சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் ஒரு நடவடிக்கையாக மக்களின் குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்துவது தொடர்கதையாகவே நீடிக்கிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூரில் வசித்துவந்த ஏறக்குறைய 600 குடும்பங்களைத் தமிழக அரசு அண்மையில் அங்கிருந்து வெளியேற்றியுள்ளது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட அனகாபுத்தூரில் காயிதே மில்லத் நகர், காந்தி நகர், மூகாம்பிகை நகர் போன்ற பகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் போன்றவர்களின் குடும்பங்களே வசித்துவருகின்றன. இவர்களின் வீடுகளும் கடைகளும் அடையாறு கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு கடந்த மே மாதத்திலிருந்து வெவ்வேறு கட்டங்களாக அவற்றை இடித்து அப்புறப்படுத்தி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், சென்னையின் மையப் பகுதியிலிருந்த மக்களுக்கு, கண்ணகி நகர், துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள அரசு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் இடம் அளிக்கப்பட்டதுபோல, அனகாபுத்தூரைச் சேர்ந்த 600 குடும்பங்கள் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கத்துக்கு இடம்பெயர அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.17 லட்சம் மதிப்புள்ள குடிசை மாற்று வாரிய வீடும் உதவித்தொகையாக ரூ.30 ஆயிரமும் அரசால் வழங்கப்படுகின்றன.
மேற்கண்ட பகுதிகளில் தாங்கள் ஏறக்குறைய 40-50 ஆண்டுகளாக வசிப்பதாகக் கூறும் அனகாபுத்தூர் மக்கள், அரசின் நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்படப் பல கட்சிகள், மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளன.
ஒரு நகரத்தின் உண்மையான வளர்ச்சிக்கு ஆக்கிரமிப்புகள் தடையாக உள்ளதால், அவை அகற்றப்படுவது தவிர்க்க முடியாத நடவடிக்கையே. குறிப்பாக ஆறு, ஏரி, கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டுவது நீர்நிலைகளின் இயற்கையான போக்கில் குறுக்கீடாக இருப்பது மட்டுமல்லாமல், பெருமழை வெள்ளங்களின்போது அந்த வீடுகளில் வசிப்பவர்களைப் பேரிழப்புகளுக்கும் உள்ளாக்குகிறது.
எனினும், இந்தக் கறாரான விதிமுறை அதே விதமான ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெருவணிக வளாகங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா என்கிற கேள்வி ஒவ்வோர் அரசு நடவடிக்கையின்போதும் தவறாமல் எழுகிறது.
ஆற்றங்கரையில் இருப்பதாலேயே மழைக்காலம்தோறும் தவறாமல் வெள்ளப்பெருக்கில் சிக்கும் பல பகுதிகள், அரசு ஒப்புதல் பெற்றவையாக இருப்பதையும் காண முடிகிறது. அடித்தட்டு மக்களுக்கு ஓர் அணுகுமுறை; பொருள்வசதி கொண்டவர்களுக்கு இன்னோர் அணுகுமுறை என்கிற பாரபட்சம்தான் இத்தகைய சட்ட நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் கோபத்தையும், எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இடத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு மின் இணைப்பு, நியாயவிலைக் கடை அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை தடையின்றி வழங்கப்படும் நிலை, சம்பந்தப்பட்ட மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.
ஆட்சியாளர்கள் திடீரென ஒரு நாள், ஆக்கிரமிப்பைச் சுட்டிக்காட்டி அவர்களை வெளியேற்றுகையில் கையறுநிலைக்கு உள்ளாகின்றனர். எனவே, இத்தகைய ஆக்கிரமிப்புகளைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதுகூட, அரசு, மக்கள் ஆகிய இரு தரப்புக்குமே பல்வேறு சிரமங்களைத் தவிர்க்கும்.
மாற்றுக் குடியிருப்புக்காக அரசு கைகாட்டும் இடத்தில் அனைவருக்கும் வீடு கிடைக்குமா என்கிற அச்சம் மக்களை அதிருப்தி அடையச் செய்கிறது. தமிழக அரசு, அனைவருக்கும் வீட்டை உறுதிப்படுத்துவதோடு, அவற்றின் கட்டுமானத் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இயற்கையைப் பேணுவதற்கும் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் திறன்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) ஆவதற்கும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இடம் மாற்றப்படும் மக்களின் நலன்களையும் உள்ளடக்கியதாக இருப்பதே உண்மையான வளர்ச்சி.