் பதிவுசெய்வதோடு நின்றுவிடாமல், ராகிங் இல்லாத சூழலை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள யுஜிசி முன்வர வேண்டும். இவ்விஷயத்தில் அனைத்துத் தரப்பினரும், தொடர்ச்சியான விழிப்புணர்வுடன் ஒத்துழைப்பை வழங்கினால், ராகிங் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!