கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில், ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. ஐபிஎல் வரலாற்றில் 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி கோப்பையை வென்றது ஒரு முக்கியத் தருணம்தான் என்றாலும், அந்த அணியினர் பெங்களூரு திரும்பியதும் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் கூடியது இந்த அசம்பாவிதத்துக்கு வழிவகுத்திருக்கிறது. ஜூன் 4 அன்று ஆர்சிபி அணி
ஊர் திரும்பிய கையோடு சட்டமன்றத்துக்குச் சென்று முதல்வரைச் சந்திப்பது என்று திட்டமிடப்பட்டது. பின்னர், சின்னசுவாமி கிரிக்கெட் மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்வுக்கு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. உண்மையில், அணியின் வெற்றிப் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பெங்களூரு போக்குவரத்துக் காவல் துறை சார்பில் ஜூன் 4 அன்று காலையிலேயே தெரிவிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், மாலை 5 மணிக்கு வெற்றிப் பேரணி நடத்தப்படும் என மாலை 3.14 மணி அளவில், ஆர்சிபி அணி தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்தது பெரும் கூட்டம் குவிய வழிவகுத்தது. இணையம் மூலம் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், மைதானத்திலேயே வழங்கப்படும் என மாற்றி அறிவிக்கப்பட்டது; அனுமதிச் சீட்டை வாங்குவதற்காக நேரடியாக ரசிகர்கள் குவியத் தொடங்கினர் எனக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
விளையாட்டு அரங்கத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் விட்டத்துக்குள் 50,000க்கும் மேற்பட்டோர் கூடியதும், அவர்களில் பலர் வாயிற்கதவுகளைத் தள்ளித் திறக்க முற்பட்டதும் இந்த அசம்பாவிதத்துக்கு வழிவகுத்ததாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். 35,000 பேர் மட்டுமே செல்லக்கூடிய மைதான அரங்குக்கு வெளியே 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கூடியதாகத் தெரியவந்திருக்கிறது.
கோப்பையை வென்ற அணியின் பெயரைச் சொல்லி முழக்கமிட்டபடி வாயிற் கதவையும், சுற்றுச்சுவரையும் தாண்டிக் குதிக்க ஏராளமானோர் முயற்சி செய்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தத் தடியடி நடத்தப்பட்டதும், ரசிர்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துக் கூட்ட நெரிசலுக்கு இன்னொரு காரணமாகிவிட்டது.
இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் கூறுவதை முழுமையாக ஏற்க முடியாது. இன்றைய சூழலில், இப்படியான நிகழ்வுகளுக்கு மக்கள் உணர்வுபூர்வமாகப் பெருந்திரளாகக் கூடுவது இயல்பு.
அதை அனுமானித்து அதற்கேற்ற ஏற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும். உயிரிழந்தவர்களில் இளைஞர் களும் மாணவர்களும்தான் அதிகம். ஆக, பொது இடங்களில் கூட்டங்கள் கூடும் நிகழ்வுகளில் எவ்வளவு கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும், எவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
திரையரங்குகள், ரயில் நிலையங்கள், ஆன்மிக நிகழ்வுகள் எனப் பொது இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் குவியும்போது, கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நேரும்போது இரங்கல் அறிக்கை வெளியிடும் அரசியல் தலைவர்கள், சுய பாதுகாப்பு குறித்த பிரக்ஞை இன்றிக் கூட்ட நெரிசல் கொண்ட நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பதைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. ஆன்மிகம், அரசியல், விளையாட்டு, சினிமா என எதுவாக இருந்தாலும், அளவு கடந்த மோகம், தனிமனித வழிபாடு, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின்மை போன்றவை ஆபத்துக்கு வழிவகுக்கும் என்கிற புரிதல் மக்களிடம் வர வேண்டும்.
கூட்ட நெரிசல் மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் பெரும்பாலும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டுத் தண்டனை பெறுவது மிகவும் அரிது. பொது இடங்களில் பாதுகாப்புடன் நடந்துகொள்வது மக்களின் கடமை. அதேநேரம், பாதுகாப்பை உறுதிசெய்வது அரசின் மிகப் பெரிய பொறுப்பு!