கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.ஐ.) சார்பில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையில், சில விளக்கங்களை இந்தியத் தொல்லியல் துறை கேட்டிருப்பது விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது. இதுதொடர்பாக அரசியல்ரீதியாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய அரசும், ஏ.எஸ்.ஐ.யும் மறுத்திருக்கின்றன. என்றாலும் இதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தேவையற்ற ஊகங்களுக்கு வித்திட்டிருப்பதைப் புறந்தள்ள முடியாது.
மதுரையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி தொல்லியல் தலத்தை 2014இல் ஏ.எஸ்.ஐ. கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்டறிந்தார். 2014 -2017 காலத்தில் மூன்று கட்டங்களாக ஏ.எஸ்.ஐ. அகழாய்வு மேற்கொண்டது.
அதன் பின்னர், மாநிலத் தொல்லியல் துறைதான் தொடர்ந்து அகழாய்வு மேற்கொண்டுவருகிறது. இங்கு கிடைத்த பொருள்களின் மூலம் தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என்பதும் தெரியவந்திருக்கிறது. இதில் 2014-15, 2015-2016 காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் 982 பக்கங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை, 2023 ஜனவரியில் ஏ.எஸ்.ஐ.யிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தார். அது தொடர்பாகச் சில கேள்விகளுடன் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கே அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டிருப்பதுதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
விளக்கம் கேட்கும் நடவடிக்கை, தமிழர் நாகரிகத்தைப் புறக்கணிக்கும் செயல் என்று அரசியல்ரீதியாக ஏ.எஸ்.ஐ.யும் மத்திய அரசும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால், இதை மறுத்துள்ள ஏ.எஸ்.ஐ., ஆய்வறிக்கையை மேலும் நம்பகத்தன்மையாக்கவே நிபுணர்கள் சில கேள்விகளை எழுப்பியிருப்பதாக விளக்கம் அளித்திருக்கிறது. மத்திய அரசும் ஏ.எஸ்.ஐ.-யின் விளக்கத்தைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
எந்த ஓர் ஆய்வறிக்கையின் மீதும் நிபுணர்கள் கேள்வி எழுப்புவதும், அதையொட்டி மேலதிகத் தகவல்களைப் பெற்று அறிக்கையைச் செம்மைப்படுத்துவதும் இயல்பான நடவடிக்கைதான். இதில் தொல்லியல் துறை மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. ஆனால், இதில் ஏற்பட்டுள்ள காலதாமதம்தான் ஊகங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
கீழடி அகழாய்வு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.எஸ்.ஐ. தொடங்கிய ஆய்வு. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, கேள்விகள் எழுப்பப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணன் முதல் இரண்டு ஆய்வறிக்கையை எழுதுவதற்கே ஏ.எஸ்.ஐ.க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருந்தது.
அதன் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையையொட்டிக் கேள்விகள் எழுப்புவதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகளை ஏ.எஸ்.ஐ. எடுத்துக்கொண்டிருக்கிறது. எனவே, கீழடி அகழாய்வு அறிக்கையை ஏ.எஸ்.ஐ. வெளியிட ஆர்வம் காட்டவில்லை என்று முன்வைக்கப்படும் விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை.
ஏற்கெனவே 2004இல் தொடங்கிய ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2021இல்தான் வெளியிடப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பிட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழாய்வு என்பது அந்தப் பிராந்திய நாகரிகத்தை மட்டும் எதிரொலிப்பதில்லை.
அது உலக அளவில் இந்திய நாகரிகத்தை உயர்த்திப் பிடிக்கவும் அவசியம். எனவே, ஏ.எஸ்.ஐ. அகழாய்வு தொடர்பான ஆய்வு முடிவுகளைக் காலதாமதம் இல்லாமல் வெளியிட முன்வர வேண்டும். அந்த வகையில், கீழடி குறித்த ஆய்வறிக்கையை விரைந்து வெளியிட ஏ.எஸ்.ஐ. நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே, தேவையற்ற விமர்சனங்கள் எழுவதைத் தடுக்க உதவும்.