தலையங்கம்

தாமதிக்கப்படாத நீதி!

செய்திப்பிரிவு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, கடந்த 2024 டிசம்பர் 23 அன்று நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாலியல் வல்லுறவு உள்ளிட்ட 11 பிரிவுகளிலும் ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், எவ்விதத் தண்டனைக் குறைப்பும் சலுகையும் இன்றிச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கண்டிப்பாக வலியுறுத்தியிருக்கும் இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்படும் பெண்கள் துணிந்து புகார் தெரிவிக்கலாம் என்கிற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் மாதம் இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்குத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதும் இந்த வழக்கில் திறம்பட விசாரணையை மேற்கொண்ட மூன்று ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் செயல்பாடும் பாராட்டுக்குரியவை.

இந்த வழக்கின் ஆரம்பத்தில் மாணவியின் புகாரைப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு, பிறகு மாணவர்கள், மாதர் சங்கத்தினர் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னால் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட ஞானசேகரன் ஆளும் கட்சி ஆதரவாளர் என்றும் இந்தக் குற்றத்தில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றன. ஞானசேகரனைக் கைதுசெய்வதிலும் காவல் துறை முனைப்புக் காட்டவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பொதுவெளியில் கசியவிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவியின் அடையாளம் வெளியானதால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடுசெய்யும் வகையில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போதைய தீர்ப்பில் இதைச் சுட்டிக்காட்டியிருக்கும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி, ‘இந்த இழப்பீடு எஃப்.ஐஆர். கசிவுக்கு மட்டுமே; மாணவியின் மீது நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்கொடுமைக்கு அவர் இழப்பீடு கோரலாம்’ என அறிவித்திருப்பது முன்மாதிரியான தீர்ப்பு.

இந்த வழக்கில் ஞானசேகரனை மட்டுமே குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. ஆனால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழக வளாகத்தில் எவ்விதக் கண்காணிப்பும் தடுப்பும் இன்றி, இரவு நேரத்தில் ஞானசேகரன் நுழைந்தது குறித்துப் பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. பல ஆண்டுகளாக இதுபோன்ற குற்றங்களில் அவர் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சிசிடிவி கேமரா அமைப்பது, போதுமான எண்ணிக்கையில் பாதுகாவலர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது. ஆனால், பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குறைபாடு குறித்து எவ்வித விவாதமும் எழவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

வாச்சாத்தி வன்கொடுமை, பொள்ளாச்சி சம்பவம் போன்ற வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி பெறப் பல ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது. இந்த வழக்கில் எதிர்க்கட்சிகள், சமூக ஊடகங்களின் தொடர் அழுத்தத்தால்தான் இவ்வளவு விரைவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி பெறுவதற்குச் சமூக அழுத்தமும் தொடர் போராட்டமும் தேவை என்பது சட்டத்தின் மீதான சாமானியர்களின் நம்பிக்கையை நீர்த்துப்போக வைத்துவிடும். அதேபோல் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுவதில் அரசின் நிலைப்பாடும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால், பாதிக்கப்படும் மக்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை.

SCROLL FOR NEXT